இந்துதர்மம் என்பது இந்திய தர்மம். அதாவது பாரத மண்ணில் தோன்றிய பல்வேறு வகைப்பட்ட வழிகள், மார்கங்கள், சமயங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் என எல்லாமே இந்துதர்மம் என்று குறிப்பிடப்படுகின்றன. உண்மையில் எல்லா வழிகளும் தர்மத்தையே அடிப்படையாக கொண்டு விளங்குகின்றன. ஆதலால் அனைத்தும் இந்துதர்மம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. நான்கு வேதங்கள் வேதமொழியிலும் ஏனைய இந்துதர்ம நூல்கள் பாரதமண்ணின் பழம்பெரும் இருமொழிகளான தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அமைந்துள்ளன.
இந்துதர்ம நூல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை: ஸ்ருதி மற்றும் ஸ்மிரிதி.
1) ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டது.
2) ஸ்மிரிதி என்றால் நினைவில் கொள்ளப்பட்டது.
* ஸ்ருதி வகை நூல்கள் தான் மிகவும் சான்றுவலிமை மிக்கவை; அதிகாரப்பூர்வமானவை; மனிதரால் உருவாக்கப்படாதவை (அபௌருஷெயம்) மற்றும் இறைவனிடமிருந்து பெறப்பட்டவை. நான்கு வேதங்களும் அதன் உள்ளடக்கமான சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகம் மற்றும் உபநிஷத்துகள் இந்துதர்ம ஸ்ருதி வகை நூல்கள் ஆகும். இவை தொன்றுதொட்டு மரபுவழியாக குருசிஷ்ய முறையில் பேணிக் காக்கப்பட்டவை. இவற்றில் சிறு மாற்றங்கள் நேர்ந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆகையால் இவை மாசுப்படாமல் தூய்மையான நிலையில் உள்ளன. அதனால் தான் சனாதன தர்மத்தில் ஸ்ருதிவகை நூல்களுக்கு தலைமைத்துவம் தரப்படுகின்றது. வேதங்கள் வேதமொழியில் அமைந்துள்ளன.
* ஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் ஸ்ருதி வகை நூல்களை விட சான்றுவலிமை குறைந்தவை. ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. ஒரு குறிப்பிட்ட நபரால் உருவாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பவை ஸ்மிரிதிகள். நான்கு வேதங்களைத் தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக, உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிகாசங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள் மற்றும் பல.
இதையடுத்து தமிழில் தர்மசாஸ்திரமாக ‘தமிழ்மறை’ எனப்படும் திருக்குறள் விளங்குகின்றது. பக்தி நூல்களாக பன்னிரு திருமுறையும் திவ்விய பிரபந்தமும் திகழ்கின்றது. சங்க காலத்து இலக்கியங்களான எட்டுத்தொகை மறுறும் பத்துப்பாட்டு எனப்படும் பதினெட்டு நூல்களும் பக்தியையும் தர்மத்தையும் அதிகமாகப் போதிக்கின்றன. மேலும், கம்பரின் கம்பராமாயணமும் மற்றும் வில்லிபுரத்தாரின் வில்லிபாரதமும் புகழ்ப்பெற்றது. அதையடுத்து இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஆசாரக்கோவை என பல்வேறு நூல்கள் நன்னெறியையும் நல்வாழ்விற்கான வழியையும் போதிக்கும் நூல்களாக அமைந்துள்ளன.
அத்தனை நூல்கள் இருந்தாலும் தலைச்சிறந்த தர்மசாஸ்திர நூலாக திருக்குறள் அமைந்துள்ளது. இது அறம், பொருள், இன்பம் எனும் புருஷார்த்தங்களைப் போதிக்கும் நூல். இதை அருளியவர் திருவள்ளுவர். “இறைவனின் திருவடியில் சரணடைந்தார் பிறவி எனும் பெருங்கடலை கடப்பார்” என்று திருவள்ளுவர் வீடுபேற்றையும் விளக்கியுள்ளார். மாணவன், இல்லறத்தான், தவசி, துறவி என எல்லோருக்கும் பொருத்தமான நூலாக திருக்குறள் அமைந்துள்ளது.
சைவ சமயத்தவருக்கு பன்னிரு திருமுறை நூல்களும் வைணவ சமயத்தவருக்கு திவ்விய பிரபந்த நூல்களும் தலையாய பக்தி மற்றும் தத்துவ மூலங்களாக அமைந்துள்ளன.
No comments:
Post a Comment