Friday, October 21, 2016

இந்து தர்மத்தை அறிவோம் (மதமில்லை, தர்மம்)

இந்துக்களைப் பொறுத்தவரை ‘இந்து’ என்றால் மதமல்ல, தர்மம். இந்த தர்மம் தான் பாரத மைந்தர்களின் வாழ்வியல் நெறி. வாழ்க்கையுடைய ஒவ்வொரு அம்சத்திலும் இது ஒன்றிவிட்டது. இந்து என்ற பெயர் புதியதாக இருந்தாலும், நம்முடைய இந்த வாழ்க்கைமுறை பல ஆயிர ஆண்டுகாலம் பழைமையானது; அதேசமயம் ஆழ்ந்த ஆன்மீக அறிவியல் சார்ந்த அர்த்தமுடையது. சிலர் இந்து என்ற சொல்லை விரும்பாமல், தமிழ் பாரம்பரியம், தமிழியல், தமிழ் வாழ்வியல் போன்ற பல்வகை பெயர்களில் அழைக்கின்றனர். தேன் என்று அழைத்தாலும் மதுரம் என்று அழைத்தாலும் தேனின் சுவை மாறிவிடுமா என்ன?

இந்து எனும் சொல் இந்திய சமயங்களை எல்லாவற்றையும் குறித்தாலும், இன்றைய நிலையில் அச்சொல் குறைப் பொருத்தமானதே. நம்முடைய ஆழ்ந்த, அகன்ற, பரந்த சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் குறிக்க ஏற்றச் சொல் ‘சனாதன தர்மம்’ என்பதே ஆகும். அழிவற்ற அறநெறி என்பதே இதன் பொருளாகும். அறநெறியைத் தோற்றுவித்தவர் என யாரும் இல்லை. அது எப்போதும் நிலைத்திருப்பது. ஆனால், அந்த அறநெறியை உணர்ந்து நமக்கு சொன்னவர்கள் நம்முடைய முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும்.

புவியீர்ப்புச் சக்தியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அதை கண்டுபிடித்தவர் நியூட்டனா? இல்லை. புவியீர்ப்பு சக்தி எப்போதும் இருந்ததே. அப்படியொன்று இருக்கின்றது, அந்த ஒன்றுதான் பூலோக ஜீவர்களையும் மற்ற பொருட்களையும் பூமியின் மேற்பரப்பில் ஒட்ட வைத்துள்ளது என்பதை நியூட்டன் உணர்ந்தார். இது ஒருவகையான மெய்யுணர்வு. ஒருவேளை புவியீர்ப்பு சக்தி இல்லையென்றால் கண்டிப்பாக பூலோகத்தின் எல்லாப் பொருட்களும் வான்வெளியில் மிதக்கும். இயற்கையின் ஏதாவது ஓர் உறுப்பினர் தன் தர்மத்தை மறந்துபோனால், அதனால் ஏற்படும் பாதிப்பானது மிகவும் துன்பமானது. ஆனால் இதுவரை இயற்கையின் எந்த உறுப்பினரும் தர்மத்தை மீறி செயல்பட்டதில்லை. மனிதர்களைத் தவிர. ஆறறிவுவுடைய மனிதர்களாகிய நாம் தருமத்தை மீறி செயல்படுகிறோம். நம்முடைய செயல்களின் பலனால் உலகவாழ்க்கை உருகுலைகின்றது. கண்டபடி இயற்கையை நாசம் செய்கிறோம், பேரிடர்கள் ஏற்படுகின்றன.

சனாதன தர்மம் என்றால் எல்லா மனிதர்களின் கடமையையும் குறிக்கும். இங்கு ஜாதி, மதம், இனம், நாடு, மொழி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிற்கு இடமில்லை. ‘வசுதைவ குடும்பகம்’ எனும் உபநிடத கருத்துபடி உலகமே ஒரு குடும்பம், இந்த குடும்பத்தை நன்முறையில் வழிநடத்துவது எல்லா உறுப்பினரின் கடமையும் ஆகும்.

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை மனிதவாழ்க்கைக்கு முக்கியமான சில பண்புகள் எல்லாரின் மனத்திலும் விதைக்கப்படுகின்றன. அவை:
1) நேர்மை,
2) துன்புறுத்தாமை,
3) தூய்மை (மனம், உடல், வாக்கு, செயல்),
4) நல்ல எண்ணம்,
5) பரிவு,
6) பொறுமை,
7) அடக்கம்,
8) எளிமை,
9) பெருந்தன்மை,
10) மிதமான போக்கு
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு புகழ்ப்பெற்ற விரிவுரையாளர், கிம் க்னாட் தனது ‘Location of Religion: A spatial Analysis (2005)’ எனும் புத்தகத்தில் ”சனாதன தர்மத்தின் துவக்கம் மனிதகுல தோன்றலுக்கு முந்தையது, அது காலத்தையே முந்தையது. அதன் உண்மைகள் எல்லாம், பின்னாளில் ஸ்ருதி வடிவில் வேதங்களாக தோன்றின.” எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு புகழ்ப்பெற்ற ஆராய்ச்சியாளர். [Kim Knott, Professor of religious studies at Lancaster University]

No comments:

Post a Comment