Monday, October 17, 2016

எப்போது முயற்சிக்கலாம்

கொஞ்சம் முயற்சி செய்தால் முன்னேறிவிடலாம் என்பது உண்மைதான். அடுத்தவாரம் புதன்கிழமை அந்த முயற்சியைத் தொடங்குவது பற்றி முயற்சிக்கப்போகிறேன்” இப்படி ஒருவர் சொல்வாரேயானால், அந்த புதன்கிழமை வருமே தவிர அவரிடம் முயற்சி வராது.


ஏனென்றால், முயற்சி என்பது விழிப்புணர்வு ஏற்பட்ட விநாடியிலிருந்தே தொடங்குவது. இது முதல் விஷயம். ஆனால் ஒன்றில் வெற்றிபெற முயற்சியைத் தொடங்குவது மட்டும் முக்கியமல்ல. தொடருவதும் முக்கியம். சமீபத்தில், ஈஷா யோகாவின் ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி சொல்லிக் கொடுத்த பிறகு, அவர்கள் சொல்லும் வழிகாட்டுதல், “இந்தப் பயிற்சியை அடுத்துவரும் நாற்பது நாட்களும், காலை மாலை இரண்டு வேளைகள் செய்யுங்கள். இடையில் ஏதாவது ஒரு நாள் காலையோ மாலையோ செய்ய முடியாமல் போனால் மறுநாள் தொடங்கி நாற்பது நாட்கள் காலையும் மாலையும் தொடர்ந்து செய்யுங்கள்” என்பதுதான்.

முயற்சியை உடனடியாகத் தொடங்குவது, தொடங்கிய ஒன்றைத் தொடருவது இந்த இரண்டுமே வெற்றியாளர்களின் அடிப்படை குணங்கள்தாம்.

நீங்கள் ஓர் உணவகம் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உணவகத்தில் உள்ள சேவையின் சிறப்பையும் சுவையின் சிறப்பையும் ஒருவர் பாராட்டி தன் நண்பரிடம் சொல்கிறார். அவரும் ஆர்வமுடன் உங்கள் உணவகம் வருகிறார். அன்று பார்த்து உங்கள் சமையல் கலைஞருக்கு உடம்பு சரியில்லை. சரியாக சமைக்கவில்லை. உணவு பரிமாறுபவருக்கு மனது சரியில்லை. அவரது சேவை வழக்கமான தரத்தில் இல்லை. அப்படியானால் என்ன நடக்கும்?

சாப்பிட வந்தவருக்கு இந்த சங்கதிகள் தெரியாது. எதிர்பார்ப்போடு வந்ததால் ஏமாற்றம் இரண்டு மடங்காகும். அவர் உங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அன்றே தொடங்கிவிடுவார். அதற்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் உங்கள் சேவையும் உணவின் சுவையும் சிகரத்தைத் தொட்டால்கூட எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் உங்கள் தரமும் திறமும் நிலையான விஷயமாகப் பதிவாகவில்லை.

தொடங்கிய முயற்சி – தொடரும் முயற்சி இரண்டுமே விழிப்புடன் இருப்பதால் விளைகிற தனித்தன்மை. ஒரு நிறுவன உரிமையாளர் சட்ட திட்டங்களை வகுத்து போதனை தருவதோடு நின்றுவிட்டால் அவர் முழுதாக முயலவில்லை என்று பொருள். வகுத்த கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதா என்று நின்று பார்ப்பதே வெற்றியை உறுதிசெய்கிறது.

தனியொரு மனிதர் தனக்கென வகுத்துக் கொண்ட கொள்கைகள் கூட நடைமுறைப் படுத்தும்போதுதான் உறுதியாகிறது. “சரியான நேரத்திற்கு வருவது என் கொள்கை. என்ன செய்வது? கொஞ்சம் தாமதமாகிவிடுகிறது” என்றொருவர் சொல்வது எதைக் காட்டுகிறது?

நேர நிர்வாகத்தில் புலி என்ற பெயர் வாங்கவும் ஆசை, சோம்பலையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டுக்கும் நடுவே தடுமாறுவதால் சாக்குப் போக்குகள் சொல்லத் தொடங்குகிறது மனம்.

முயற்சிக்கு இரண்டு இலக்கணங்களைச் சொல்கிறார் திருவள்ளுவர். சலிப்பில்லாமல் முயலுவது, காலம் தாழ்த்தாமல் முயலுவது. இரண்டுமே ஒன்றில் ஒன்று தொடர்புள்ளவை.

ஏதாவதொரு கடமை உங்களுக்கு சலிப்புத் தருவதாக இருந்தால், அதற்கு நீங்கள் தருகிற முக்கியத்துவம் குறைகிறது. அதன் காரணமாகக் காலதாமதம் நேர்கிறது.

முயற்சிகள் முனைமுறிவது இரண்டு காரணங்களால்தான். ஒன்று – சலிப்பு. இன்னொன்று – பொறுமையின்மை. ஒரு முயற்சியை இடைவிடாமல் செய்கிறபோதுதான் அது உரிய காலத்தில் உரியவர்களின் கவனத்தைத் தொடுகிறது. அந்த முயற்சிக்குரிய மேன்மையும் அங்கீகாரமும் மலர்கிறது.

விடாத முயற்சியின் வலிமையை உணர்ந்துகொள்ள நிறைய உற்சாகமும் அதைவிட அதிகமாய்ப் பொறுமையும் அவசியம். இந்த இரண்டு குணங்களுக்கான முயற்சியை எப்போது தொடங்கப்போகிறோம்? இப்போதே….. உடனடியாக……

No comments:

Post a Comment