மேற்கத்தியர்கள் ‘இந்து’ என்பதை ஒரு மதமாக கருதினாலும், இந்து என்பது ஒரு மதமல்ல. ஒரு குறிப்பிட்ட மதநூல், ஒரு குறிப்பிட்ட மதபோதகர், எல்லைக்குட்பட்ட கோட்பாடுகள் போன்றவற்றை சார்ந்திருக்கும் வழிகள் தான் ’மதம்’ ஆகும். இந்து அப்படியல்ல. எல்லையற்ற நூல்கள், ஏராளமான ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், எல்லையற்ற சிந்தனைகள் பரந்த கோட்பாடுகள். எனவே இந்துவை தருமம் எனக் குறிப்பிடலாம். தருமம் என்பது யாராலும் தோற்றுவிக்கப்படாதது; எதையும் யாரையும் சார்ந்திருக்காதது, அதேவேளை எல்லோரிடமும் இருப்பது, எல்லோர்க்கும் உரியது. தருமம் என்பது எல்லையற்றது (infinity). செடிகொடியாகினும், மிருகங்களாயினும், உயிரற்றவைகளாகினும், சூரிய சந்திரனாகினும் அனைத்துமே தர்மத்தின்படி தான் செயல்படுகின்றன. மனிதர்கள் மட்டும் மனம் மற்றும் புலன்களின் படி செயல்பட்டு தர்மங்களை அடிக்கடி மறக்கின்றனர்.
பாரதமண்ணில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பல சமயங்களும், மார்கங்களும் தோன்றின. ஒரே இறைவனைக் கொண்ட மார்கங்களான சைவமும் வைணவமும், பல தெய்வங்களைக் கொண்ட மார்கங்களான ஸ்மார்த்தம், பெண் தெய்வங்களைக் கொண்ட சாக்தம், இயற்கையை வணங்கும் மார்கங்கள், சூரியனை வணங்கும் சௌரம், சமணம் போன்ற நாத்தீக மார்கங்கள், மனிதநேய மார்கம், பிரம்ம சமாஜ் போன்ற அருவ மார்கம் என பல்வேறு மார்கங்கள் தர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாகின. பாரத நாட்டின் மற்றொரு பெயர் ஹிந்துஸ்தானம், இங்கு தோன்றிய சமயங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக ‘ஹிந்து’ என இந்திய அரசியல் சட்டம் குறிக்கின்றது. ஆகவே, சைவராக இருந்தாலும், வைணவராக இருந்தாலும், சமணராக இருந்தாலும், வேதாந்தனாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும், கிராமதேவதைகளை வணங்குபவர்களாக இருந்தாலும் எல்லோரும் இந்துவே. இந்த மண்ணில் தோன்றிய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், இந்து. இந்தியாவிற்கு வெளியே தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்து-அல்லாதவர். இந்துக்களை சனாதன தருமிகள் என்று குறிப்பிடலாம்.
இந்து எனும் சொல்லுக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. இம்+து = இந்து. மற்றவர்கள் அனுபவிக்கும் இம்சைகளை துடைப்பவன் எனப் பொருள்படும். இன்றைய நிலையில் இந்து எனும் சொல் சனாதன தருமத்தைக் குறிக்கப் பயன்படுகின்றது. சனாதன தர்மம் என்பது தர்மநியதி, கர்மநியதி, எங்கும் நிறைந்த பரம்பொருள், பிறவிச்சுழற்சி, மறைநூல்கள் போன்ற அடிப்படையை உடையது. சமணமும் பௌத்தமும் நாத்தீக மதங்கள் என்பதால் அவை சனாதன தர்மம் அல்ல. முன்பு சொல்லியது போலவே இங்கு அசைவன, அசையாதவன என எல்லாமே தருமத்தின்படி தான் செயல்படுகின்றன. இந்து என்றால் தர்மத்தின்படி செயல்படுபவன். தருமம் என்பது இறைவனின் நியதி. ஆகவே, இந்த பிரபஞ்சத்தின் எல்லா உறுப்பினரும் உண்மையில் ஓர் இந்து தான். ஆனால் உலகவாழ்க்கையில் அவர்கள் தங்களின் சூழல்களுக்கு ஏற்ப மாறி சில சமயங்களில் வழித்தவறி அதர்மமான நம்பிக்கைகளில் சிக்குண்டு உலகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் அதர்மபாதையில் பயணிக்கிறோம் என்ற பக்குவம் ஏற்பட்டவுடன் தர்மபாதைக்குத் திரும்புகின்றனர். பக்குவம் ஏற்பட சில ஆண்டுகளும் ஆகலாம்; சில பிறவிகளும் ஆகலாம். இந்தியாவிற்கு வெளியே உள்ளவர்கள், இந்தியாவிற்குள் வந்து தர்மத்தை உணர்ந்து இந்துதர்மத்தை ஏற்கும் போது அதனை நாம் “தர்மத்திற்குத் திரும்புதல்” எனவே குறிப்பிடுகின்றோம். அது மதமாற்றம் அல்ல.
மெய்யுணர்வு அடைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்பவன் எல்லாமே இந்துதான். இந்துதர்மம் பற்பல பாதைகளையும், ஒவ்வொரு பாதைகளிலும் பற்பல சாஸ்திரநூல்களையும், குருமார்களையும் கொண்டு திகழ்கின்றது. எப்படியெல்லாம் வாழவேண்டும்; எப்படியெல்லாம் வாழக் கூடாது என வரையறுத்துக் காட்டுகின்றது. எது நல்லது, எது கெட்டது, எது தர்மம், எது அதர்மம் என துல்லியமாக விளக்குகின்றது. அத்தனையையும் கற்றுக் கொடுத்துவிட்டு, இனி உன் வாழ்க்கை உன் கையில், எப்படி வாழப் போகிறாய் என முடிவுசெய் என்று சொல்கின்றது. கட்டாயம் எதுவுமில்லை; கடவுளை நம்பிதான் ஆகவேண்டும் என்று எதுவுமில்லை. கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றும் எதுவுமில்லை. கோவில்வழிபாடு பக்தியோகத்தின் ஓர் அங்கமே. ஒவ்வொன்றும் ஊக்குவிப்பு நிலையிலே அமைந்துள்ளன. தினமும் சில கிலோமீட்டர் ஓடினால் உடல் நலமாக இருக்கும் என மருத்துவர் ஊக்குவிக்கலாம், நீ ஓடாவிட்டால் நீ நரகத்திற்குப் போவாய் என பயம் காட்டலாமா? அல்லது நீ ஓடியே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தலாமா? அல்லது நீ வேறு டாக்டரை நாடி சென்றால் உனக்கு மரணதண்டனை என விதிக்கலாமா?
இந்துதர்மம் கடவுளை நம்ப ஊக்குவிக்கின்றது. சாஸ்திரங்களைக் கற்க, அதன்படி நடக்க ஊக்குவிக்கின்றது. கோவிலுக்குச் செல்ல, பூஜைகள் செய்ய, தியானம் மேற்கொள்ள, யோகா பயில ஊக்குவிக்கின்றது. பின்பற்றினால் நமக்கு பயன் கிடைக்கும்; பின்பற்றாவிட்டால் இழப்பு நமக்கு தான்.
இந்துதர்மம் ஐந்து விஷயங்களை ஆழமாக போதிக்கின்றது.
1) ஐம்புலன்களையும் மனத்தையும் அடக்கவேண்டும்.
2) யோகாப்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபட்டு உடலையும் மனத்தையும் உறுதியாக வைத்திருக்க வேண்டும்.
3) நல்லஞானத்தைப் புகட்டும் நூல்களைக் கற்கவேண்டும், பிறருக்கும் கற்பிக்கவேண்டும்.
4) மனத்தில் இறைபக்தி கொண்டிருக்கவேண்டும்.
5) சுயநலமின்றி செயல்புரிய வேண்டும்.
இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்றை உடையவனாக இருந்தாலும், அவன் இந்துவே.
No comments:
Post a Comment