Friday, March 15, 2013

கந்த சஷ்டிவிரதம்

சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.

அசுரர்களின்  இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.  இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க  அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரித்தார்.

ஆறுமுகன் அவதாரம்:
தேவர்களை  துன்பத்தில் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத்  திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய  ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய “அதோமுகம்”  (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள்  வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி  விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை  மலர்களின் மீது சேர்த்தான்.

அந்த  தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகளாக  தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி,  பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள்  அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக  வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக  தோன்றினன் உலகமுய்ய.

ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் “ஆறுமுகசுவாமி” எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

பிரணவ  சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும்  கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும்  அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் “ஆறுமுகமே சிவம்,  சிவமே ஆறுமுகம்” எனப்பெறுகின்றது.
வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதின்மர் தோன்றல்:

சிவபெருமானின்  நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து  வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி  பாய்ந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்முகளில் இருந்த  நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவன்னின் பார்வை  பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில்  வீரவாகுதேவர் முதலான இலச்சத்து ஒன்பதுமர் (100009) தோன்றினர். இவர்கள்  ஆனைவரும் பின்பு முருகனின் படைவீரர்களாயினர்.

அன்னை வழங்கிய சக்திவேல்:
அம்மையும்  தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர்  வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம்  வழங்கினர். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு உருத்திரர்களைப் படைக்கலமாக்கி  முருகனிடம் தந்தார்.

அம்மையப்பனிடம்  வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கெ இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி  செல்கையில்; விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம்  கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க  வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிகின்றார். ஆனால் தாரகன் தன் மாயையால்  வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்துகின்றான்  அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிகின்றான்.  வீரவாகுதேவர் முதலானோர் மலைச் சிறையிலிருந்து விடுபடுகின்றனர். (தாரகாசுரன்  ஒரு சிவபக்தன். கூடுவிட்டு கூடுபாயும் வரத்தை சிவனிடமிருந்து பெற்றவன்.  தாரகனின் நண்பனான கிரௌஞ்சம் என்னும் பறவை அகத்தியரின் சாபம் பெற்று  மலையுருவானது. அந்தமலையாக தனது மாயை சக்தியால் வீராவாகுதேவர் உள்ளிட்ட  முருகனின் சேனையை சிறைப் பிடித்தான்.) சூரபத்மன் இச் செய்தி கேட்டு  துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

தந்தையிடம் இருந்து முருகன் பாசுபத அஸ்திரம் பெறுதல்:
மன்னி  ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப்  பணிக்கிறார். ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி பாசுபதம் என்னும் அஸ்திரம்  வழங்குகின்றார். பின்னர் அந்த ஆற்றங்கரையான திருச்செந்தூர் நோக்கி மொத்தப்  படையும் கிளப்புகின்றது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும்  திருச்செந்தூர் வந்து தங்கினர். அங்கு பராசர முனிவரின் புதல்வர்களும்  (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்று வீழ்ந்து  வணங்குகின்றனர்.

வீரவாகுதேவர் தூது செல்லல்:
முருகப்  பெருமான் புதிதாக கட்டப்பெற்ற ஆலயத்தில் அமர்ந்து, தேவகுருவான  குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன்  பின்னரே வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும்  வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவாகின்றது.
முருகப்  பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுதலை  செய்யுமாறு செய்தி அனுப்பினார். தூதின்போது, வீரவாகு சிறைப்பட்ட  அமரர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சூரனிடம் தூது உரைக்கின்றான். முருகன்  என்ற பாலகனுக்கு அடிபணிந்து நான் தேவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அது  நடக்காத காரியம் என்று கூறி முழங்கலானான்.

சூரனின்  ஆணவத்தால் தூது முறிகின்றது. அது மாத்திரமன்றி தூது சென்ற  வீரவாகுதேவரையும் சிறையிலடையுங்கள் என உத்தரவிடுகின்றான். வீரவாகுதேவரை  சிறைப்பிடிக்க சென்ற அவுணப் படையுடன் வீரவாகுதேவர் போர்புரிகின்றார்.  அப்போது நடந்த போரில் சூரனின் புத்திரனான வச்சிரவாகுவும் அசுரர் தலைவனான சகத்திரவாகு, ஆகிய இருவரும் வீரவாகுதேவரினால் கொலை செய்யப்படுகின்றனர்.

திருச்செந்தூரில்  ஆறுமுகக்கடவுள், திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் போற்ற  சிங்காசனத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் போது வீரவாகுதேவர்  திருச்செந்தூர் திரும்ன்பிவந்து முருகனிடம் தூது நிகழ்வுகளை முன்  வைக்கிறான்.

முருகனும் இனியும் தாமதிக்கலாகாது என்று திருச்செந்தூரில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து சூரனின் இராசதானியாகிய வீரமகேந்திரபுரி செல்ல தீர்மானிக்கின்றார்.

கந்தப்பெருமான்  வீரபாகு தேவரை நோக்கி “பாவங்களை அளவில்லாமல் புரிந்து கொண்டிருக்கும்  சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம்  பெறுவதற்காக இப்பொழுதே படையெடுத்து வீரமகேந்திரபுரிக்குச்  செல்லவேண்டும்.”நம் தேரைக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார்.

தங்கள்  துயரம் எல்லாம் நீங்கியது என்று கருதிய தேவர்கள் கந்தப்பெருமானின்  கழலிணைகளை வணங்கித் துதித்தனர். முருகவேளின் கட்டளைப்படி வீரவாகு தேவர்  மனோவேகத் தேருடன் பாகனையும் அழைத்து வந்தார். சிங்காசனத்தில் இருந்து  இறங்கிய எம்பெருமான், ” நாம் சூரபன்மனை அழிக்க வீரமகேந்திரபுரி செல்கிறோம்.  நீங்களும் அவரவரது வாகனங்களில் புறப்பட்டு வாருங்கள்” என்று தேவர்களுக்கு  உத்தரவிட்டார்.

பிரம்ம தேவர்  அன்னப்பறவை மீதும், திருமால் கருடன் மீதும், இந்திரனும், வீரபாகு தேவரும்  லட்சத்து எண்மரான தெய்வ வீரர்களும் மற்றைய தேவர்களும் தத்தம் வாகனங்கள்  மீதும் ஏறிக் கந்தவேளைச் சூழ்ந்து சென்றார்கள்.

நினைத்த  மாத்திரத்திலேயே எல்லாப் புவனங்களையும் அழிக்கும் ஆற்றல் பெற்ற  படைத்தலைவர்கள் நூற்றியெட்டுப் பேரும் தொடர்ந்தார்கள். அதனை அடுத்து  இரண்டாயிரம் வெள்ளம் பூதப்படைகளும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. வானவர்கள் பூ  மழை பொழிந்தார்கள்.

பேரிகை, காளம்,  கரடிகை பல வாத்தியங்கள் முழங்கின. முருகப்பெருமானுடன் சென்ற பூதப்படைகளின்  பேரொலி எங்கும் ஒலித்தது. அவர்கள் சென்றபோது ஏற்பட்ட புழுதி சூரிய  சந்திரர்களுடைய ஒளியையும் மறைத்துவிட்டதாம். கடலில் பூத சேனைகள்  இறங்கினார்கள். அவர்களுக்கு கடலே கணுக்கால் அளவுதான் இருந்தது. கடலில்  இருந்து பெரிய பெரிய மீன்களும் திமிங்கிலங்களும் சிறு புழுக்கள் போன்று  இருந்தன. பூதப்படை இறங்கி கலக்கியதால் அது சேறானது. அந்த சேறு உலர்ந்தபின்  புழுதியாகி எங்கும் பறந்தது.

வீரமகேந்திரபுரி  (சூரனின் இராசதானி) தென்கடலில் இருந்த ஒரு தீவு (தற்பொழுது அது நீரில்  மூழ்கி உள்ளது). அதற்கு வடக்கே உள்ள தீவு இலங்கை. இலங்கை வழியாகப்   எம்பெருமான் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றபோது; பிரமன், திருமால்,  இந்திரன் ஆகிய மூவரும் சுவாமியை வணங்கி, “மகா பாவியாக உள்ள சூரபன்மன்  இருக்கும் மகேந்திரபுரி தங்கள் திருப்பாதம் பதியத் தகுதி பெற்றதல்ல.  அந்நகருக்கு அடுத்த எல்லையாகிய இங்கேயே தங்கியிருந்து போர்செய்வதற்குப்  பாசறை அமைத்துக் கொள்ளலாம்” என்று வேண்டிக்கொண்டார்கள். சுவாமி அந்த  வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.

தேவதச்சனை  அழைத்து “உடனே விரைந்து இங்கு ஒரு பாசறை ஏற்படுத்து” என்று எம்பெருமான்  ஆணையிட்டார். தேவதச்சன் உடனே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும்,  வாவிகளும் கொண்ட பாசறை ஒன்றை மனத்தால் நிர்மாணம் செய்து அப்படியே அதை ஸ்தூல  வடிவிலும் கட்டினான். அந்தப் பாசறைக்கு “ஏமகூடம்” என்று பெயர்  வைத்தார்கள்.
எம்பெருமானின் தேர்  கீழே இறங்கியது. சுவாமி ஏமகூடத்தின் வீதிகளில் பூத சேனைகளை நிறுத்தினார்.  இலச்சத்தொன்பது வீரர்களோடும், தேவர்களோடும் திருக்கோயிலினுள் சென்று  அமர்ந்தார் முருகப் பெருமான். அந்த ஏமகூடமே கதிர்காமம் என்பது ஐதீகம்.

[கதிர்காமம்  என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்று பொருள்.  அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக்  கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம்  செய்யவேண்டும்.]

ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.

பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் (3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.

பானூகோபன்  மாயயால வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ  பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார்,  தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய  சூரனுக்குக் கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன்  தானே போருக்குச் சென்று முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக  வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க  தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச்  செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை  ஆசீர்வதித்து போருக்கு அனுப்பிவைக்கின்றான். பானுகோபன்  நன்நீர்க் கடலில்  முருகன் சேனையயை ஆழ்த்த முருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது  பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.

சிங்கமுகன் வதை: 
பானுகோபன்  பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன்  ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன்  போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம்  என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக்  கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல  விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே  அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப்  பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம்  செய்கின்றான்.

சூரன் சங்காரம்:
சூரன்  அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன்.  ஆணவமலத்தால் பீடிக்கப் பட்டு அதர்மவழியில் சென்று அழிகின்றான். தன்  சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது  நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு  செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான்.  அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன்  தனது மாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான். அப்போது முருகன் சூரனை  நோக்கி இப்போதும் நீ உயிர்வாளலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து  விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால்  போர்செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செயலானான்.
வீரமகேந்திரபுரத்தில்  பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி  மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவிசெய்ய இருந்த  உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித்  தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய  ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன்  திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே  என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல  ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற “இந்திரஞாலம்” என்னும்தேரை அழைத்து முருகனின்படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச  உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன்  கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு செறது.  முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம்  கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக்  கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால்  அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையயை முருகனை அழிக்கும்படி  ஏவினான்.

சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது  முருகனின் வேல் அதனை மழுங்கச்  செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்லவைத்தது. கடைசியாக சூரன் தனது  அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை  பொடிப்பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என  உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என  எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக  உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை  ஏற்படுத்தியதுடன்  முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது  கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது  பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து  தாக்கி மறைந்தான்.

தனது  படையினரையும்,  படைக் கலங்களையும் இழந்த  சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான்.  கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச்  சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை;  நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது.
ஆணவம்  அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து,  ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம்  கொண்டு; பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால்  சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும்  தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

கந்த  புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர்  மூலம் நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப்  பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது  இதன் பொருள்.

முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.

வெற்றி  வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான்.  சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட  நாளே இறுதி நாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள்  இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள  ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல்  நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.

சூரனை  அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின்  ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே  நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன்  செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால்,  கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே  முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும்  கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும்  வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம்  சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில்  முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.

முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

மூலவரின்  காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில்  ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து  விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக  அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆலயத்தில்  சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது  அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள்  (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச்  செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

கிழக்கே  கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம்.  சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன்  ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி  தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி  நிற்கும் காட்சி!

சூரசம்ஹாரம்  நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம்  நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச்  சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது  கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின்  முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும்  காணக்கூடியதாக இருக்கின்றது.

முருகப்  பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்த போரில்  அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில்  முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.

சூரசங்காரங்கள்  முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப் பெருமானிடமே  ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய  வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர்,  அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.

ஒரு சமயம் தாரகாசுரன் என்பான், தான் பெற்ற வரத்தினைத் தவறாகக் கையாண்டான்; மக்களையும், நல்லோர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். அவனது கொடுமையிலிருந்து விடுபட முனிவர்களும், ரிஷிகளும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்; அசுரனின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்ற பிரார்த்தனை செய்தார்கள். 

பக்தர்களின் நிலையறிந்த சிவபெருமான், தன் மகன் முருகனை அழைத்து தாரகாசுரனை அழிக்க உத்தரவிட்டார். மேலும் முருகனுக்கு பதினாறு வகை ஆயுதங்களையும் கொடுத்து அருளாசி வழங்கினார். தன் தந்தையிடம் அருளாசி பெற்ற முருகப் பெருமான், தன்னுடைய படையுடன் தாரகாசுரன் ஆட்சி புரிந்த மாயாபுரி நகருக்குச் சென்றார். 

முருகப் பெருமானின் படையினைக் கண்ட அசுரன், கிரெளஞ்ச மலையின் உதவியுடன் முருகப் பெருமானின் படையை மயக்கம் அடையச் செய்தான். படை வீரர்கள் மயக்கமடையக் காரணமாக இருந்த கிரெளஞ்ச மலையை தன்னுடைய வேலாயுதத்தால் தாக்கி, இருக்குமிடம் இல்லாமல் செய்தார் முருகப் பெருமான். பின் அதே வேகத்துடன் மாயாபுரிக்குச் சென்று, தன்னை எதிர் கொண்டு வந்த தாரகாசுரனை அழித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அந்த நாள் தைப்பூச நட்சத்திரமாகும். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் 

   - இச்சா சக்தி 
   - கிரியா சக்தி 
   - ஞான சக்தி 

என்ற மூன்று வகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. சிவபெருமான் தைப்பூச நன்னாளில் அம்பிகையுடன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார் என்று புராணங்கள் கூறுகின்றன. தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானுடைய ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் கண்டு மகிழும் வண்ணம் சிதம்பரத்தில் கனகசபை உருவாக்கினர். 

இன்றும் அதில் நடராஜப் பெருமான் நடன தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். நெல்லையம்பதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை உமையவள் பெற்றாள். அந்த நாள் தைப்பூசம் என்பர். இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்பது ஐதீகம். *"எவ்வுயிரையும் தம்முயிர் போல் கருதி அன்பு செலுத்தினால் ஒழிய இறைவனின் திருவருளைப் பெற இயலாது," *எனக் கருதி,* "வாடிய பயிரைக் கண்ட போதும் உள்ளம் வாடியவர்,"* வள்ளலார். அவர் ஜோதி வழிபாட்டினை இதே தைப்பூசத் திருநாளில் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு 25.1.1872ம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றும் இந்த ஜோதி தரிசனத்தை வடலூர் திருத்தலத்தில் தைப்பூச தினத்தில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கண்டு தரிசிக்கிறார்கள். இந்நாளில் (பிப்ரவரி 8ம் தேதி) விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குறையில்லா வாழ்வும், நிறைந்த செல்வமும் கிட்டும். வேல் வாங்கி ஷண்முகர் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் வலம். கீழச் சன்னிதியில் தாரகாசுரன் சம்ஹாரம், அக்கினித் திக்கில் கஜமுகாசுரனையும், நிருதித் திக்கில் சிங்கமுகாசுரனையும், வாயு திக்கில் (மேல வீதி மாரியம்மன் கோவில் அருகில்) சூரபத்மனையும் சம் ஹாரம் செய்தல், குபேர திசையில் வடக்கு வீதி பெருமாள் கோவில் அருகில் தேவேந்திரன் வெள்ளையானையில் தரிசித்தல், சம்ஹாரம் செய்யப் பெற்ற சூரபத்மன் மாமரமாக, அதனையும் சம்ஹாரம் செய்ய சூரன் மயிலாகவும், சேவலாகவும் தோன்றுதல். முருகப் பெருமான் மயிலை வாகனமாகவும், சேவலைக் விரதமாவது மனத்தை ஐம்புலன்களின் எண்ணப்படி செல்லாது கட்டுப்படுத்தி உணவை விடுத்தேனும் குறைத்தேனும், மட்டுப்படுத்தி மனம், வாக்கு, காயம் எனும் முக்காரணங்களாலும் இறைவனை வழிபடுதலாகும்.

முருகனுக்குரிய விரதங்கள்:
விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும். ஒன்று வாரத்தையும் மற்றது நட்சத்திரத்தையும் மற்றொன்று திதியையும் கொண்டமைந்தவை யாகும். 
அவை முறையே சுக்கிரவார (ஐப்பசி வெள்ளி) விரதம், கார்த்திகை (கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதல் மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரங்களில் அனுட்டிக்கும்) விரதம், கந்தஷஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் கந்த ஷஷ்டி விரதமேயாகும். 

இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்க திருச் சொந்தூர், திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும், மிகச் சிறப்பாக பக்தி பூர்வமாக மக்களால் விரும்பி மன ஒருமைப்பாட்டுடன் அனுட்டிக்கப்படுகின்றது.

வருடந்தோறும் ஐப்பசி மாத தீபாவளியினையடுத்து வரும் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்களிலும் பக்தி சிரத்தையுடன் கைக்கொள்ளப்படும் விரதம் இதுவாகும். 

அடியார் விரும்பும் பேறுகளையும் சகல செளபாக்கியங்களையும் சிறப்பாக புத்திர பாக்கியத்தையும் தரவல்லது இவ்விரதம். இதனை “சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” எனும் பழமொழி உணர்த்துகின்றது.

இதன் வெளிப்படையான பொருள் சாதாரணமானதே. எனினும் உட்பொருள் அர்த்தம் அதிகம் பொதிந்தது. அதாவது. சட்டியில் கந்த ஷஷ்டியில், இருந்தால்= விரதமிருந்தால், அகப்பையில்= கருப்பையில், வரும்= குழந்தைச் செல்வம்= கரு உண்டாகும் என்ற அருமையான கருத்தும் தொனிக்கின்றதல்லவா! பிரதமைத் திதியில் தொடங்கி பகல் 12 நாழிகைக்குக் குறைவின்றிப் பஞ்சமித் திதியும் பின் சட்டித் திதியும் உள்ள தினமே சூரன்போர் நாளாகும். 

இதனை வேடிக்கையாக “சங்கரப் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்” என்று ஒரு பழமொழி கூறுவர் ஆன்றோர். இதன் உட்பொருள்: சங்கரப்பிளை= சங்கரனின்=பரமசிவனாரின் பிள்ளை= குமரனான கந்தசுவாமியார், சட்டியிலே= கந்தஷஷ்டித் திதியன்று மா= மாமரமாக நின்ற சூரனை, அறுத்தார் = தனது வேற்படையினாலே இரு கூறாகப் பிளந்தார்.

பல திருத்தலங்களிலே இவ்வாறு நாட்களும் தீவிர முருகனடியார்கள் முழு உபவாசமாக அன்ன ஆகாரமின்றி பகல் முழுதும் தூயராகக் கோவில் களிலேயே தங்கிக் காப்புக்கட்டி முருக நாம பஜனை, பூசை புராண படனம் கேட்டல், ஆகிய இறை சிந்தனையுடன் நீரும் குடிக்காமலிருந்து மாலை பூசை தரிசனம் முடிந்ததும் பானக்கம்= பானகம் எனும் நீராகாரத்தை மட்டும் அருந்தி கடுந்தவமிருப்பது

முதல்நாளான அமாவாசையன்றே ஒருநேர உணவுடன் மறுநாளான பிரதமையன்று அதிகாலை ஸ்நானம் செய்து தூய ஆடையணிந்து கோயிலுக்குச் சென்று திரிகரண சுத்தியுடன் விரதமனுட்டிக்கத் தொடங்க வேண்டும். ஆலயங்களில் ஆரம்ப நாளிலேயே சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி ஆறுநாட்களும் நோன்பினைக் கடைப்பிடித்து ஏழாம் நாளான பாரணையன்று அதிகாலை நீராடி அனுட்டானம் செய்து பாரணைப் பூசையை மனதாரத் தரிசித்து வேண்டி காப்பினை அவிழ்த்துத் தர்ப்பையு டன் குருதட்சனை கொடுத்து அடியார்களுக்கு உணவும் கொடுத்துப் பாரணை செய்தலே யாவரும் கைக்கொண்டு வரும் நடைமுறையாகும்.

இது மிக்க மன ஒருமைப்பாட்டுடன் இன்றும் திருச்செந்தூர் முதலாமறு படை வீடுகளிலேயும், இலங்கையில் யாழ் நகரிலுள்ள முருகன் ஆலயங்களிலும், திருகோணமலையிலே வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில் முதலிய ஆலயங்களிலும் இன்றும் நடைமுறையிலுள்ளதைக் காணலாம்.
இவ்வாறு அனுட்டிக்க இயலாதோர் முதல் ஐந்து நாட்களிலும் பகல் ஒருவேளை உணவுட் கொண்டு சூரன் போர்த்தினமான ஷஷ்டியன்று உபவாசம் = அன்னாகாரம், நீரருந்துதல் எதுவுமின்றி உபவாசமிருந்து சூரன் போர் முடிய நீராடிக் கடவுள் தரிசனம் செய்து பானகம் மட்டுமருந்தி விரதமிருக்கலாம். சூரன் போரன்று நித்திரையினைத் தவிர்த்தல் வழமை. ஆனால் இது அனைவராலும் கைக்கொள்ள இயலாத ஒன்றே. இயன்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதே!
விரத உத்தியாபனம்: (விரதத்தினை நிறுத்துதல்)

ஆறு, அல்லது பன்னிரண்டு வருடங்கள் உபவாசமாயினும் சரி ஒருபோதுணவாயினும் இடையில் மாற்றமின்றி அனுட்டித்துக் குறித்த வருடம் பூர்த்தியானதும் விரத உத்தியாபனம் செய்து உரியபடி விரதத்தினை நிறுத்துவதே முறையும் வழமையுமாகும்.

விரதம் தோன்றிப் பரவியமை:
முருகப் பெருமான் தாரகாசுரன் சிங்க முகாசுரன் சூரபத்மன் ஆகியோருடன் ஐப்பசிமாத வளர்பிறை முதலாறு நாட்களில் போரிட்டு வென்றார். கந்தன் கருணையினையும் அவரது பேரருட் செயலையுங் கண்டு களிப் பேருவகை கொண்ட தேவர்களும் முனிவர்களும் இவ்வாறு நாட்களையும் புனித நாட்களாகக் கொண்டு நோன்பு அனுட்டித்தனர். 

இதனையே பூலோகமக்களும் கடைப்பிடித்து அறுமுகப் பெருமானின் திருவருள் பெற்றுய்ய இவ்விரதத்தினை அனுட்டிக்கத் தொடங்கினர்.

விதிவிலக்கு:
இவ்விரத நாட்கள் பெரும்பாலும் ஆறுநாட்கள் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் பஞ்சாங்க நேரக் கணிப்புக்கு அமைய திதிகளின் நேரம் கால அளவு குறைவு ஏற்படுமிடத்து ஐந்து நாட்களும் வரலாம்.
கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்ற ஷண்முகப் பெருமானைத் தாலாட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர், படைவீடுகளும் ஆறு, அவருக்குரிய சக்தி வாய்ந்த மந்திர அட்சரங்கள்-அதாவது எழுத்துக்களும் ஆறு யந்திரத்தில் கீறப்படுகின்ற கோணங்களும் ஆறு, ஷட்கோணம் அறுகோணம் என்பர். கைமேல் பலன் அளிக்கின்ற விரதநாட்களும் ஆறு.

விரதகாரர் பெறும் பேறு:
கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர், வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப் பெறுவரெ ன்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலக மெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”

இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்த கன்னியர்களை மணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரை விரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர். பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள் பொருந்திய ஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.

பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால் ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்த னடியிணை நீழல் சேர்வார் (இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப் போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின் ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப்பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்த சொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்). எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வு பெற முயலுவோமாக.

No comments:

Post a Comment