Tuesday, March 26, 2013

கமலாத்மானந்தர்



* எவரிடமும் இனிமையாகப் பேசுவது தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முதல்படி.

* கடந்த காலம் திரும்புவதில்லை, நிகழ்காலம் விரும்புவதில்லை. காலம் விரைந்து கொண்டிருக்கிறது. காலத்தின் அருமையை உணர்ந்து கடமையை விரைவில் செயல்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். 

* அரிய செயல்களைச் செய்ய வேண்டுமானால் மனம் ஒருமுகப்பட வேண்டும். மனஇறுக்கம், மனதை ஒருமுகப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை.

* ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன் அதனால் ஏற்படும் நல்லனவற்றையும், அல்லனவற்றையும் ஆராய்ந்து தீர்மானித்து உரிய காலம் அறிந்து செயல்பட வேண்டும்.

* பிறரை அனுசரித்து வாழ்பவர்கள், விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள், சரியாகவும் ஆழமாகவும் சிந்திப்பவர்கள், உழைப்பும் முயற்சியும் உள்ளவர்கள் மட்டுமே வெற்றிகளைக் குவிக்கிறார்கள்.

* எந்த அளவுக்கு உயர்வான சிந்தனைகள் நம்மிடம் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே நாம் சாதனைகளைப் படைக்க முடியும்.

* தூங்குவதும் ஏங்குவதும் வாழ்க்கையில் எதையும் தேறவிடாது. உள்ளத்தின் ஊக்கத்திற்கு ஏற்பவே ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகள் அமைகின்றன. அந்த முயற்சிகளுக்கேற்பவே அவன் பெறும் வெற்றிகளும் அமைகின்றன. 

* நாம் உயர்ந்தவராக விரும்பினால் உயர்ந்தவற்றையே நாம் சிந்திக்க வேண்டும். உயர்ந்தவற்றையே பேச வேண்டும், உயர்ந்தவற்றையே செயல்படுத்த வேண்டும்.

* வியாபாரம் செய்வதற்கு பணம் தேவை. குழந்தைக்கு தாயன்பு தேவை. மனிதன் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கு பெரியோர் தொடர்பு கட்டாயம் தேவை.

* சின்னஞ்சிறு சிந்தனைகளில் மனம் உழன்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, உயர்ந்த சிந்தனைகளில் மனதை வைத்திருப்பதற்கு, முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும்.

* அற்ப விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள் பெரிய சாதனைகளைப் படைக்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

* கண்ணாடியில் தூசு படிந்திருந்தால் அதில் உருவம் சரியாகத் தெரியாது. அதுபோல் எதிர்மறையான சொல், செயல், சிந்தனைகள், தீய எண்ணங்கள், தீய இயல்புகள் ஒருவரிடம் இருந்தால் அவரது ஆற்றல் வெளிப்படாது.

* தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும். சுடச் சுடத்தான் பொன் ஒளிரும். அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணக்கும். உழைக்க உழைக்க மனிதன் உயர்வு பெறுகிறான்.

* தோல்வி என்பது ஒரு பாடம். பல அறிவியல் கண்டுபிடிப்புகள், பல பரிசோதனைகளின் தோல்விகளிலிருந்து கிடைத்த வெற்றிகள் தான், துன்பப்படாமல், உழைக்காமல் சிரமப்படாமல் உலகில் அரிய சாதனைகளைப் படைக்கவே முடியாது.

* உறுதியான வைரம் பாய்ந்த நெஞ்சம் உடையவர்கள் மகத்தான வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள். அலைபாயும் மனம் உள்ளவர்கள் தோல்வியைத் தழுவுபவர்களாக இருப்பார்கள்.

* குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசுவதும், குடத்திலிட்ட விளக்காக ஒளி மங்கிப் போவதும் அவரவர் கையில் தான்.

* ஊக்கம் இல்லாதவனிடம் முயற்சி இருப்பதில்லை. முயற்சி இல்லாதவனிடம் ஆக்கமும் இல்லை, செழிப்பும் இல்லை.

* "நான்உயர்ந்தவன்'என்ற எண்ணத்துடன், முழு ஊக்கத்துடன் செயல்புரிய வேண்டும். அப்படிசெய்தால் தோல்வியின் நிழல் கூடநம் மீது படியாது.

No comments:

Post a Comment