Friday, March 22, 2013

நீதிக் கதைகள்


உழைப்பே அதிர்ஷ்டம் தரும் 

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயனைத்தான் மிகப்பெரிய புதையல்

குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

நீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.

சொல் புத்தி

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

எலியும் பாலும்

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

சிங்கமும் பங்கும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்".

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்".

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?"

"மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் கழுதாய்?”

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!


உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

யோசிக்காத விவசாயி

விவசாயத்திற்க்கு நரி மேல் கோபம். அவன் கோழிகளை அடிக்கடி பிடித்து எலும்பைக்கூட விட்டு வைக்காமல் தின்றுவிடுகிறது என்று கோபம். இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று ஒருமுறை அதற்காக இரவில் பதுங்கிக் காத்திருந்தான். நரி வந்தபோது அதன்மேல் சாக்கு போர்த்தி லபக்கென்று பிடித்துவிட்டான். பிடித்து என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தான். அதன் வாலில் மண்ணெண்ணையில் நனைத்த துணியைச் சுற்றிப் பற்ற வைத்துவிட்டான்.

“என் கோழிகளைத் தினறாய் அல்லவா? ஒழிந்து போ!” என்று அதைத் துரத்திவிட்டான்.

நரி தன்னையறியாமல் விவசாயிகளின் வயலுக்குள்ளேயே நுழைந்தது. பயிர் முதிர்ந்து ஒரு பக்கம் நெற்குவியல், மறு பக்கம் வைக்கோல் போட்டு முதிர்ந்த கதிர்கலைக் களையறுக்க காத்திருந்த நேரம் அது. நரியின் வரவால் ஏக்கர் முழுக்க தீ பரவி தானியமெல்லாம் கருகிச் சாம்பலானது.

விவசாயிக்கு நரியைப் பழிவாங்கியதில் நஷ்டம்தான் பன்மடங்கு.

நீதி : பிறரைப் பழிவாங்கும்போது முதலில் தனக்குத் துன்பம் வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

நண்டு போதனை

அம்மா நண்டு தன் மகனைப் பார்த்து “மகனே ! ஏன் சைடு வாங்கிக்கொண்டு நடக்கிறாய்! ஏன் நேராக நடவேன்” என்றது. மகன் “உண்மைதான் அம்மா, நேராக எப்படி நடப்பது என்று சொல்லிக்கொடுத்தால் நிச்சயம் நான் அவ்வாறே நடந்து காட்டுகிறேன்” என்றது. தாய் நண்டு என்ன தான் முயற்சிச்சாதலும் நேராக நடக்க வரவில்லை. பக்கவாட்டிலேதான் செல்ல முடிந்தது. “சரி, இப்படியே நடந்து தொலை” என்றது.

நீதி : உபதேசத்தைவிட உதாரணம் சக்தி வாய்ந்தது.

ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.


யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

விருப்பப் பட்டியல் (மூலம்: ஹிந்து யங் வர்ல்ட்)

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

நீதி: அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய், பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

 மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.

"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் 'தலை' கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது 'உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு' என்று கட்டளை போட்டது 'தலை'. ஏனென்று மன்னன் கேட்டான். 'நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்' என்று பதில் வந்தது. 'இதற்குத் தீர்வே இல்லையா?' என்று மன்னன் முறையிட்டான். 'தலை' முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு 'மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்' என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் 'ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?' என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். 'வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்' என்று சொல்லி விட்டார்.

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை 'எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்' என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. 'எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது' என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே 'ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன' என்று சொன்னது. அப்போது மன்னன் 'நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்' என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் 'கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன' என்றது.

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது


எலியும் பாலும்!

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

சிங்கமும் பங்கும்!

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

யானையின் அடக்கம்!

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment