மென்திறன் சிந்தனைகள் என்ற வலைபதிவுகளில் ஆன்மிக விஷயங்கள் இடம் பெறுவது எவ்வாறு என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். மென்திறனும் ஆன்மீகத்தின் ஒர் அங்கம் என்பதால், இந்த விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
தன்னை மீறிய சக்திகளைப் பற்றிய நம்பிக்கைகளில் மூன்று நிலைபாடுகள் இருப்பதாக உணர்கிறேன்.
ஆத்திகம்:- மிக அதிக மக்கள். மதம் சார்ந்து ஒரு சில முறைகளில் கடவுளை வழிபடுவது. இதில் சடங்குகள், வழிபடும் முறைகள் என்று பலவிதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும்.
நாத்திகம்:- கடவுள் நம்பிக்கை இல்லாத நிலை குறிப்பாக ஆத்திகத்தை எதிர்க்கும் நிலையாகக் கொள்ளலாம்.
ஆன்மீகம்:- நாத்திகம், ஆத்திகம் இரண்டிற்கும் அப்பாற்பட்டு, இறைநிலையை அகத்திலும், புறத்திலும் உணர்ந்து, உடல், மனம், புத்தி,ஆத்மா எல்லாவற்றையும் உணர்ந்த நிலை. இந்த நிலையை எட்டுவது கடினம் என்று ஆத்திகர்கள் சொல்லி வருகிறார்கள். நாத்திகர்கள் இதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.
உண்மையான ஆன்மீக வாதிகள், ஆத்திகர்களையோ, நாத்திகர்களையோ பொருட்படுத்துவதில்லை.
ஆத்திகர்கள் ஆன்மீக விஷயங்களை தமதுடைமையாக்கி தங்களுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் வண்ணம் ஆன்மிக விஷயங்களை ஒரு கருவியாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உணர்ந்து கொள்வது மிக மிகக் கடினம். உளவியல் ரீதியாக நமக்குள் ஐந்து வயதுக்குள் புகுத்தப்பட்டுள்ள நம்பிக்கைகளை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள அசாதாரண மன பலம் வேண்டும். ஐந்தில் வளைந்தது ஐம்பது வரை வளைந்தே இருக்கும்.
ஆத்திகத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள விஷயங்களில் காயத்ரி மந்திரமும் ஒன்று. காயத்ரி மந்திரம் காயத்ரிதேவியின் வழிபாடு என்று நினைத்திருந்தேன். தற்செயலாக சின்மயா மிஷன் வெளியீடு ஒன்று என் கைகளில் கிடைத்தது. மந்திரத்தின் பொருளில் காயத்ரி தேவியோ மற்றெந்த உருவகக் கடவுளோ இல்லையென்பது எனக்கு மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தரப்படவில்லை. திரண்ட கருத்தாக அர்த்தம் சொல்லப்பட்டிருந்தது. கடவுள் நம்பிக்கை என்ற தளத்திற்கு அப்பால் விளக்கம் செல்லவில்லை.
இந்த மந்திரத்தைச் சொல்வதால் புத்தி கூர்மை உண்டாகும் என்ற நம்பிக்கையை வலியுருத்தியே விளக்கம் நின்றது. எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியே தேவையில்லை என்ற ரீதியில் முடிக்கப்பட்ட விளக்கம்.
இது குறித்த பல புத்தகங்களிலும், இது இந்து மத மந்திரமாகவும், இந்துக் கடவுள்களின் அருள் கிடைக்கச் சொல்லப்படும் சடங்குகளாகவும் மத ரீதியில் விளக்கங்கள் இருந்தன.
கோவிலில் உள்ள குருக்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதன் அர்த்தம் என்ன என்பதே தெரியவில்லை. எனவே இது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றே ஒரு கால கட்டத்தில் முடிவு செய்துவிட்டேன். ஆனால் கடவுளை சூரிய ஒளி வடிவில் மனத்திற்குள் வாங்கி ஜபம் செய்து பலன் பெருவது என்ற சிறிய தெளிவு எனக்குள் இருந்தது.
இருப்பினும் காயத்ரி ஜபத்தைப் பற்றி எனக்கு ஐயம் தீர்ந்த பாடில்லை. புத்தி கூர்மை எப்படிக் கிடைக்கப் பெறுகிறது என்ற ஐயம் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நாள், ஒளிக்கும் புத்திக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்று இணையதளத்தில் தேடுதல் மேற்கொண்டேன். இதன் மூலம் நான் தெரிந்துகொண்ட உண்மை என் ஐயப்பாட்டை நீக்கும் வண்ணம் இருந்தது.
ஓரளவு பிரகாசமான ஒளியைப் பார்க்கும் பொழுது, நமக்குள் மெலோடோனின் என்ற தூக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் அளவு குறைக்கப்பட்டு செரோடோனின் என்ற உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஹார்மோனின் உற்பத்தி அதிகமாகிறது.
இந்த முறையில் தான் SAD (Seasonal Affective Disorder) என்று சொல்லப்படும் பனிக்கால மன அழுத்த நோய்குச் சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. செரோடோனின் ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருந்தால், புத்தி கூர்மை அதிகரிக்கத்தானே செய்யும்.
இந்த உண்மையை உணர்ந்து, சூரிய சக்தியின் மூலம், நம் புத்திக்கூர்மையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயல் விளக்கமான ஒரு மிகப் பெரிய உண்மை தான் காயத்ரி மந்திரம்.
காயத்ரி மந்திரம்
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: பிரச்சோதயாத்
சரியான உச்சரிப்புக்கு வகைசெய்ய ஆங்கிலத்தில்
Thath Savithur Varennyam
Bhargo Thevasya Theemahee
Thiyo Yo Nah Prachothayaath
பொருள்
நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும், அருள்மிகு சவிதூரிலிருந்து கிடைக்கப் பெரும் ஒளியை தியானிக்கின்றோம்.
சவிதூர் என்பது சூரியனைக் கடவுளாகக் குறிக்கும் சொல்.
இந்த மந்திரம் நிகழ்காலச் செயலாக இயற்றப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். சூரியனுடைய ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். இமைகளின் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளி அளவே ஹார்மோன்களைச் சமன் படுத்தப் போதுமானது.
இந்த மந்திர ஜபப் பயிற்சி யாரெல்லாம், எப்படி எத்தனை முறை செய்ய வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்,
இந்த விஷயத்தை என்னுடைய ஆங்கில வலைப் பதிவில் ஏற்கெனவே விளக்கி இருக்கிறேன்.
வெறும் நம்பிக்கைகளை நம்பினால் நம்புங்கள் என்றபாணியில் சொல்லிவிட்டுப் போய்விடலாம். உண்மைகளை, உணர்வதற்கான பாதையை மட்டுமே காட்டலாம். இனிவரும் கருத்துக்களைப் படிக்க முற்படுபவர்கள், இந்த தொகுப்பின் முதல் பகுதியைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.முதல் பகுதிக்குப் பின்னூட்டம் எழுதி என்னை ஊக்குவித்த வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி.
முதல் வரியைக் குறிப்பிடவில்லையே ஏன்? இந்த மந்திரத்தை அறிந்தவர்களாக இருந்தால் இந்தக் கேள்வி மனதில் எழும்.
சூரிய ஒளியில் நின்றுகொண்டு " நம்முடைய புத்தியை ஊக்குவிக்கும் அருள்மிகு சவிதூரிலிருந்து கிடக்கப்பெறும் ஒளியைத் தியானிக்கிறோம்" என்று சொல்லிக்கொள்வதே மந்திரம்.
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
தியோ யோந: பிரச்சோதயாத்
இதைச் சொல்லி முடிப்பதற்கு 10 வினாடிகளே போதுமானது.ஆனால் அலைபாயும் மனதை தியான நிலைக்குக் கொண்டுவர 10 வினாடிகள் போதுமா?
படைக்கப்பட்ட எல்லாமுமே நகர்ந்து கொண்டிருந்தால் நகர்ந்து கொண்டே இருக்கும், கிடந்தவண்ணம் இருந்தால் கிடந்தே இருக்கும். அவற்றின் மேல் ஏதேனும் விசைகள் செயல்ப்ட்டால் இந்தநிலைகள் மெதுவாகவே மாறும். அதுபோலவே எப்போதும் இயக்கத்தில் இருக்கும் மனதைச் சட்டென்று தியான நிலைக்குக் கொண்டுவரமுடியாது.
சக்தி வாய்ந்த ஒளிக்கதிர்களின் முன் இருந்தால், குறைந்தது 100 விநாடிகளில் மன ஓட்டத்தைத் திசைத் திருப்ப முடியும்.
இந்த அடிப்படையில் திரும்பத் திரும்ப மந்திரத்தை சங்கல்பம் செய்தால் 100 வினாடிகளில் 10 முறை மந்திரம் ஜெபிக்க முடியும்.
மனதை ஒரு பொருளின் மீது நிறுத்த முயற்சி செய்து பாருங்கள். எகிறி ஓடத்தான் பார்க்கும். தியான முறைகளில் ஒரு பொருளின் மீது மனதை நிறுத்துவதைவிடச் சிறந்த முறை இருக்கிறதா?
காயத்ரியில் ஒளியைத் தியானிக்க வேண்டும். அப்படியென்றால் இதுவும் மனதை நிறுத்த முயற்சி செய்வது போலாகிவிடுமல்லவா?
ஒளியைத் தியானிப்பதனையும் கடந்து ஏதாவது சிறப்பு காயத்ரியில் இருக்கிறதா?
சங்கல்பம் செய்வதில் நம் புத்தியைப் பற்றியும் இருக்கிறதே.
மனது, புத்திக்கும் ஒளிக்கும் இடையே ஒரு நேர்கோட்டுப் பதையை தியானிக்க முற்படும். சங்கல்பத்தில் தன் நிலை உணர்வையும் சேர்த்துக் கொண்டால், நேர்கோட்டுப்பாதை முக்கோணப் பாதையாக உருமாருவதை உணரலாம்.
முக்கோணப்பாதை மனதை சுழற்சிக்கு வழிசெய்யும். இயக்கத்தில் சுழற்சி என்று ஆகிவிட்டாலே சுழற்சி மையம் ஒன்று அமைந்துவிடும். இந்த மையத்தைச் சுற்றி மனம் எளிதாக சுழன்று தியானம் சுலபமாய் கைகூடும்.
தன் நிலை உணர்வைக் குறிக்க
ஓம் பூர் புவ: சுவ:
(OM BHUR BHUVAHA SUVAHA)
என்று மனதின் நான்கு நிலைகளையும் உள்ளடக்கிய சொற்றொடர் காயத்ரியின் முன்னால் இணைக்கப்படுகிறது.
ஓம்- சிந்தனையற்ற விழிப்பு நிலை.
பூர் - நிகழ்காலத்தில் செயலாற்றலில் ஈடுபட்ட நிலை
புவஹ- கனவும்,கற்பனையும் ஆகிய நிலை
சுவஹ- உறக்கநிலை.
ஓம் பூர் புவ: சுவ: என்ற சொற்றொடர் இறைவழிபாட்டிற்கு சொல்லப் படும் மந்திரங்கள் அத்தனையிலும் முதல் வரியாகி நிற்கிறது.
ஓம் பூர் புவ: சுவ: சேர்த்து ஒரு முறை காயத்ரி ஜபம் செய்ய 14 வினாடிகள் ஆகும். 10 முறை ஜபம் செய்ய 140 வினாடிகள் அதாவது 2½ நிமிடமே தேவைப்படும். இந்தக் குறைந்த பட்ச அளவே போதுமானது. இந்த அனுபவம் சுகமாகப் பட்டால் 28 முறை சொல்ல 6½ நிமிடம் அதாவது ¼ நாழிகைக்கு கணக்கு வரும். மனம் முழுவதுமாக அமைதியடைந்து அமைதியுணர்வு நெடுநேரம் நீடிக்க 1 நாழிகை நேரம் தியானம் தேவைப்படுவதை அனுபவத்தில் உணர்ந்ததால், 108 முறை காயத்ரி சங்கல்பம் செய்வது பரிந்துரைக்கப் படுகிறது போலும்.
108 முறை செய்வதற்கு அதிகாலை நேரமோ, அந்திமாலையோதான் உகந்த நேரம். இந்த அளவு உலக விஷயங்களில் பற்றற்ற நிலையைக் கொடுக்கக் கூடும்.
சாதரணமாக 10 முறை சங்கல்பம் என்பது தினசரி பயிற்சிக்குப் போதுமானது.நின்றுகொண்டே கூடச்சொல்லி முடித்துவிடலாம்.
சமஸ்கிருத ஒலிச் சேர்க்கையால் 24 எழுதுக்களில் அமைந்த காயத்ரி மந்திரத்தின் ஒலியின் அதிர்வுகள், நம்முடைய சுவாசமண்டலத்தை பரிசுத்தமாக்குவதை உணரமுடிகிறது. தொண்டையில் சளியோ, இருமலோ இருக்கும் காலங்களிலும், ஜலதோஷம் பிடித்துள்ள நாட்களிலும், எழாவது - எட்டாவது முறை மந்திரம் சொல்லும் பொழுதே தொண்டை அடைத்துக்கொள்வதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஜபம் முடிந்தவுடன், குரல் மிகத்தெளிவாக மாறி இருப்பதையும், சுவாசம் நன்றாக இருப்பதையும் உணர முடிகிறது.
காயத்ரியின் உண்மையை உணர்ந்து கொள்ள இந்த இரட்டைப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
No comments:
Post a Comment