Friday, March 15, 2013

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள்


எந்த ஒரு நாட்டினுடைய வரலாறும், போர்களின் வன்மத்தால் சற்றே குருதிக்கரை படிந்திருக்கும். அப்படி போர்களாலோ, போராட்டங்களாலோ சிறிதளவேனும் நிரப்ப்படாத பக்கங்களைக் கொண்ட ஒரு வரலாற்றைக் காண்பதென்பது மிக அரிதே.  மனித இனத்தின் ஆரம்பத்திலிருந்தே போர்களுக்கான காரணங்களும், முறைகளும் அதற்கான விளைவுகளும் இருந்து கொண்டும், புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும்தான் இருக்கின்றன.
முதல் போர் அல்லது சண்டை எங்கு, எப்போது, யாருக்கிடையில் ஏற்பட்டது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனிதன் குழுவாக பிரிந்து வாழ ஆரம்பித்த்திலிருந்தே இந்த போர்கள் அல்லது சண்டைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றே ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவேளை, ஒன்றாக இருந்தவர்கள் குழுவாக பிரிந்ததற்கும் கூட, ஒரு சண்டை காரணமாக இருந்திருக்கலாம்
இப்படிப்பட்ட இந்தப் போர்களின் தன்மையே சற்று அலாதியானதுதான். உயிரற்றதாக இருந்தாலும் தனக்கென்று சில குணநலன்களைக் கொண்டவை. தோற்றவர்களை பெரும்பாலும் கெட்டவனாகவும், வென்றவர்களை நல்லவனாகவோ, நியாயமானவனாகவோ காட்டும் இதன் சக்தி இன்றளவும் (ஈழம் வரை) தொடர்கிறது. வரலற்றின் பக்கங்களில் சற்றே சார்புத்தன்மை தென்படுவதற்கும் இந்த போர்களும், போராட்டங்களும் தளங்களாக அமைந்துவிடுகின்றன. பெண்களைப் போன்றே போதையூட்டக் கூடியதாக இருக்கிறதோ என்னமோ, ஆனால் சில போர்கள் ஏற்படுவதற்குக் காரணமே பெண்களாக அமைந்திருப்பதையும் புராணங்களிலோ அல்லது வரலாற்றினிலோ பார்க்க நேரிட்டுள்ளது!
போர்கள்
போர்கள்
இந்தப் போர்களும் அதன் முடிவுகளும் பல பாடங்களை மட்டுமல்ல சில பல சந்தேகங்களையும் என்னுள்ளே ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாவதுதான் போர்களின் வசீகரம்! சாதரண மனிதனிடத்தில் இந்தப் போர்களும், சண்டைகளும் சற்றே வசீகர சக்தியைக் கொண்டுள்ளனவோ என்ற ஐயத்தை என்னுள்ளே ஏற்படுத்தியிருக்கின்றன. என்னதான் அமைதியானவனாகவோ, நல்லவனாகவோ காட்டிக் கொண்டாலும் பல சமயங்களில் மனிதன் சண்டையில் ஈடுபடாமல் போவதற்குக் காரணம் தோற்றுவிடுவேனோ என்கிற ஐயமா அல்லது உண்மையிலேயே அவனது அமைதிக் குணமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியிருக்கிறது?
நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, நம் நாட்டின் பெருமைமிகு வாக்கியமாக “வேற்றுமையில் ஒற்றுமை”  இருப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு பட்ட மக்கள், பல்வேறு பட்ட கலாச்சாரம், பல்வேறு மதங்கள் கொண்ட சூழ்நிலை நிலவுவதற்கு ஒரு வகைக் காரணமாக இருந்த்து இந்தப் போர்கள்தான் என்ற நிலையைத் தாண்டி, இன்று வேறுபட்ட மதம் என்கிற ஒரு அற்ப காரணம் மனிதர்களுக்குள் பெரிய போர்களை ஏற்படுத்தும் நிலை இருப்பதென்பது மிகப் பெரிய நகை முரண்
நம் நாட்டின் வரலாறு, மதங்கள், அரசியல் ஆகியவற்றின் பக்கங்களில்  இந்தப் போர்களும், போராட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, பல பக்கங்களையும் நிரப்பிச் சென்றுள்ளது. அசோகர், அக்பர், அவுரங்கசீப், கஜினி போன்றோரின் படையெடுப்பைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணியிலும், புறநானுற்றிலும் தினவெடுத்த தோள்களின் வலிமையையும், ரத கஜ பதாதிகளையும், வீரமரணத்தின் சிறப்பினையும் தமிழில் படிக்காமல் பள்ளியை தாண்டியிருக்க முடியாது. நம் நாட்டில் இரு பெரும் இதிகாசங்களாக கொண்டாடப்படுகின்ற இரு புராணங்களும் கூட போரின் காட்சிகளை பெருமளவு விவரிக்கின்றன.
பொதுவாக மகாபாரதம் போன்ற நூல்கள் மூலமாக சொல்லப்படுகின்ற அறிவுரைகள் அல்லது நல்லுரைகள் அளவிற்கு அதனைப் பற்றிய சர்ச்சைகளும் இல்லாமலில்லை. இது உண்மையா அல்லது கதையா, சாதீய கட்டமைப்புகளைத் தாங்கிபிடிக்கிறது, சில மூட நம்பிக்கைகளை முன்வைக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் இந்த புராணங்கள் மேல் இருக்கின்றன.
இருந்தாலும் விஞ்ஞான ரீதியாக, அறிவியல் ரீதியாக என்று பல துறைகளில் அதன் பங்களிப்பும் சாதாரணமானதன்று. தனிப்பட்ட முறையில் மகாபாரதம் பல விஷயங்களுக்கு காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறது. யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் போன்ற கோள்களை கண்டுபிடித்தது, கம்போடியா, கஜகஸ்தான் மற்றும் ஸ்காண்டிநேவியா போன்ற நிலங்களைக் கண்டுபிடித்தது, கணிதத்தில் பத்தின் அடுக்கு 16 முதல் -16 வரை உபயோகப் படுத்தியது, குந்தியின் மூலம் உடலுறவு இல்லாமலே குழந்தை பிறக்க முடியும் என்கிற மருத்துவ உண்மையைக் கொணர்ந்தது என்று பல கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தாலும் குருஷேத்திரப் போரின் மூலம் இவை உணர்த்தும் சில தத்துவங்கள் மேலும் பல ஆச்சரியங்களையும், அதிசியங்களையும் கொண்டிருக்கின்றன.
இந்நாட்டின் ஒரு பெரும்பான்மை மதத்தினருடைய புனித நூலுக்கு அடிப்படையாக இருந்ததும் இந்தப் போர்தான். குருஷேத்ரப் போருக்கு முன்பு கிருஷ்ணர் நடத்திய உபதேசமே பகவத்கீதையாக உருவெடுத்திருக்கிறது. எங்கோ நடக்கும் குருஷேத்திரப் போரை தன் மனக் கண்ணால் கண்டு திருதராஷ்டிரனிடம் சொல்லிய முறைதான் இன்றைய தொலைக்காட்சி முறைகளுக்கு அடிப்படை என்று கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் உபயோகப்படுத்தியதாக வர்ணிக்கின்ற ராணுவ தந்திரங்களும், போர் முறைகளும், ஆயுதவர்ணனைகளும் இன்றைய நவீன போர் முறைகளையும், ஆயுதங்களையும் (அணு ஆயுதம், வேதியியல் ஆயுதங்கள் உட்பட) ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது
மகாபாரதப் போரில் இரு வகை ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்பட்டன, ஒன்று ஆஸ்ட்ராஸ் எனப்படும் தாக்கும் ஆயுதங்கள், இன்னொன்று சாஸ்ட்ராஸ் எனப்படும் தடுப்பு உபகரணங்கள். நவீன அணுஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆபன்ஹீமர் (Oppenheimer)கூட மகாபாரதப் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் பல இன்றைய நவீன அணுஆயுதங்களின் சக்தியையும் செயலையும் ஒத்திருந்தன என்று சிலாகிக்கிறார் (மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம் இன்றைய அணுகுண்டுகளை ஒத்திருக்கின்றன என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன). திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதங்கள் கடவுள்களிடமிருந்தும், மற்ற மகான்களிடமிருந்தும் பெறப்படுவதும், மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதமுமாகும். எப்படி இன்றைய நவீன ஆயுதங்களை செயல்படுத்த கடவுச் சொல் (Password) போன்றோ அல்லது லாஞ்ச் கீ (Launch Key) போன்று ஒன்று தேவைப்படுகிறதோ அதே போல் இந்த திவ்யாஸ்ட்ராஸ் ஆயுதங்களைச் செயல்படுத்தவும் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாமல் இந்த ஆயுதங்களை செயல்படுத்த முடியாது.
வெறுமனே செயல்படுத்த மட்டுமல்லாமல் ஒரு சில ஆயுதங்களை ஏவியபின்பும் திருப்ப அழைத்துக் கொளளவும் மந்திரங்கள் (நவீனயுகத்தில் புரோகிராம்கள்) இருக்கின்றன. அதே சமயம் ஜேம்ஸ்பாண்ட் படம் முதற்கொண்டு பல படங்களில் காண்பது போல் ஒருவர் ஏவிவிட்ட ஆயுதத்தை இன்னொருவர் இலக்கை விட்டு திருப்பி விடவும் மந்திரங்கள் உள்ளன. அணுகுண்டின் கதிர்வீச்சைக் கூட தடுக்கும் முறை இருப்பது போல் பிரம்மதண்டா போன்ற தடுக்கும் முறை (பிரம்மாஸ்திரத்தின் தாக்குதலில் இருந்து கூட தப்பிக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஆயுதங்களை பெரும்பாலும் குதிரைகள் பூட்டிய தேர்களிலிருந்து இயக்கியிருப்பதை பார்க்கலாம். ஒருவகையில் இவற்றை போர் விமானங்கள் அல்லது ஸ்பேஸ் ஷிப் (விண்கலம்?) உடன் ஒப்பிடலாம். பழங்கலத்தில் குதிரைகள், இப்போது குதிரை சக்தி (Horse Power (HP)) கொண்ட இயந்திரம், மகாபாரதப் போரில் சில தேர்கள் பறக்கக் கூடியவை, நிலத்திலும், வானத்திலும் பயணிக்க்க் கூடிய வாகனங்களை நாம் கண்டுபிடித்திருக்கிறோம், போரின் போது சில தேர்கள் திடிரென்று விண்ணில் மறைந்த விந்தையையும், திடிரென்று எங்கிருந்தோ வந்து தோன்றும் விந்தையையும் காணலாம். ஸ்டீல்த் (Stealth) வகை விமானங்களை கண்டு ஆச்சரியப்படும் நமக்கு இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும் அல்லவா???
ஒரு வேளை திப்பு சுல்தானின் காலத்தின் போது, ஆங்கிலேயர்களை  தாக்குவதற்கு திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் ஆயுதங்கள்தான் இன்றைய ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட காரணம் என்று அப்துல்கலாம் அக்னிச்சிறகுகளில் சிலாகிப்பது போல் மறைமுகமாக இன்றைய நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தாவாகவும் இந்த மகாபாரதப் போரின் ஆயுதங்கள் இருக்கலாம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் போர்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உயரிய குறிக்கோளை அடைய எதிர்படும் தடைகளையும், தீய சிந்தனைகளையும் எதிர்கொள்ள இந்த திவ்யாஸ்ட்ராஸ் மற்றும் சாஸ்ட்ராஸ் வகை  ஆயுதங்கள் என்கிற குணநலன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த விஷயங்களை அடைவதற்கும் அந்த குணநலன்களை கொண்டிருப்பதற்கும் அதிக கவனமும், முயற்சியும், பொறுமையும், அர்ப்பணிப்பும் தேவை. இந்த ஆயுதங்களை நம் வாழ்வில் உபயோகிக்கிறோமோ இல்லையோ ஆனால் இவற்றைக் கொண்டிருப்பதென்பதே நம் வெற்றிக்கு மிக முக்கியமானது (‘You may or may not use your weapons in the war. But it is VERY IMPORTANT that you possess them’!)
வெறுமனே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், பேரழிவு ஆயுதங்களின் கான்செப்ட்டிற்கும் மட்டும் இந்தப் போர்கள் வித்திடவில்லை. நிர்வாகரீதியாக கண்டறியப்பட்ட, கொண்டாடப்படுகின்ற பல நிர்வாகப் பாடங்களையும், தலைமைப் பண்பு தத்துவங்களையும் கூட இந்த குருஷேத்திரப் போரும் மற்ற சில போர்களும் தன்னுள்ளே கொண்டுள்ளது. அப்படி மகாபாரதப் போர் உணர்த்தும் நிர்வாகப் பாடங்கள் என்னென்ன –
மகாபாரதப்போரின் பின்ணனியும் போருக்கான தூண்டுதலும்

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்குமிடையே நடந்த இந்தப் போரில், கவுரவர்கள்தான் இந்தப் போர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். பாண்டவர்களைப் பொறுத்தவரை அவர்கள் போரை வெறுத்தாலும், அது வெறுமனே உரிமைப் போராக மட்டுமல்ல வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது…. போரினைத் தவிர ஒரு துளியளவு நிலம் கூட பெற முடியாது என்ற நிலைக்கு பாண்டவர்களைத் தூண்டினார்கள். கடைசி கட்டமாக வெறும் ஐந்து கிராமங்களுக்கு போரினை விட்டுக் கொடுக்க பாண்டவர்கள் தயாராய் இருந்தும், கவுரவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை., அத்தனை அவமானங்கள் நடந்தாலும், உரிமை மீறல்கள் இருந்தாலும் மூத்த மூன்று பாண்டவர்களும் அந்தப் போர் நடப்பதை விரும்பவில்லை.

அது மட்டுமன்று, பாண்டவர்களைப் பொருத்த வரை அவர்களுக்கென்று எந்த படையோ, அரசோ கிடையாது. ஏறக்குறைய 13 வருடங்கள் நாட்டை விட்டு பிரிந்து இருந்தனர். அவர்களது அனைத்து சக்திகளும் அவர்களுடைய நண்பர்களையும், உறவுகளையும் (மகத, யாதவ, சேடி நாடுகள்…) மட்டுமே நம்பி இருந்தது. அதேசமயம் கவுரவர்களைப் பொறுத்தவரை 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்கள். ஹஸ்தினாபுரத்தின் செல்வங்கள் மட்டுமின்றி, பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் மற்றும் கர்ணனால் துரியோதனனுக்காக கைப்பற்றப்பட்ட பல்வேறு பட்ட நாடுகளின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. இப்படி ஒரு பலமான பிண்ணனியில்தான் அந்தப் போரை கவுரவர்கள் உருவாக்கியிருந்தனர். வீரம், அன்பு, மரியாதை, அடக்கம், பண்பு என்று எல்லா குணங்களிலும் சிறுவயதிலிருந்தே பாண்டவர்கள் அதிக புகழடைந்ததால், கவுரவர்களிடையே ஏற்பட்டிருந்த வெஞ்சினம் அந்தப் போருக்கு வித்திட்டது….

படைபலம்
படைபலத்தைப் பொறுத்த வரை கவுரவர்களின் படைபலம் 11 அக்‌ஷகினியாகவும், பாண்டவர்களது படைபலம் 7 அக்‌ஷகினியாக மட்டுமே இருந்தது (ஒரு அக்‌ஷகினிஎன்பது 21,870 சாரியட்டுகளையும் (chariot), 21,870 யானைகளையும், 65,610குதிரைகளையும், 109,350 தரை வீரர்களையும் (1:1:3:5 என்ற விகிதத்தில்) கொண்டது. இந்த கணக்கீட்டு முறையும் சரி, விகித முறையும் சரி இன்றைய நவீன போர் யுத்திகளில் கூட சிலாகிக்கப்படுகிறது). இது தவிர ஸ்கவுட் எனப்படும் உதவியாளர்கள், இறந்தவர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கி போரில் உள்ளவர்களுக்கு கொடுக்க என்பது போன்ற உதவிகளுக்கு ஈடுப்பட்டிருந்தர்கள், இன்றைய ரெட் கிராஸ் போன்று காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் ஆட்கள் ஈடுபட்டிருந்தார்கள். ஆக இந்த எண்ணிக்கையை 11ஆலும் 7ஆலும் பெருக்கிக் கொண்டு வரும் தொகையை, அதனுடன் உதவியாளர்கள், விலங்குகள், வாகனங்கள் என்று அந்த கூட்டத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? பல மைல்களுக்கு இவையே இடத்தை ஆக்கிரமித்திருக்குமென்பதன்றி போரின் போது இந்த கூட்டத்தின் அசைவும், இடம்பெயர்தலும் நினைப்பதற்கே வியப்பை ஏற்படுத்துகின்றதா?

கவுரவர்களின் தளபதியாக யாராலும் அழிக்க முடியாத பீஷ்மர், எல்லாருக்கும் போர்கலைகளை கற்றுக் கொடுத்த துரோணர், அர்ஜுனனை வில்லில் எதிர்க்கக் கூடிய ஒரே வீரணான கர்ணன், கதாயுதச் சண்டையில் பீமனுடன் சரிக்குச் சமமாக போரிடக்கூடிய, சாதாரணச் சண்டை விதிகளின் படி சாகடிக்க முடியாததுரியோதணன், இரவில் ஒருவராலும் வெல்ல முடியாதவனும், எட்டு சிரஞ்சீவிகளில் ஒருவனும், குரு துரோணரின் புதல்வனுமான அஸ்வத்தமா, எல்லாருக்கும் குருவாக விளங்கியவரும், எட்டு சிரஞ்சீவிகளில் இன்னொருவருமான கிருபாச்சாரியார், நகுலன், சகாதேவனின் தாய்மாமனும், பாண்டவர்களின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தாலும் துரியோதனின் தந்திரத்தால் ஏமாந்து வேறு வழியில்லாமல் கவுரவர்களின் பக்கம் நின்ற ஷல்யாஎன்று மிகச் சிறப்பு வாய்ந்த தளபதிகள் பலர் இருந்தனர். இது தவிர கிருஷ்ணரது படையும் கவுரவர்களுக்கே!

பாண்டவர்கள் பக்கம் அர்ஜுனன், பீமன், பீஷ்மரை பழிவாங்கச் சபதமெடுத்தசிகண்டிதிரவுபதியின் சகோதரனும், சிகண்டியின் சகோதரனுமானதிருஷ்டதயும்னா, அர்ஜுன்னின் புதல்வன் அபிமன்யு, பீமனின் புதல்வன்கடோத்கஜன், அர்ஜுனனின் உற்ற நண்பணும், கிருஷ்ணருடன் கடைசி கட்ட அமைதி முயற்சியில் ஈடுபட்டவனும், மகாபாரதப் போரின் போது தொடர்ச்சியாக 101 முறை துரோணரின் வில்லை உடைத்தவனுமான சத்யகி ஆகியோர் இருந்தனர். இது தவிர கவுரவர்கள் அலட்சியமாக கருதிய கிருஷ்ணர்அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார்

மகாபாரதப் போர்
மகாபாரதப் போர்
போரின் முடிவு
18 நாட்கள் நடந்தப் போரில் பாண்டவர்கள் பக்கம் அபிமன்யு, கடோத்கஜன், இராவண், துருபதன் என்று பல முக்கியமானவர்கள் இறந்தாலும், கவுரவர்கள் பக்கம் வெறுமனே மூன்று முக்கிய தலைவர்களைத் (அஸ்வத்தமா, கிருபாச்சாரியார், கிரிதவர்மா) தவிர அனைவரும் கொல்லப்பட்டனர்.

போரின் படைபலத்தின் எண்ணிக்கையிலோ, சக்தியிலோ, பெறக்கூடிய உதவிகளிலோ உண்மையில் பாண்டவர்களை மிஞ்சியவர்களாகத்தான் கவுரவர்கள் இருந்தனர். இருந்தும் பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது???? பாண்டவர்களின் முக்கிய வீரர்களை சரிக்குச் சமமாக எதிர்க்கக் கூடிய வீரர்கள் கவுரவர்களிட்த்தில் இருந்தும் அவர்கள் தோற்கக் காரணம் என்ன? அவர்களுடைய செயல்களும், இந்தப் போரும் வெறுமனே போரின் முடிவினை மட்டும் தந்திடவில்லை, மறைமுகமாக இன்றைய நிர்வாகத் தத்துவங்களையும், பாடங்களையும் உள்ளடக்கிச் சொல்லியுள்ளது!!!!

1. போர் ஆயத்தம் (Preparation)
கவுரவர்களைப் பொறுத்த வரை தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற அதிக நம்பிக்கையில் இருந்தனர். இதற்கு அவர்களிடம் இருந்த அதிக படைபலமும் ஒரு காரணம், இது தவிர துரியோதனுக்காக கர்ணன் பல்வேறு நாடுகளையும், செல்வங்களையும் வென்று அவர்களது படைகளையும் கவுரவர்களுடன் இணைத்தாலும், இந்தப் போர்கள் மூலமாக கவுரவர்களுக்கு படைச் சேதமும், அதிக செலவுகளும் ஏற்பட்டன. பல நாடுகளை வென்றாலும், மறைமுகமாக அவை கவுரவர்களுக்கு, பல புதிய எதிரிகளையும் கொண்டுவந்தது. வென்ற நாடுகளும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரமும் பிண்ணனியும் இருப்பது, எண்ணிக்கை அதிகம் கொண்ட படையில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாத தன்மையையும் கொண்டு வந்தது.

பாண்டவர்களோ, போரை அறவே வெறுத்தவர்களாக இருந்தாலும், தாங்கள் நாட்டை விட்டு வெளியே இருந்த காலங்களில் தங்களது சக்தியை அதிகரித்துக் கொண்டனர். அர்ஜுனன் ஏற்கனவே வில்வித்தையில் மிகத் திறமைசாலியாக இருந்தாலும், பல செயல்களின் மூலம் திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதங்களை அதிகம் பெற்றான் (திவ்யாஸ்ட்ராஸ் பற்றி முதல் பகுதியிலேயே சொல்லியிருப்பேன்), பீமனோ தனது சகோதரனான அனுமனை சந்தித்து ஆசீர்வாதமும் அதிக சக்தியையும் பெற்றான். இது தவிர 13 ஆண்டுகளில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளும் நட்புகளும் அவர்களுக்கு போரில் பெருமளவு கைகொடுத்தன. தருமனோ பல்வேறு ரிஷிகளையும், பெரியவர்களையும் சந்தித்து எந்த பகடை ஆட்டம் எல்லாவற்றுக்கும் காரணமாய் அமைந்ததோ, எந்த பகடையில் மனைவி உட்பட அனைவரையும் தோற்றார்களோ அந்த பகடை ஆட்டத்தில் யாராலும் தோற்கடிக்க முடியாதவனாய் மாறினான். ஒருவேளை மீண்டும் பாண்டவர்கள் பகடை ஆட்டத்திற்கு இழுக்கப்பட்டால் அப்போது அவர்கள் கண்டிப்பாக ஜெயித்திருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கினான்…

எந்த ஒரு குறிக்கோளுக்கும் நீங்கள் எந்தளவு உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதே உங்களது வெற்றிக்கான முதல்படி. தன்னுடைய பலவீனத்தையும், எதிரியின் பலத்தையும் அறிந்திருக்காத யாராலும் எந்த ஒரு போட்டியிலும் வெல்ல முடியாது. இங்கே பாண்டவர்கள் தங்களது சக்தியை மட்டும் அதிகரித்துக் கொள்ளவில்லை, மாறாக தருமர் செய்தது போன்று தங்களது பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்டார்கள். போரோ, பகடை ஆட்டமோ, சமாதானமோ என்று எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவர்கள் தயார்நிலையில் இருந்தார்கள்….

2. துணைகள் (Allies)
கவுரவர்கள் அந்த காலகட்டத்தின் ஒரு மிகப்பெரிய ஆட்சியாக விளங்கிய போதும், புதிய சக்தி வாய்ந்த துணைகளை ஏற்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். தவிர கர்ணன் நடத்திய பல போர்கள் புதிய எதிரிகளை உருவாக்கியது. அவர்களுக்கு இருந்த துணையெல்லாம் பழைய துணைகளான சகுனியின் காந்தார நாடு, கம்போடிய நாடு மற்றும் சிந்து அரசு மட்டுமே. இது தவிர அங்கு முடிவெடுக்கும் அதிகாரம் முழுக்க ஒற்றைப் புள்ளியிலேயே முடங்கி கிடந்தது (Centralized power system).

பாண்டவர்களுக்கோ, அவர்களுக்கென்று தனி நாடோ பெரிய செல்வங்களோ ஒன்றும் இல்லாவிட்டாலும் பல்வேறு புதிய, பழைய துணைகள் அவர்கள் ஏற்படுத்தி இருந்தனர். திரவுபதியை மணந்ததன் மூலம் கிடைத்த பாஞ்சாலஅரசின் நட்பு, அர்ஜுன்னுக்கும் சுபத்ராவுக்கும் நடந்த திருமணத்தால் உறவானதுவாரகா, சகதேவனின் திருமணத்தால் இணைந்த மகதம், நகுலனின் திருமணத்தால் நட்புற்ற சேடி நாடு, பீமனின் திருமணத்தால் இணைந்த காசி, தருமருக்கும் தேவிகாவுக்கும் நடந்த திருமணத்தால் உறவான கேகய நாடு, அபிமன்யுவின் திருமணத்தால் இணைந்த மட்சயாராட்சத குலப் பெண்ணை பீமன் மணந்ததால் அந்த சமூகம் முழுக்க பாண்டவர்களுடன் நட்பு பூண்டது, அர்ஜுனனின் இன்னொரு திருமணத்தால் இணைந்த நாகர்கள் இப்படி பல துணைகளை பாண்டவர்கள் உருவாக்கிக் கொண்டனர். ஏறக்குறை எல்லா நாடுகளுமே இந்தப் போரில் அவர்களுக்கு உதவின. சொல்லப் போனால் நாடே இல்லாத பாண்டவர்களுக்கு 7 அக்‌ஷகினி அளவிற்கு படைபலம் வந்ததே இந்தத் துணையால்தான்!!!

தகுந்த துணைகள்தான் ஒரு வெற்றிக்குக் காரணம் என்பது தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் மிகப் பொருந்தும். பல நிறுவனங்கள் தகுந்த துணையுடன் கூட்டுவணிக முறையில் (Partnership program) ஈடுபடுவதால் நல்லதொரு வெற்றியை அடைந்திருக்கின்றன. SAPமுதற்கொண்டு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த Partnership program ஐ தங்களது விற்பனை மற்றும் விநியோக ஊடகமாக (Sales channel and Distribution channel) பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கின்றன. நிறுவன வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கான (ERP) மென்பொருட்களோ, தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களோ (custom made or Tailor made)  எந்த வகை பொருட்களையும் அளிக்கும் பல மென்பொருள் நிறுவனங்கள் இந்த துணைகளின் (partners) உதவியுடன்தான் சாதித்திருக்கின்றன….

3. தலைமை (Leadership)
கவுரவர்கள் தங்களது ஆட்சிக் காலத்தின் போதும் சரி, போரின் போதும் சரி ஒற்றைப் புள்ளி தலைமை முறையிலேயே இயங்கினர் (Centralized leadership). அவர்களுடைய 11 அக்‌ஷகினிகளுக்கும் ஒருவர் மற்றுமே தளபதியாக இருந்தனர். ஒருவர் இறந்தாலோ அல்லது காயம்பட்டாலோ மட்டுமே இன்னொருவர் அந்த இடத்தை நிறைவு செய்தார் அவ்வளவே. 18 நாட்கள் நடந்தப் போரில் பீஷ்மர் – 10 நாட்கள், துரோணர் – 5 நாட்கள், கர்ணன் – 1.5 நாட்கள், தளபதியே இல்லாமல் – 0.5 நாள், ஷல்யா – 1 நாள், 18வது நாள் இரவு (அஷ்வத்தமா) என்று தலைமை தாங்கினர். தனிப்பட்ட முறையிலேயே பீஷ்மர் பாண்டவர்களின் படைக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணினாலும் அவரது வீரமோ, கணைகளோ பாண்டவப் படைகளின் முக்கியத் தலைவர்களை நோக்கிப் பாய வில்லை. அதேசமயம் அந்த முக்கிய வீர்ர்களை சந்திக்கக்கூடிய தைரியமும், சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கியிருந்த கர்ணனோ, பீஷ்மர் தலைமை தாங்கும் வரை போருக்குள் நுழையக் கூடாது என்ற கட்டளைக்கு உள்ளாகியிருந்தான். இன்றும் பீஷ்மரும், கர்ணனும் இணைந்து நின்று போரைச் சந்திருந்தால் போரின் நிலையே மாறியிருக்கும் என்போரும் உண்டு, ஆனால் அது நடைபெறவில்லை…
பாண்டவர்களோ பொறுப்புகளையும், கடமைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு அக்‌ஷகினிக்கும் ஒருவர் என 7 படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டனர், அவர்கள் அந்தப் படையினை திறம்பட நிர்வாகிக்க வழிவகை செய்தனர். சுப்ரீம் கமாண்டராக அர்ஜூனனும், அர்ஜூன்னுக்கு தேராட்டியாக மட்டுமன்றி முக்கிய ஆலோசகராகவும் கிருஷ்ணர் விளங்கினார். எல்லாராலும் மதிக்கப்பட்டவரும், மிக மூத்தவருமாக தருமன் இருந்தாலும், போர் விஷயங்களில் வல்லமை வாய்ந்த அர்ஜூனனே போரை நடத்தினான்
கடமைகளைப் பகிர்ந்து கொள்வதும், தகுந்த தலைமை அமைவதும்தான் எந்த நிறுவனத்தின் அல்லது குழுவின் வெற்றிக்கும் அடிப்படையாக இருக்க முடியும். பொதுவாக எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக்குழுவிற்கும் (Leadership team) நான்கு பண்புகள் தேவைப்படுகின்றன. தந்திராத்மமான செயல்திறன் (Strategic Leadership), வழிகாட்டும் செயல்திறன் (Directive Leadership), குழு முயற்சி வளர்ப்புத்திறன் (Team-building Leadership), இயங்குதிறன் தலைமைப் பண்பு (Operational Leadership). எந்த ஒரு தனிப்பட்ட மனிதனாலும் இந்த நான்கு பண்புகளிலும் சிறந்து விளங்குவதென்பது மிக அரிதான செயலே! ஏனெனில் உளவியல் ரீதியாக இவை நான்கு திறன்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவை. இந்தச் செயல்களில் ஏதாவது ஒன்றில் மிக திறன் வாய்ந்த ஒருவர் கண்டிப்பாக மற்றொன்றில் திறன் குறைந்தவராக இருக்கக் கூடும். ஆக இந்த பலவீனங்கள் எப்பொழுது முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, அதனைச் சுற்றி, நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு குழு அமைகின்றதோ அந்தக் குழுவே செயல்திறன் கொண்டதாக மாறக் கூடும். எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக் குழுவும் அவ்வாறே அமையப்பெறும். பாண்டவர்கள் விஷயத்தில் கிருஷ்ணர் போர் நடவடிக்கைகளில் (Operations) ஈடுபடாவிட்டாலும் போர்திட்டங்களை அமைப்பதிலும், வியூகங்களை அமைப்பதிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஆலோசகராகவும் இருந்தார் (Strategic and Directive Leadership).அர்ச்சுனனோ இயங்குதிறனிலும், வழிகாட்டுத் திறனிலும் (operational and Directive leadership) சிறந்து விளங்கினான்தருமன் போன்றவர்கள் குழு வளர்ப்புத் திறனில் ஈடுப்பட்டிருந்தனர்….இங்கு பாண்டவர்கள் தகுந்த தலைமையை அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும் கடமைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன (shared responsibilities), கவுரவர்கள் பக்கமோ எல்லாச் செயல்களும் தலைமை வகித்தவர் மட்டுமே நிர்வாகிக்க வேண்டியிருந்தது மட்டுமின்றி வள நிர்வாகம் (Resource Management) அவர்கள் சரியாகச் செயல்படுத்தவில்லை….
கிருஷ்ணரின் கோபம்
கிருஷ்ணரின் கோபம்
4. குழு மனப்பான்மை (Team Spirit)
கவுரவர்களுக்குள் குழு மனப்பான்மை இருந்ததேயில்லை. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வழிமுறைகளை (approach) வைத்திருந்தனர். அஸ்தினாபுரத்திற்கு வரும் ஆபத்து எத்தகையதாக இருந்தாலும் எதிர்ப்பேன் என்று சபதம் செய்திருந்த காரணத்தினால் பீஷ்மரும், அதே உறுதிமொழியைக் கொடுத்திருந்ததால் துரோணர் மற்றும் கிருபாச்சாரியரும், துரியோதனின் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டதால் ஷல்யாவும் என முக்கிய தளபதிகள் பலர் போரில் விருப்பமில்லாவிட்டாலும் ஈடுபட்டார்கள். கர்ணனோ துரியோதனின் நட்பிற்காகவும், அர்ச்சுனனுக்கெதிராக வில் திறமையை நிரூபிக்க வேண்டியும் மட்டுமே போரில் ஈடுபட்டான். இது தவிர அவர்களுக்குள் பல பூசல்கள் இருந்தன. பீஷ்மருக்கும் கர்ணனுக்குமிடையே இருந்த வெறுப்பு, கர்ணனை பீஷ்மர் இருக்கும் வரையில் போர்களத்திற்குள் அனுமதிக்க வில்லை, பீஷ்மருக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் ஷல்யாவிற்கும் ஆகாது, ஷல்யாவிற்கும் பீஷ்மருக்கும் ஆகாது இப்படி முக்கிய தளபதிகளுக்குள்ளே ஒரு ஒத்துழையாமை இருந்தது…
பாண்டவர்களோ ஓரணி, ஒரே குறிக்கோள் என்று இயங்கினர். கிருஷ்ணரும், தருமரும் சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதமாகக் கருதப்பட்டது, படை வீரர்களோ அர்ச்சுனன் மற்றும் பீமனின் வீரத்தைக் கண்டு தூண்டப்பட்டிருந்தனர், போரில் ஈடுபட்ட அனைவருமே அதை தங்களுடைய போராகக் கருதினார்கள், தளபதிகள் அனைவரையும் முடிவெடுக்கும் விவகாரங்களில் பங்கேற்கச் செய்தது (Brainstorming) அவர்களுக்குள் நல்ல ஒத்துழைப்பையும், அனைவருக்கும் தூண்டுகோலாகவும் இருந்தது…
எந்த ஒரு நிறுவனத்திலும், தலைமையிலிருந்து அடிமட்ட தொழிலாளி வரை, அமைகின்ற குழுவைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் செயல்திறன் அமையும். அப்படியிருக்கையில் அந்தக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாது போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தலைமைக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாவிட்டால், நிறுவனம் முதற்கொண்டு கட்சிகள் வரை முதலுக்கே மோசம் வரும். பெரும்பாலும் இது போன்ற குழுவை நம்பி இயங்குவதால்தான் மென்பொருள் நிறுவனங்கள் முதற்கொண்டு பல நிறுவனங்கள் குழு முயற்சி வளர்ப்பிற்கான (Team building  workshops) பயிற்சிகளை இடைநிலை மேலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகின்றனர். என்னதான் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களும், செயல்முறைகளும் இருந்தாலும் ஆன்மா இல்லாத ஒரு குழுவைக் கொண்டு சாதிப்பதென்பது மிக மிகக் கடினமே!!!
5. தனிப்பட்ட குறிக்கோள்கள் (Individual targets)
கவுரவப் படையில் இருந்த நான்கு முக்கிய தளபதிகளும் பாண்டவர்களுக்கு எதிராக போரிடவேயில்லை. பீஷ்மரைப் பொறுத்தவரை பாண்டவர்களை தாக்கவே இல்லை, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை தாக்குவதில் மட்டுமே முனைந்தார், துரோணரோ தான் பாண்டவர்களை கொல்லப் போவதில்லை என்றும் அவர்களை பிடிக்க மட்டுமே முனைவதாகக் கூறினார், ஷல்யாவோ துரியோதனனால் ஏமாற்றப்பட்ட கோபமும், பாண்டவர்கள் பக்கம் நிற்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்ததால் முழு மனதோடு போரில் ஈடுபடவில்லை, இன்னும் சொல்வதென்றால் போர்களத்தில் கர்ணனை அவமானத்திக் கொண்டேயிருந்ததன் மூலம் மறைமுகமாக பாண்டவர்களுக்கு சிறிது உதவியும் செய்தார், கர்ணனோ அர்ஜுனனைத் தவிர மீதிப் பாண்டவர்கள் யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தான்
பாண்டவர்களோ போர் ஆரம்பித்த உடன் பின்வாங்கவோ, தயங்கவோ இல்லை, எல்லாருக்கும் பொதுவான இலக்குகளும், தனித்தனி இலக்குகளும் கொடுக்கப்பட்டன. திருஷ்டாயுதம்னாவிற்கு துரோணரும், சிகண்டிக்கு பீஷ்மரும், அர்ஜூனனுக்கு கர்ணனும், பீமனுக்கு துரியோதனனும் அவனது சகோதர்களும், சகாதேவனுக்கு சகுனியும் அவனது மகன்களும், நகுலனுக்கு கர்ணனின் மகன்களும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டனர். அந்த இலக்கை நோக்கியே அவர்களும் செயல்பட்டனர்…
ஒரு தொழிலாளியின் முழுமையான வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்தே முழுமையடைகிறது (Growing along with the organization). எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு பார்வையையும், இலக்கினையும் கொண்டிருக்கின்றன (Vision and mission) , அந்த கொள்கைகளுக்கேற்றவாறே மற்ற துறைகளுக்கும், குழுக்களுக்கும் தனித்தனி இலக்குகளும், செயல்பாதைகளும் நிர்ணயிக்கப் படுகின்றன. பல சமயங்களில் இந்த இலக்குகளே நம்முடைய பாதைகளை அமைத்துத் தந்து விடுகின்றன. சரியான குழு என்பது சரியான தனி மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது (The Right team is made by selecting the Right Individuals. Get the right man for the right job)
6. பெண்ணுரிமை (Women Empowerment)
கவுரவர்கள் ஏறக்குறைய பேட்ரியார்ச்சல் (Patriarchal) முறையை பின்பற்றினர். போரின் போதும் சரி அதற்கு முன்பும் சரி பெண்கள் முடிவெடுக்கும் செயலிலோ, மற்ற முக்கிய விவகாரங்களிலோ  அனுமதிக்கப்படவேயில்லை. கவுரவர்களின் தாயாரான காந்தாரியின் வார்த்தைகள் கூட மதிப்பின்றி தொலைந்துதான் போனது
பாண்டவர்களோ ஏறக்குறைய மேட்ரியார்ச்சல் (Matriarchal)  முறையை பின்பற்றினர். குந்தி சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதவாக்காகக் கருதப்பட்டது. அதே குந்தியால்தான் கர்ணனிடம் அர்ஜூனனைத் தவிர மற்றவர்களைக் கொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்க முடிந்தது. பாண்டவர்களின் எல்லா முடிவுகளின் பின்பும் திரவுபதியின் பங்கு இருந்தது. மற்ற முக்கிய தளபதிகளான அபிமன்யு, கடோத்கஜன், இராவண் ஆகியோரின் வீரம் மற்றும் குண நலன்களின் பின்புலமாக அவரவர்களுடைய தாயாரின் பங்கு பெரிதாக இருந்தது
எந்த ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையடைவதற்கும் பெண்களின் துணை மிக அவசியமாகிறது (Women = Better Half. Any man who doesn’t have women in his side is considered to be unfulfilled, for the Masculine traits of aggression and dominance should be balanced by the Feminine traits of harmony and sustenance)
7. அர்ப்பணிப்பு (Commitment)
ஏற்கனவே சொன்னது போல் கவுரவர்களின் நான்கு முக்கிய தளபதிகள் (பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், ஷல்யா) போரை விரும்பாததாலும், பாண்டவர்கள் மீதிருந்த பாசத்தாலும் முறையான அர்ப்பணிப்பைத் தரவில்லை…..இன்னும் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு ஓரளவு உதவியும் செய்தனர்
  • பீஷ்மர் வெறுமனே வீரர்களை மட்டும் கொன்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தது போக பாண்டவர்களிடம் தன்னைக் கொல்லக் கூடிய ரகசியத்தை தானாகவே ஒப்புவித்தார். தான் தலைமை தாங்கும் வரையில் கர்ணன் போரில் ஈடுபடக் கூடாது என்றதன் மூலம் பாண்டவர்களுக்கு சுமையைக் குறைத்தார்
  • தன் கையில் ஆயுதம் இருக்கும் வரை தனக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்கிற ரகசியத்தை துரோணரும் தானாகவே பாண்டவர்களுக்கு தெரிவித்தார். அந்த ரகசியம் தெரிந்ததனாலேயே, அவரது மகன் அஸ்வத்தமா இறந்தான் என்கிற தவறானச் செய்தியைப் பரப்பி, துரோணரின் ஆயுதத்தை கீழேப் போட வைத்தனர் பாண்டவர்கள்
  • கர்ணனோ தருமனையும், பீமனையும் கொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைச் செய்ய வில்லை. தவிர போருக்கு முன்பே தனது கவச குண்டலத்தை தானம் செய்தது, பல சமயங்களில் போரில் அடிப்பட்டு அவனை ஓய்வெடுக்க வைத்தது. துச்சாதனனை பீமன் கொல்லும் போதும் கூட கர்ணனால் காப்பாற்ற முடியவில்லை
  • ஷல்யாவோ கர்ணனைப் போர்க்களத்தில் தொடர்ந்து அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான்…
மொத்தத்தில் ஏறக்குறைய அது ஒரு துரோகிகளின் கூடாரமாகத்தான் இருந்த்து
பாண்டவர்களின் அர்ப்பணிப்போ அளப்பறியதாக இருந்த்து. போரில் சில இடங்களில் அவர்கள் தோற்றாலும், சிலர் உயிரிழந்தாலும், உயிரிழக்கும் போதும் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றவர்களை எழுச்சி கொள்ளவும், தூண்டும் வகையிலும் அமைந்தது
  • 16 வயதே நிரம்பிய அபிமன்யு தனி ஆளாக சக்கராயுத வியுகத்தினுள் சென்றது மிக வீரம் வாய்ந்தச் செயலாகவும், எதிரி அணியினராலேயே மதிப்புடனும் பார்க்க வைத்தது. தற்கொலைக்குச் சமமான இந்தச் செயலில், அபிமன்யு உயிரிழந்தாலும் தனி ஆளாக பல வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல், பல இடை மட்டத் தலைவர்களைக் கொன்றான் (துரியோதனனின் மகன் லட்சுமன், ஷல்யாவின் இளைய சகோதரன், ஷல்யாவின் மகன், திருகலோச்சனா, சுஷேனா என்று பல…..). வில் வித்தையில் அர்ஜுனனைப் போலவே திறமை பெற்றிருந்த அபிமன்யு, கர்ணனையே காயப்படுத்தி சிறிது நேரம் போர்க்களத்தை விட்டு துரத்தியடித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு பிரமித்து போய், கவுரவர்களின் ஒட்டுமொத்த வீரர்களையும் வைத்து அபிமன்யுவை தாக்கச்செய்தாலும், அதுவும் முடியாமல் கர்ணனால் பின்னாலிருந்து தாக்கப்பட்டு (போர் விதியை மீறி) வில்லை இழந்த பின்னும் கையில் கிடைத்த ஆயுதங்களின் மூலமாக போராடினான். கடைசியில் மீண்டும் போர்விதியினை மீறி துச்சாதனனின் மகன் மூலமாக இறந்தாலும் இறக்கும் தருவாயிலும் அவனையும் கொன்று விட்டுதான் உயிரை விட்டான்
  • பீமனின் மகனான கடோத்கஜன் கர்ணனின் கையால் உயிரை விட்டாலும், கவுரவர்களின் படையில் பெரும்பாலானோரைக் கொன்றான். சாகும் போது கூட தன் உருவத்தை பல மடங்கு பெரிதாக்கி அவர்கள் மேல் விழுந்தன் மூலம் மேலும் பலரைக் கொன்றான். தவிர அர்ஜூனனைக் கொல்வதற்காகவே கர்ணன் வைத்திருந்த திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதத்தை உபயோகப்படுத்த வைத்ததன் மூலம், இனி அர்ஜுனனுக்கு ஆபத்தில்லை என்றச் சூழலை உருவாக்கினான். இன்னும் சொல்லப் போனால் கர்ணன் கடோத்கஜனைக் கொன்ற பின் கிருஷ்ணரே சற்று நிம்மதியடைந்தார் எனலாம்
  • எல்லாராலும் மதிக்கப்பட்ட கிருஷ்ணரே, இரண்டு முறை போரில் ஈடுபடமாட்டேன் என்கிற சத்தியத்தையும் தாண்டி, தனது ஆயுதத்தை ஏந்தி போரில் இறங்க முற்பட்டாலும், அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டார் (பாண்டவர்கள் மேல் அவருக்கிருந்த பாசத்தை அனைவருக்கும் உணர்த்தினார்)
  • தருமரோ கர்ணனை வெல்ல முடியாது என்று தெரிந்த போதும், ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டார்
இப்படிப் பல சூழல்களில் பாண்டவர்களில் ஒவ்வொருவரும் தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். சரியான அர்ப்பணிப்பு இல்லாத தலைமையைக் கொண்டிருந்தது கவுரவர்களின் அழிவிற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், அபிமன்யுவைக் கொல்வதற்காக கவுரவர்களின் ஒரு முறை போர் விதியை மீறியச் செயலால், பாண்டவர்கள் அடைந்த கோபம்தான், விதிகளை மீறி கர்ணன், துரோணர், துரியோதனன் ஆகியோரின் மரணங்களுக்கு காரணமாக அமைந்தது.
இங்கு அபிமன்யுவும், கடோத்கஜனும் வீர மரணம் அடைந்தாலும் அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு (living by example) எல்லாரையும் வெறி கொள்ளச் செய்தது. ஒரு வேலைக்கு தகுதி வாய்ந்தவர் என்பது வெறுமனே சரியான திறமை வாய்ந்தவர் என்பது மட்டுமல்ல, உயர்ந்த அர்ப்பணிப்பும் கொண்டிருக்கக் கூடியவரே (The best man for a Job is not the one with the best capabilities but one with the greatest commitment). ஒரு குழுவின் தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்களும் கிடைக்கக் கூடிய நலன்களும் அந்த ஒட்டு மொத்தக் குழுவின் நலனையும் விருப்பத்தையும் மீறி அமைதல் கூடாது (The interests of the Individual should never exceed the Team interest)
8. சரியான நிர்வாகமும் தந்திராத்மமான செயல்களும் (Right management and strategies)
ஏற்கனவே பல தலைப்புகளில் பாண்டவர்களின் வேறுபட்ட தந்திராத்மமான செயல்களைக் கண்டிருந்தோம்.
கிருஷ்ணரைப் போன்ற ஒரு மிகச் சிறந்த சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய நிர்வாகியை (Greatest Crisis Manager) நாம் கண்டிப்போமா என்பது சந்தேகமே!!!! அபிமன்யுவைக் கொன்றதற்காக அடுத்த நாள் போர் முடிவதற்கு முன்னர் ஜெயத்ரதனைக் கொல்வேன் என்ற அர்ஜூனனின் சபதத்தை நிறைவேற்ற கிரகணத்தை கொண்டு வந்து கவுரவர்களை தவறாக கணிக்க வைத்ததாகட்டும், துரியோதனன், காந்தாரி மூலமாக யாராலும் வெல்ல முடியாத சக்தியைப் பெறக் கூடிய நிலை வந்த போது அவனைச் சற்றே திசை திருப்பியதாகட்டும், துரோணரைக் கொல்ல திட்டமிட்டதாகட்டும் என்று பல சிக்கல்களை தீர்த்தது கிருஷ்ணர்தான்….
தருமரோ, போர்கலையில் அர்ஜூனன், பீமனை விட திறன் குறைந்தவராக இருந்தாலும், அவர்செய்த உளவியல் ரீதியான செய்கைகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை!!! முதல் நாள் போர் ஆரம்பிக்கும் முன்பு நிராயுதபாணியாய் எதிர் படைக்குச் சென்று மூத்தவர்களிடம் ஆசியை வாங்கியதன் மூலம் அவர்களுக்கிருந்த குற்ற உணர்ச்சியை மறைமுகமாகத் தூண்டினார், அவர்களுடைய நன்மதிப்பை அதிகரித்துக் கொண்டதன் மூலம் மறைமுகமாக ஒவ்வொருவருடைய உதவியும் பாண்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தினார்……திரும்ப வரும் போது மிகவும் யோசித்து அவர் செய்த ஒரு அறிவிப்பு (Calculated risk) யாரும் எதிர்பார்த்திராதது, அதாவது எந்த ஒரு பக்கத்திலிருந்தும் தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் எதிரணிக்குச் செல்லலாம் என்று அறிவித்ததன் மூலம், கவுரவர்களின் பக்கமிருந்து யுயுட்சுவை (10,000 வீர்ர்களை ஒரே சமயத்தில் எதிர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த 11 பேரில் ஒருவனாக கருதப் பட்டவனும், துரியோதனனுக்கு இளையவனும், மற்ற கவுரவர்களுக்கு மூத்தவனுமானவன்) தங்கள் பக்கம் வரவைத்தார் (ஆரம்பத்திலிருந்தே யுயுட்சு கவுரவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பாண்டவர்கள் மேல் அன்பாகவும் இருந்தவன். இதற்குப் பலனாக போர் முடிந்த பின்பு தருமர் அஸ்தினாபுரத்தில் முடி சூண்ட போது, யுயுட்சி இந்திர பிரஸ்தத்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டான்)
இங்கு தருமர் செய்த அறிவிப்பு ஏற்கனவே படைபலத்தில் குறைந்திருந்த பண்டவர்கள் பக்கமிருந்து யாராவது கவுரவர்கள் பக்கம் சென்று இன்னும் பாண்டவர்களின் திறனைக் குறைத்திருக்கக் கூடும், மாறாக தமது படையின் அசாத்திய ஒற்றுமையையும், எதிரணியில் இருந்த பலவீனத்தையும் நன்கு உணர்ந்ததாலேயே நன்கு யோசித்து இந்த அபாயகரமான முடிவில் அவர் ஈடுபட்டார். தமது குழுவின் பலத்தையும், எதிரியின் பலவீனத்தையும் முழுதாக உணராமல் எந்தச் செயலிலும் யாராலும் வெற்றியடைய முடியாது என்பதைக் காட்டினார் (Know your enemies weaknesses and exploit them,Take Calculated risksInspire, invigorate, counsel your own team in moments of need)
9. அடிப்படை (The Root)
கவுரவர்கள் ராஜகுமாரர்கள். வாழ்வின் பெரும்பகுதி மாளிகைகளிலும், அதிகாரத்தின் நிழலிலுமே வாழ்ந்தவர்கள் (குரு குலத்தைத் தவிர). அடித்தர மக்களின் வாழ்வு நிலை, உண்மை நிலை (Ground reality) என்று எதையும் அறிந்திருக்கவில்லை
பாண்டவர்கள் வாழ்வில் 13 வருடங்கள் வறுமையிலும், காட்டிலும் செலவளித்தார்கள். குழந்தைப் பருவமோ இமாலய மலைகளிலும், குருகுல வாழ்க்கையிலும் கழிந்தது. உண்மை நிலையை (Ground reality) நன்கு உணர்ந்திருந்தார்கள். முனிவர்கள், ஆச்சார்யர்கள், பிராமணர்கள், அடித்தட்டு மக்கள் என்று சமூகத்தின் பல்வேறு பட்ட மக்களிடமும் பழகியிருந்தனர். ராட்சஸ்ர்கள், காந்தர்வர்கள், அப்சரா, நாகர்கள், தேவர்கள் என்று பல்வேறு சமூகத்தாரிடமும் பழகியிருந்தனர் (horizontal and vertical levels). எல்லாரிடமும் ஒரு சகோதரத்துவத்தை பகிர்ந்திருந்தார்கள்…..
வாழ்வின் எந்த ஒரு கல்வியும் அனுபவத்திற்கு ஈடாகாது என்பார்கள்….எந்த ஒரு நிறுவனத்திலும் அடிமட்ட நிலை வரை (Ground reality) உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வெற்றியை அடைதல் எனபது மிகக் கடினமே. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு, அந்நிறுவனத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்களது கருத்துக்களை பகிர்தல் என்பது மிக மிக முக்கியகரமானச் செயல் (Share your ideologies)
பின்குறிப்பு
மகாபாரதப் போர் உண்மையிலேயே நடைபெற்றதா, நடை பெற்றிருக்கக் கூடுமா, நடந்தது என்றால் எந்தக் காலக் கட்டத்தில் நடந்த்து என்றெல்லாம் பல ஆய்வுகளும் விவாதங்களும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கதையோ, நிகழ்வோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் அதிலிருந்து கற்க்க் கூடிய விஷயங்களை கற்பதற்கு அதன் படைப்பு நிலை என்ன என்பது நமக்கு தேவையில்லை. அனுபவம் தரும் பாடம் போன்று வேறு எதுவும் இல்லை என்பார்கள், அதே போல் எல்லாப் பாடங்களும் நம்முடைய சொந்த அனுபவத்தில் பட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை (Its always better to learn from other’s experience). வெறும் ’அன்பு’ என்று மூன்றெழுத்து வார்த்தைக்குப் பஞ்சம் வந்ததன் விளைவுதான் குருஷேத்ரம் என்ற மாபெரும் போரும் அதில் நடந்த மாபெரும் மனித அவலங்களும். போருக்கு முன்னும், பின்னும் பல விளைவுகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து பல விஷயங்களை நாம் கற்றாலும், ஒட்டு மொத்தப் போரும் ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அது எல்லாரையும் அன்பு செய்யுங்கள் என்பதுதான், ஏனோ அதைத்தான் தனி மனிதனும் சரி, நாடுகளும் சரி புரிந்து கொள்ள மறுக்கின்றன.
உதவிய தளங்கள்



No comments:

Post a Comment