Monday, March 18, 2013

முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை


சொன்னவை அர்த்தமுள்ளவை 

மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக கூறிசென்றுள்ளார்கள்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]

நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.

சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.

அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும் குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும் நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.

காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.

காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.

உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.

தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.

உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.

[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்

உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம். 

சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.

பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.

இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]

நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-

“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே”
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை

இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்

நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்

நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]
இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.

பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.

மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.

இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.

பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.

ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.

தனித்திரு விழித்திரு பசித்திரு

தனித்திரு : 

ஆசாபாசங்களில் அறிவை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல் , எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இருத்தல் ஆகும்.

விழித்திரு :

மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய் , பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .

பசித்திரு :

தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் . அமுதமாயினும் அதிகம் புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில் ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.
' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்-

No comments:

Post a Comment