Monday, March 25, 2013

ஆன்மிக தகவல்கள்


* சில குடும்பங்களில் பரம்பரையாக சுமங்கலி பிரார்த்தனை செய்யும் வழக்கம் இல்லை. இப்பொழுது யாராவது சுமங்கலியாக இறந்துவிட்டால் அவருக்காகச் செய்யலாமா?

வழக்கில் இல்லாததால் யோசிக்க வேண்டாம். இப்பொழுது சுமங்கலியாக இறந்த வரை உத்தேசித்தாவது சுமங்கலிப் பிரார்த்தனை செய்யத் துவங் கலாம். எல்லா மங்களங்களையும் தரவல்லது.

** "சும்மா இருப்பதே சுகம்' "விழி எழு உழை' என்னும் மாறுபாடான வாசகங்கள் உள்ளனவே. இதன் பொருளை எப்படி எடுத்துக் கொள்வது? 

நமக்கு எது சவுகர்யம்? சும்மாவே இருந்து விடலாமா? நாலு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார்கள். நாம் எது சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாத சூழலில், நாம் சும்மா இருப்பதே சுகம். நமக்குத் தெரிந்தவர் தவறான பாதையில் சென்று திடீர் பணக்காரராகி வசதி வாய்ப்புகளுடன் ஜொலிக்கிறார். நம்மையும் அவரது பாதையில் செல்ல அழைக்கிறார். நாம் யோசிக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் அவர் அகப்படுவார். வசதிகளும் பறந்துவிடும். சமுதாயத்திலும் தலை நிமிர முடியாது. எனவே நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கி சும்மா இருப்பதே சுகம். இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தையை சோம்பேறித்தனத்திற்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது. விழி- எழு- உழை என்ற பாதையில் சென்றால் உண்மையான மகிழ்ச்சி என்றும் நம் வாழ் வில் நிலைக்கும்.

* வழிபாட்டிற்கு காலை, மாலை இரண்டு வேளையில் எது சிறந்தது?

ஏதாவது ஒரு வேளையைக் கூறிவிட்டால் மற்றைய நேரங்களில் ஜாலியாகப் பொழுது போக்கலாமா? தெய்வ வழிபாட்டிற்கு நேரம் காலமே கிடையாது. ""நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே'' என்கிறார் சுந்தரர். மனத்தளவில் மறந்திருந்தாலும், நமது நாக்கு இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். ""நான் நடப்பது உனது ஆலயத்தை வலம் வருதலாகவும், உண்பது உனக்கு யாகம் செய்வதாகவும் ஆகட்டும்'' என்கிறார் ஆதிசங்கரர். வழிபாடு என்பது பூஜை செய்வது மட்டும் கிடையாது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் இருப்பதும் தான். காலை மாலை இருவேளையும் வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் இறைவனை மனதில் சிந்தித்தும், நாவினால் அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

* சிவபெருமானுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது உண்மையா?

உண்மை தான். அது மட்டுமில்லை. தம்பதிகளுக்குக் குறுக்கேயும், குருசிஷ்யன், பெற்றோர் குழந்தைகள் ஆகியோருக்கு குறுக்கேயும் செல்லக்கூடாது. பசுவும் கன்றும் சேர்ந்து நின்றால் அவற்றின் குறுக்கேயும் செல்லக்கூடாது.

* ஒரே தெய்வத்தை வாழ்நாள் முழுவதும் வணங்கி வருவது சரியான முறைதானா?

எல்லா தெய்வங்களையும் வணங்கலாமே. கோயிலுக்குச் சென்று பாருங்கள். எவ்வளவு விக்ரகங்கள் வைத்துள்ளார்கள் என்று. சமய வேறுபாடின்றி எல்லா தெய்வங்களும் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது எல்லோரை யும் வழிபட வேண்டும் என்பதால் தானே?

* குலதெய்வம் என்பது எது என்றே தெரியாமல் தவிக்கும் என்னைப் போன்றோருக்கு தக்க வழிகாட்டி உதவுங்கள்?

குலதெய்வ வழிபாடு என்பது நமது சந்ததியை அதாவது நம் குலத்தைக் காக்கும் தெய்வமாக பெரியோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இது சாஸ்திரங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஒரு சில புராணங்களில் குலதெய்வம் என்ற சொல் நேரடியாகவும், மறைமுகமாகவும் கையாளப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தினர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக ஒரு தெய்வத்தை தமது குலதெய்வமாக வைத்து வழிபாடு செய்யத் துவங்குகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பெருகி வேறு வேறு ஊர்களில் குடியிருந்து சில கால சூழ்நிலைகளில் அவர்களிடையே தொடர்பும் விட்டுப் போய்விடுகிறது. பின்வரும் உங்களைப் போன்றோர் குலதெய்வம் இன்னது என்று சொல்வதற்கு ஆளில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இருப்பினும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதே ஒரு நல்ல விஷயம். மூன்று வழிகளைக் கூறுகிறோம். எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
1) உங்களின் தந்தை வழி உறவு முறையில் உள்ள பெரியோர்களைக் கலந்து அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
2) ஜோதிடர்கள் அல்லது பிரஸன்னம் பார்ப்பவர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
3) உங்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் தெய்வங்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதிப்போட்டு ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்லி அதில் வரும் பெயருக்குரிய தெய்வத்தை மன சஞ்சலமில்லாமல் குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

* ஸ்கந்த குரு கவசம் என்றால் என்ன? அதன் பயன் யாது?

கவசம் என்பது உடலைப் பாதுகாக்கும் உலோகத்தாலான ஒரு சட்டை. சண்டையிடும் வீரர்கள் உடலில் காயம் ஏற்படாமலிருக்க அணிந்து கொள்வார்கள். இதுபோல், இயற்கையினாலும் எதிரிகளாலும் தீயசக்திகளாலும் நம் உடலுக்கும் மனத்திற்கும் காயம் ஏற்படாமலிருக்க மந்திரத்தினால் கவசம் செய்து கொள்வது (பாதுகாத்துக் கொள்வது) எல்லா சமூகத்தினரிடமும், எல்லா மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஒன்றாகும். சிவகவசம், விஷ்ணு கவசம், துர்கா கவசம், சுப்ரமண்ய கவசம் என பலவாறாக உள்ளன. தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசமும், ஸ்கந்த குரு கவசமும் தமிழில் எழுதியுள்ளார். ஸ்கந்த குரு கவசத்தை பாராயணம் செய்தால் நம் உடல் பாதுகாக்கப்படுவதுடன் தீயவழிகளில் செல்லாமல் மனதையும் பாதுகாக்கும்.

* பிரம்மச்சாரி மூன்று இழை பூணூலும், கிரஹஸ்தன் ஆறு இழை பூணூலும், வயோதிகத்தில் ஒன்பது இழை பூணூலும் அணிவதன் காரணம் என்ன?

பிரம்மச்சாரியாக இருக்கும் போது அவன் தனி மனிதன். தனக்கென ஜபம் செய்ய கல்வியறிவு பெற ஒரு பூணூல் (மூன்று இழை) அணிவிப்பார்கள். திருமணமான பிறகு தனது மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜபம் வழிபாடு செய்வதற்காக இரண்டு பூணூல் (ஆறு இழை) அணிவிப்பார்கள். மூன்றாவது பூணூல் வயோதிகத்தில் அணிவிப்பது இல்லை. சிவதீட்சை அல்லது வைணவ முத்ராதானம் பெறுபவர்களுக்கு மாத்திரமே அணிவிப்பார்கள். ஒவ்வொரு நிலையை உணரவும் உணர்த்தவும் இது மாதிரி செய்யப்படுகிறது.

* சிரார்த்தம் அன்று சமையலில் சில காய்கறிகள் கண்டிப்பாக சமைக்க வேண்டும். வடை, அதிரசம், எள்ளுருண்டை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே! உண்மைதானா?

சிரார்த்தம் என்பதை "சிரத்தயா- தத்தம்- போஜனம்' என்று பிரிப்பர். சிரார்த்தம் என்று எழுதினாலும் "சிராத்தம்' என்றே உச்சரிக்க வேண்டும். சிரத்தையுடன் நிறைய பதார்த்தங்களை சமைத்து உணவு படைத்தலே சிரார்த்தம். இதற்கென பொதுவான நூலாக தர்ம சாஸ்திரமும், போதாயனர், ஆபஸ்தம்பர் போன்ற ரிஷிகளால் அவரவர்கள் குலதர்மங்களுக்கு ஏற்ற ப்ரயோக நூல்களும் வகுக்கப்பட்டுள்ளன. சிரார்த்ததன்று இன்ன வகையான பதார்த்தங்கள், காய்கறிகள், பட்சணங்கள் செய்ய வேண்டும் என்பது அந்த நூல்களில் கூறப்பட்டுள்ள விதியாகும். சலித்துக் கொள்ளாமல் நிறைய செய்து போஜனம் செய்வித்து முன்னோர் ஆசியைப் பெறுங்கள்.

* கணவரால் கைவிடப்பட்ட நிலையில் குலதெய்வ வழிபாட்டை புகுந்த வீட்டு மரபுப்படி செய்வதா? அல்லது ஆதரவு அளித்து வரும் பெற்றோர் வீட்டு முறைப்படி செய்வதா?

குலதெய்வ வழிபாடு என்பது குடும்ப பாராம்பரிய வழக்கம் என்ற அடிப்படையில் நமது குடும்பத்துக்கென ஒரு தெய்வ வழிபாட்டை நிர்ணயித்துக் கொள்வது என்பதாகும். ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆன பின் குலம் கோத்திரம் எல்லாமே கணவருடையது தான். அதற்காக பெற்றோர் வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக் கூடாது என்பதல்ல. தங்கள் நிலை சங்கடமாக உள்ளது. கணவர் வீட்டுக் குலதெய்வத்தையும் வழிபடுங்கள். கணவரே தேடி வருவார்.

** பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார்களே! ஏழு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பெடுக்க முடியுமா? அப்பிறவிகள் என்னென்ன என்பதைக் குறிப்பிடுங்கள்.

தேவர், மனிதர், விலங்கு, பறவை,ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள். இதை 
""புல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி
பல்விருகமாகி, பறவையாய்ப், பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் 
எம்பெருமான்'' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.

* கர்ம வினைகளை இந்தப்பிறவியுடன் தீர்த்துக் கொள்ள வழி ஏதும் உண்டா?

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் கர்ம வினைகள் நீங்கும் என்று தான் ஞானசம்பந்தர், பெரியாழ்வார் போன்றோர் கூறியுள்ளனர். எத்தனை பேர் இதனை முழுமையாக கடைபிடிக்கிறோம்? கர்ம வினைகள் என்பது என்னவென்றால் நாம் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ புண்ணியங்களின் சேமிக்கப்பட்ட பலன்களாகும். அதாவது நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிப்பது போன்றது. நம் பணம் முழுமையாக செலவாகும் வரை நமது வங்கிக் கணக்கு முடியாது. அதுபோல நமது கர்ம வினைகளின் பலா பலன்களை, அதாவது இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத் தீர்க்கும் வரை, வினை சேமிப்பு தீராது. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு, தர்ம சிந்தனை, நற்செயல் இவைகளைச் செய்து வினை நீக்கம் பெறுவது தான் இப்பிறவியின் குறிக்கோள். மேலும் மேலும் தவறுகளைச் செய்து வினை சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு அல்ல.

No comments:

Post a Comment