Tuesday, March 26, 2013

நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!!

ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், "திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். 

அது என்னவென்றால், "ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். 

பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். 

மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். 

பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. 

வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது அந்த ஜென்கை "நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்," என்று கூறினார். 

எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். 

கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். 

"இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார். 

"எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" என்று சொன்னார். 

பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் "திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார். 

No comments:

Post a Comment