Wednesday, August 14, 2013

நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி ?

இந்த தளத்தை ஆரம்பிக்கும் சமயம், எனது இன்ஸ்பிரேஷன்களில் ஒருவரான திரு.நாராயணசாமி (Shivatemples.com) அவர்களை சந்தித்து ஆசி பெற சென்றேன். அப்போது வாழ்த்திய அவர், “இந்த தளம் எல்லாவித தடைகளையும் தாண்டி, வெற்றிகரமாக அமைய சிவன் உங்களுக்கு அருள் புரிவார்” என்று கூறி வாழ்த்தினார்.

எனக்கு ஒரு மாதிரி இருந்தது. “உங்கள் ஆசி கிடைத்ததில் சந்தோஷம் சார். ஆனால், நான் இப்போ தான் நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறேன். இங்கேயும் தடைகள் அது இது என்று ஏற்பட்டு பின்னர் தான் வெற்றி கிடைக்கவேண்டுமா? வேறு ஏதாவது சொல்லியிருக்ககூடாதா?” என்றேன் உரிமையுடன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, “வாழ்க்கையில் எல்லாமே சுலபமா இருந்தா கடவுளுக்கென்ன வேலை? தவிர, நமது பாதையில் நமக்கு வரக்கூடிய இடர்கள், தடங்கல்கள் தான் நம்மை சுற்றியிருப்பவர்களை நமக்கு சரியாக அடையாளம் காட்டும் எக்ஸ்-ரே கருவி. அது இப்போ உங்களுக்கு புரியாது. Anyway, கவலைப்படாதீர்கள்….. எல்லாம் வல்ல சிவபெருமான் உங்கள் இந்த புனிதப் பயணத்தில் நிச்சயம் துணையிருப்பான்” என்றார்.

With Shivatemples Narayanasamy sir @ Bharathi Vizha. (Right side is my friend Raja)

“ரொம்ப நன்றி சார்… ஆண்டவனே கூட இருக்கான் எனும்போது எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. என் கடன் இனி இறைப்பணி செய்து கிடப்பதே” என்றேன்.

மீண்டும் வாழ்த்தினார்.

——————————————————————————————————
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். (குறள் 796)

தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.
——————————————————————————————————

நமது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு நல்ல நண்பனை தேர்ந்தெடுப்பதிலும் இருக்கவேண்டும். அவர்களை ஒட்டியே நமது வாழ்க்கையின் ஓட்டம் அமைகிறது.

உங்களை சுற்றி உள்ள நண்பர்களில் நல்ல நண்பன் என்று யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு திருமண வயதில் அக்காவோ தங்கையோ இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியோடு மனப்பூர்வமாக அவளை எவருக்கு திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொள்வீர்களோ அவரே உங்கள் உண்மையான / நல்ல நண்பன். 

உங்களை சுற்றி உள்ள நண்பர்களில் நல்ல நண்பன் என்று யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு திருமண வயதில் அக்காவோ தங்கையோ இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியோடு மனப்பூர்வமாக அவளை எவருக்கு திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொள்வீர்களோ அவரே உங்கள் உண்மையான / நல்ல நண்பன்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை சுத்தி இப்படி யாராவது இருக்காங்களா? இந்த CATEGORY க்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. அப்படி உங்களால் உங்களை சுற்றியிருப்பவர்களுள் எவரையேனும் அடையாளம் காட்ட முடிந்தால் அவனே நல்ல நண்பன். அப்படிப்பட்ட நண்பன்  ஒருத்தன் உங்க கூட இருந்தாலும் நீங்க பாக்கியசாலி மட்டுமில்லே.. இந்த சொசைட்டியில் நீங்க ஒரு மிகப் பெரிய மனிதர். காலரை தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்.
ஆகையால் தான் ‘நட்பாராய்தல்’ என்று நட்பை தேர்ந்தேடுப்பதர்க்கென்றே ஒரு தனி அதிகாரத்தை திருவள்ளுவர் வைத்திருக்கிறார்.

என்னை பொருத்தவரை கடந்த மூன்று வருடங்கள் என் வாழ்வில் மிக மிக முக்கிய காலகட்டங்கள். நண்பர்களை இந்த உலகத்தை புரிந்துகொள்ள எனக்கு இந்த காலகட்டம் பேருதவியாக இருந்தது. எல்லாமே நாம் எண்ணியபடியே நடந்திருந்தால், எனக்கு இன்றைக்கு ஏற்பட்டுள்ள ஒரு பக்குவம் நிச்சயம் வந்திருக்கவே வந்திருக்காது.

நட்பை பற்றியும் நல்ல நண்பர்கள் யார் என்பதைப் பற்றியும் பத்து நூல்கள் எழுதும் அளவுக்கு எனக்கு அனுபவங்கள் உண்டு. ஒருவேளை எதிர்காலத்தில் என் எழுத்துக்களுக்கு சந்தை மதிப்பு இருக்குமானால் அதை நூலாகவே வெளியிடலாம்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

என் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுள் கவியரசு கண்ணதாசனும் ஒருவர். அர்த்தமுள்ள இந்துமதத்தை சிறு வயதில் படித்திருக்கிறேன். தற்போது மீண்டும் படிக்க துவங்கியிருக்கிறேன். முதல் அத்தியாயமே சிக்சர் தான். அந்தளவு மனிதன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அவரது மகன் திரு.காந்தி கண்ணதாசனை நமது தளத்திற்காக சந்தித்ததை என்னால் மறக்கவே முடியாது. மிக அற்புதமான ஒரு சந்திப்பு அது. முழு பேட்டியையும் ஒரே பாகத்தில் வெளியிட முயற்சித்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதி வருகிறேன். சற்று பொறுங்கள். விரைவில் அளிக்கிறேன்.

நல்ல நண்பன் என்ற தலைப்பில் கவியரசு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கூறியிருப்பதை படியுங்கள்…

நல்ல நண்பன்

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன்,  கூனிக் குழைபவன், கூழைக் கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!

ஆகவே ஒருவனை நண்பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். நன்றாக ஆராய்ந்து, `இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.

“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்” என்றான் வள்ளுவன்.

தேரான் தெளிவும் தெளிந் தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழகவேண்டும். கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது. வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.

உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால், பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்பத் தொடங்கலாம்.

தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும். பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.

நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல. ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு. நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.” என்றான் வள்ளுவன்.

நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல். பாடல் மறந்துபோய் விட்டது. விளக்கம் இதுதான்:

ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.

பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.

தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன். எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள். எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருத்தம். மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து நண்பர்களாக நடித்தார்கள். அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கமில்லை.

ஆனால், என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து `கோழி மேய்க்கிறார்கள்’ என்பதை எண்ணும்போது, சிநேகிதத் துரோகிகளுக்கு இறைவன் அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மற்றவர்களுக்கு அந்த அனுபவம் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன். இந்துக்களின் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால், துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்?

அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.

“குகனொடும் ஐவரானோம்
முன்பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
எம்முறை அன்பின் வந்த
அகமலர் காதல் ஐய
நின்னொடும் எழுவ ரானோம்!”

வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை.

“வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம். கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம். சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம். உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”

ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.

நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடிவாய்க்கப் பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.

நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான். அவனே கர்ணன். கர்ணன் குந்தியின் மகன்; பாண்டவர்களின் சகோதரன்.

கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன். நட்பு என்பதும், செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு. அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.

நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகண்ணதாசன் கிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது

No comments:

Post a Comment