Wednesday, August 14, 2013

சாதனையாளர்களை தேடி ஒரு பயணம்!

சாதனையாளர்களை தேடி புறப்பட்ட நம் பயணத்தில் இதுவரை ஆறு சாதனையாளர்களை சந்தித்து விட்டேன்.  என் வாழ்நாளில் 1001 சாதனையாளர்களை சந்திப்பது என்று இலக்கு வைத்திருக்கிறேன். ‘நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஒரு ஆசான்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. அப்படியிருக்கும்போது ஒவ்வொரு சாதனையாளரும் எத்தனை ஆசான்கள் என்று நினைத்துப் பாருங்கள். இதுவரை நாம் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்னுமளவிற்கு ஒருவரையொருவர் விஞ்சி நிற்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையை  எதிர்கொண்ட விதமும் அவர்கள் கடந்து வந்த பாதையும் நமக்கு பிரமிப்பூட்டுகின்றது. வாழ்க்கையை குறித்த, இந்த உலகத்தை குறித்த, ஒரு புதிய பரிமாணத்தை எனக்கு உணர்த்துகின்றது. அவர்களுடன் எல்லாம் பேசியதாலும் பழகியதாலும் என்னவோ எனக்கும் அவர்களின் சாதனைத் தாகம் தொற்றிக்கொண்டுவிட்டது. என்னிடம் இருந்த பல தீய குணங்கள் என்னை விட்டு ஓடியே போய்விட்டன. “உன் விதியை தீர்மானிப்பவன் வேறு யாருமல்ல…. நீயே!” என்னும் வாக்கியம் அழுத்தந்திருத்தமாக என் மனதில் பதிந்துவிட்டது.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)

சென்ற மாதம் என் முகநூலில் நண்பர் ஜேசுதாஸ் என்பவர் (இவர் ஒரு பெரும் சாதனையாளர், தொழிலதிபர், ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்) வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே RESTAURANT துறையில் வெற்றிக்கொடி நாட்டிய ஒரு பெண்ணை பற்றி ஒரு பழைய பத்திரிகை செய்தியை பகிர்ந்திருந்தார். செய்தி என்னவோ சிறியது தான். ஆனால் படித்தவுடன் அவரது சாதனையின் விஸ்தீரணம் எனக்கு புரிந்துவிட்டது…. அடுத்து நாம் சந்திக்கவேண்டிய சாதனையாளர் இவர் தான் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன்.

“மும்பைக்கும் சென்னைக்கும் இடையே பறந்து கொண்டிருக்கும் அவரை எப்படியாவது சென்னையில் வைத்து சந்தித்தே தீரவேண்டும்.. நம் தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்துவிடவேண்டும்” என்கிற வெறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. இருப்பினும் எங்கு, எப்படி, அவரை தொடர்புகொள்வது… ஒன்றும் புரியவில்லை. எனது பலம் என்று நான் கருதுவது எனது விடாமுயற்சி தான். ஒரு விஷயத்தை முடிக்கவேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதை முடிக்கும் வரை எனக்கு இருப்பு கொள்ளாது. வேறு எதிலும் என் மனம் கவனம் செலுத்தாது. அதையே ஒரு தவமாக நினைக்கத் துவங்கி, என் மனதின் முழு ஆற்றலை அதற்கு செலுத்துவேன். (அற்பத்தனமான விஷயங்களுக்கு மனதின் இந்த சக்தியை பயன்படுத்தமாட்டேன் !) கிட்டத்தட்ட ஒருவாரம் பத்து நாள் இருக்கும். தொடர் முயற்சி + தேடலின் முடிவாக எனக்கு ஒரு தொலைபேசி எண் கிடைத்தது.

அந்த எண்ணுக்கு ஃபோன் செய்து, “உங்கள் இயக்குனரை சந்திக்க விரும்புகிறேன். ஒரு சில நிமிடங்கள் போதும். எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா?” என்று கேட்டேன்.

எனக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. அடுத்து ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த எண்ணை தொடர்புகொண்டு அதே உரையாடல். இம்முறையும் அதே ரெஸ்பான்ஸ்.

நான்காவது முறை… வேறு ஒரு எண் கிடைத்தது. அந்த எண்ணுடன் தொடர்புகொண்டு பேசியபோது முதல் இரண்டு நாட்கள் என் அழைப்பை ஏற்கவேயில்லை.

நான்காவது நாள் தான் பதில் கிடைத்தது. “நீங்கள் யார்? எதற்கு சந்திக்க வேண்டும் ?” என்று எதிர்முனையில் கேட்க – நாம், “ரைட்மந்த்ரா.காம் என்கிற சுயமுன்னேற்ற + ஆன்மீக தளத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் இயக்குனரின் சாதனை சரித்திரத்தை அண்மையில் கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டதிலிருந்து எப்படியாவது அவரை சந்திக்கவேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது. அவரை சந்திக்க நீங்கள உதவ முடியுமா? சரி… நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என்றோம்.

நான் தான் “பிரவீன் ராஜ்குமார். நீங்கள் யாரை சந்திக்க விரும்புகிறீர்களோ அவரின் மகன்!” என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. “சார்…சார்… உங்க கிட்டே பேசுவேன்னு நினைச்சு கூட  பார்க்கலை. உங்கம் அம்மாவோட சக்சஸ் ஸ்டோரியை படிச்சதுல இருந்து எனக்கு எப்படியாவது அவங்களை சந்திக்கனும்னு ஆசை சார். எங்களுக்கு அவர் ஒரு ரோல் மாடல். அவர் ஜஸ்ட் சில நிமிடங்கள் அப்பாயின்மென்ட் கொடுத்தா போதும். அவரை சந்தித்து எங்கள் தளம் சார்பாக ஒரு பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்ய விரும்புகிறேன் சார்…” என்றேன்.

(பெரும்பாலும் இது போன்ற PHONE FOLLOW-UP கால்களை எனது தேநீர் இடைவேளையிலும் மதிய உணவு இடைவேளையிலும் தான் வைத்து கொள்வேன். ஜஸ்ட் 5 நிமிடங்கள் எனக்கு போதும். மகத்தான காரியங்களுக்கு விதைகளை தூவ!)

“ஓ.கே. சுந்தர். நிச்சயம். நீங்க ரெண்டு நாள் கழிச்சி கால் பண்ணுங்க….” என்றார்.

அவர் இப்படி பாஸிட்டிவாக சொன்னதிலேயே எனக்கு வயிறு நிறைந்துவிட்டது. சொன்னபடி இரண்டு நாட்கள் கழித்து கால் செய்தேன். பிரவீன் ரெஸ்பான்ஸ் தரவில்லை.

பெரிய மனுஷன் ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருப்பார். எதுக்கும் திரும்பவும் ரெண்டு நாள் கழிச்சி முயற்சி பண்ணுவோம் என்று மனதை தேற்றிக்கொண்டு வழக்கம்போல பணிகளில் ஈடுபட்டேன்.

எனக்கு என் இலக்கு தான் முக்கியமே தவிர இடையே என் பயணத்தில் நான் சந்திக்கும் மான அவமானங்கள் எல்லாம் எனக்கு ஒரு விஷயமே அல்ல. “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” என்பதை என் மனதில்  ஆணியடித்து வைத்திருக்கிறேன்.

அவர் எரிச்சலுராத அளவில் அவருக்கு அப்பாயின்மென்ட் குறித்து நினைவூட்டி வந்தேன்.

ஒரு நாள் வழக்கம் போல, டீ பிரேக் முடித்து திரும்பவும் அலுவலகம் நுழையும் தருணம் பிரவீன் அவர்களிடம் இருந்து ஃபோன் வந்தது.

“சுந்தர்… ஒரு நிமிஷம் அம்மா பேசனும்னு சொல்றாங்க…” என்று எதிர்முனையில் ஃபோனை அவர் அம்மாவிடம் கொடுக்க… எனக்கு அந்த இன்ப அதிர்ச்சியில் இதயமே நின்றுவிட்டது.

தட்டு .. தடுமாறி…நாக்கு குழறி ஒருவழியாக என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அவர்களிடம் பேசினேன்.  அவர் நலனை விசாரித்துவிட்டு, நம்மை பற்றியும் நமது தளத்தை பற்றியும் கூறினேன். சாதனையாளர்களை  தேடி புறப்பட்டிருக்கும் நமது பயணத்தை பற்றி எடுத்துகூறி, அவரை சந்தித்து அவரை கௌரவிக்க விரும்புவதாக சொன்னேன். நான் பணிக்கு செல்லும் விபரம் தெரிந்ததால் பெரிய மனதுடன் “எப்போது முடியுமோ அப்போது  வாருங்கள் சுந்தர்” என்று கூறி வீட்டு முகவரியை எனக்கு சொன்னார்கள். அவரின் பர்சனல் நம்பரையும் தந்தார்கள்.

அப்பாயின்மென்ட் கொடுத்துவிட்டாரே தவிர எனக்கு அவரை சென்று சந்திக்க நாளை ஒதுக்க முடியவில்லை. காரணம் வாரநாட்களில் இடைவிடாத பணி. தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என் அலுவலகம் இருந்தது. இது போன்ற பரபரப்புக்களிலிருந்து விடுபட்டு சற்று ரிலாக்ஸான மனதுடன் அவரை  சந்திக்க விரும்பினேன். மேலும் பெரிய மனிதர் என்பதால் சந்திப்பின்போது நான் அணிந்திருக்கும் உடை, அப்போது என்னுடைய தோற்றம் என எல்லாவற்றிலும் கவனம்  செலுத்தவேண்டும். இதற்க்கு ஒரு விடுமுறை  நாளே ஏற்றது. எனவே சில வாரங்கள் கழித்து வந்த ஒரு ஞாயிறு அவரை சந்திப்பது என்று  முடிவானது. அவருக்கும் தகவல் தெரிவித்தேன். மனோகரன் அந்த சமயம் சில பல காரணங்களினால் சற்று தன்னம்பிக்கை குறைந்து, மனமுடைந்து காணப்பட்டார். எனவே மனோகரனையும், சாதிக்கவேண்டும் என்கிற வெறி இருந்த இன்னொரு நண்பர் நாராயணனையும் அழைத்து செல்வது என்று முடிவு செய்தேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிலையில், சந்திப்புக்கு இரண்டே நாட்கள் இருக்கும் சூழ்நிலையில், “இந்த ஞாயிற்றுக் கிழமை நீங்க ஆபீஸ் வரணும்” என்றார்கள். (மாதம் இரண்டு மூன்று ஞாயிற்றுக் கிழமைகள் எனக்கு அலுவலகம் உண்டு.) “எனக்கு முக்கிய பர்சனல் வேலை ஒன்னு இருக்கு. வந்தாலும் மதியம் 2.00 மணி வரைக்கும் தான் வேலை செய்யமுடியும்” என்று கூறிவிட்டேன். சரி என்று ஒப்புக்கொண்டார்கள். எப்படியோ வேலை முடிஞ்சா சரி… என்பது அவர்கள் எண்ணம்.

துரதிஷ்டவசமாக ஞாயிறு காலை 9.30 க்கு அலுவலகம் வரவேண்டிய நான் அன்று 11.30 க்கு தான் வந்தேன். எனவே கூட சற்று நேரம் இருந்து வேலையை முடிக்கவேண்டிய சூழல். எனவே மதியம் 2.00க்கு பதில் 4.00க்கு தான் கிளம்ப முடிந்தது.

சந்திப்புக்கு 4.30 – 5.00 மணிக்குள் வருவதாக திரு.பிரவீனிடம் சொல்லியிருந்தேன். நம்முடன் வருவதாக சொன்ன நண்பர் மனோகரனும் நாராயணனும் என் அலுவலகம் அருகே வேறொரு பகுதியில் காத்திருந்தார்கள். அவர்களுக்கு பொக்கே வாங்குவது, சால்வை வாங்குவது உள்ளிட்ட வேலைகளை கொடுத்து, தயாராக இருக்கும்படி சொன்னேன்.

சரியாக 4.00 மணிக்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன். வந்த இருவரிடமுமே டூ-வீலர் இல்லை. மனோகரன் திருவள்ளூரிலிருந்து வந்திருக்கிறார். நாராயணனிடம் டூ-வீலர் கிடையாது. என் ஒருவன் டூ-வீலரில் மூன்று பேர் எப்படி செல்வது… ? நேரமோ ஓடிக்கொண்டிருக்கின்றது. சரி… என்னுடைய பைக்கை என் அலுவலகம் அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு வேளச்சேரிக்கு கால்டாக்சி ஒன்றை பிடிப்பது என்று முடிவு செய்தோம். (சென்னையில ஆட்டோவில் போகுமளவிற்கு எங்களுக்கு வசதி கிடையாதுங்க!!!!).

வழக்கம் போல கால்டாக்சி டிரைவர் எங்கோ இருந்துகொண்டு, அருகில் இருப்பதாகவும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் அரை மணிநேரமாக அதையே சொல்லி எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதித்தார். கால்டாக்சி அலுவலகத்திற்கு போன் செய்து நிலைமையை விளக்கி அவர்களுக்கு டோஸ் விட, பக்கத்துல தான் சார் இருக்கார். இன்னும் 2 நிமிஷத்துல வந்துடுவார்…” என்று அவர்களும் அதையேத் தான் சொன்னார்கள்.

சரி..இதை கேன்சல் பண்ணிட்டு வேற வண்டி புக் செய்யலாம் என்று முடிவு செய்த தருணம்…டாக்சி வந்துவிட்டது. அடித்து பிடித்து ஏறி.. அவரிடம் நாம் அவசரப்பட்டதன் காரணத்தை கூறி “அரை மணிநேரத்துக்குள்ளே வேளச்சேரி போகணும்பா…” என்றேன்.

“போய்டலாம் சார்… கவலைப்படாதீங்க” என்றார். சொன்னபடியே சரியாக 5.00 மணிக்கு வேளச்சேரியில் நாம் சந்திக்க விரும்பும் அந்த சாதனைச் சிகரத்தின் அப்பார்ட்மென்ட் வாசலில் டாக்சி நின்றது. (ரூ.250/- பில் வந்தது.)

சாதனையாளர்களின் நேரம் மிக மிக முக்கியம். ஒவ்வொரு நொடியையும் அவர்கள் மிகப் பெரும் செல்வமாக கருதுவார்கள். எனவே அவர்களை சந்திக்க செல்லும்போது சொன்ன நேரத்தில் நாம் எப்பாடுபட்டாவது ஆஜராகிவிடவேண்டும்.

அவரது டூப்லெக்ஸ் வீட்டை தேடிப் பிடித்து காலிங் பெல்லை அழுத்த, பணியாள் வந்து திறந்தார்.

“மேடமை பார்க்க வந்திருக்கோம். வரச் சொல்லியிருக்காங்க…” என்றேன்.

“கொஞ்சம் நேரம் உட்காருங்க….மேடம் வருவாங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். நாம் சோபாவில் “அப்பாடா….” என்று நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தோம்.

யார் இந்த சாதனையாளர்… அவரை சந்திக்க ஏன் இந்த பெரும்பாடு….? அப்படி என்ன பெரிய சாதனை செய்துவிட்டார் இவர்?

சரி… ஓ.கே. அவரை பற்றி ஒரு சின்ன முன்னுரை கொடுக்குறேன்… .நீங்களே சொல்லுங்கள்… அவரை சந்திக்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அர்த்தமுடையதா இல்லையா என்று….!

பெற்றோர் எதிர்ப்பை மீறி வேற்று மதத்தை சேர்ந்தவருடன் காதல் திருமணம், தோல்வியில் முடிந்த அந்த திருமண வாழ்க்கை, தினமும் குடிக்க பணம் கேட்டு அடித்து உதைக்கும் போதைக்கு அடிமையான காதல் கணவர், தன்னை நம்பி இரண்டு குழந்தைகள், தாங்க முடியாத வறுமை…… 30 வருடங்களுக்கு முன்பு மெரினாவில் தள்ளு வண்டியில் தனது வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது இவரின் நிலைமை இது தான்.

இன்றைக்கு… இவரது குழுமத்தின் உணவகங்களின் ஒரு நாள் விற்பனை மட்டும் சில லட்சங்களை தாண்டும்!!

அவர் தான் திருமதி.பேட்ரீசியா நாராயண். SANDHEEPA CHAIN OF RESTAURANTS என்கிற குழுமத்தின் இயக்குனர் இவர். சென்னையில் மட்டும் இவரது குழுமத்திற்கு 14 கிளைகள் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு, FICCI எனப்படும் வர்த்தக அமைப்பு, இவருக்கு BEST WOMAN ENTREPRENEUR விருது வழங்கி கௌரவித்தது. (FICCI = Federation of Indian Chambers of Commerce and Industry).

வாழ்க்கையில்  அனைவருக்கும் இவர் ஒரு ரோல் மாடல். திக்கு தெரியாமல் தவிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.

விதியை புரட்டிப் போட்ட இவரது சாதனை சரித்திரம் + இவரது பிரத்யேக பேட்டி… நாளை நமது தளத்தில்!

No comments:

Post a Comment