கர்வம், அதாவது தற்பெருமை இல்லாத மனிதன் என்று யாருமே இல்லை. கல்விச் செருக்கு என்பதை இலக்கியமே ஒப்புக் கொள்கிறது. பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகளில் இந்தக் கல்விச் செருக்கு வெளிப்படையாகவே தெரியும்.
ஆனால், "எனக்குத் தெரியும்" என்பதற்கும் "எனக்கு மட்டும்தான் தெரியும்" என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
"எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெரியாத மனிதனும் இல்லை" என்ற உலக உண்மையை மறந்த மனிதன்தான் இந்த தற்பெருமை வலையில் விழுந்து அவமானப் படுகிறான். "கலைமகள் கற்றதே கைம்மண் அளவுதான்" என்கிறாள் அவ்வை.
சிறு வயதில், நிறைய முறை நான் இம்மாதிரி அவமானப் பட்டிருக்கிறேன். நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது, தினமும் வானொலியில் கர்நாடக சங்கீதம் கேட்போம். அந்தக் கேள்வி ஞானத்தில் சில ராகங்களை ஆலாபனையின் போதே, கண்டுபிடிக்க கற்றுக் கொண்டேன். பிறகு, ஒரு சமயம், என் அண்ணனின் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அடானா ராகத்தைப் பற்றி பேச்சு வந்தது. நான் உடனே, என்னவோ, நான்தான் அந்த ராகத்தைக் கண்டுபிடித்தவன்போல் ஆலாபனை ஆரம்பிக்க, என் அண்ணன் வந்து பார்வையாலேயே என்னை நிறுத்தினார். அந்த நண்பர் சென்றபிறகு, அவர் அப்பா சிறந்த சங்கீத வித்வான் என்றும், இவரும் முறையாக சங்கீதம் பயின்றவர் என்றும் கூறியபோது, வெட்கம் அடைந்தேன். அது முதல், எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி பேசும்போது, கொஞ்சம் அடக்கத்துடனேயே பேசுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.
இந்த இடத்தில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு முறை மூன்று பேர் தங்களுடைய கண் பார்வைத் திறனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய கண் பார்வையே மிகவும் கூர்மையானது என்று வாதாடினார்கள். அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர், "ஏன் சண்டை? நம்ம ஊர் கோவில் கும்பாபிஷேகம் வர இருக்கிறது. அப்போது, விமானத்தின் மேல், ஒரு கல்வெட்டு வைக்கப் போகிறார்கள். அதை கீழே இருந்து படித்து உங்கள் திறமையைக் காட்டலாமே" என்றார். மூவரும் சம்மதித்தனர்.
தங்கள் திறமை மேல் நம்பிக்கை இல்லாத மூவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அங்கு இங்கு விசாரித்து அந்தக் கல்வெட்டைச் செய்யும் இடத்துக்கு சென்று அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரித்து அதில் என்ன எழுதப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள்.
விழா நாளும் வந்தது. மூவரும் கூடினார்கள். முதலாமவன் கூறினான், "ஆஹா, எனக்கு நன்றாகத் தெரிகிறது. கல்வெட்டின் மேல்பக்கத்தில் "அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்" என்று எழுதி இருக்கிறது" என்றான்.
இரண்டாமவன், "உனக்கு அதுதான் தெரிகிறதா? அதற்குக் கீழே கொஞ்சம் சின்னதாக "கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள்" என்று எழுதியுள்ளது தெரியவில்லையா என்றான்.
உடனே மூன்றாமவன், "ஐயோ பாவம், உன் கண் பார்வை அவ்வளவுதான, அதற்கும் கீழே, பொடி எழுத்தில் "உபயம் : மாணிக்கம் & சன்ஸ்" என்று எழுதியுள்ளது எனக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்று பரிகசித்தான்.
அப்போது அங்கே வந்த சிறுவன் ஒருவன், "என்னண்ணே, நீங்க, அந்த கல்வெட்டை இன்னும் அங்கே வைக்கவே இல்லை" என்றான்.
No comments:
Post a Comment