* மனம் மகிழ்வோடு இருத்தலும், சாந்தமான போக்கும், மவுனமும், மனதை அடக்கி ஆளுதலும், உள்ளத்தூய்மையும் என்ற இவையெல்லாம் நம் மனதுக்குள்ளேயே உள்ளது.
* விரும்பியதை அடைந்து விட்டால் வரம்பின்றி மகிழக்கூடாது. அதுபோல் துன்பம் வரும்போது ஒரேயடியாக மனம் கலங்கவும் கூடாது. மன உறுதியுடன் தெய்வ நிலையில் நிற்க வேண்டும்.
* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும், ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் அமைதியும் இன்பமும் பெறமுடியாது.
* மனதை அடக்கி இருந்தாலும், எப்படியோ ஆசைப்புயல் புகுந்து மனிதனுடைய அடக்க சக்தியை வேரோடு பறித்து விடும். அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்து விடாமல் இருக்க வேண்டுமானால், என்னை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
* பட்டினியாகக் கிடந்தால் உடல் சக்தியன்று அடங்கிப்போகும். ஆனால், தான் நினைத்ததை அடையவேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரடியாகக் காணவேண்டும்என்னும்அளவுக்குஆன்மிகப் பயிற்சி எடுத்தால் தான் இது அடங்கும்.
* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் புத்தி குழம்புகிறது. புத்தி குழம்பியவன் இறந்தவனுக்கு சமமாகிறான்.
* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது.
நினைவு அழிகிறது. நினைவு கெட்டால், லட்சியம் மறைந்துபோகிறது. அப்போது மனிதன் அழிந்து விடுகிறான்.
* புகையால் நெருப்பும், புழுதியால் முகப்பார்வையும் மூடப்பட்டு போகிறது. அதுபோலவே காமம் என்ற பகைவனால் மெய்யறிவு மூடப்பட்டு விடுகிறது.
* தானம் அளிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும். இடம், தகுதி, காலம் ஆகியவற்றைக்
கவனித்து, திரும்பத்தர இயலாத ஒருவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.
எதனால் மனதிற்கு வருத்தம் உண்டாகிறேதோ, எது பிரதிபலன் கருதி செய்யப்படுகிறதோ அந்த தானம் அது "ராஜஸ தானம்' ஆகும்.மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது "தாமஸ தானம்' ஆகும்.
* மிகைபட உண்பவனுக்கு யோகம் இல்லை. உணவின்றி தனிமையில் இருக்க விரும்புபவனுக்கும் யோகம் கிடையாது. மிகுதியாக உறங்குபவனுக்கும், மிகுதியாக விழித்திருப்பவனுக்கும் அது இல்லை. இவற்றில் எல்லாம் அளவோடு இருப்பதே யோகம்.
* பசுவின் பால், அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளதென்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் இருக்கிறான். எனினும் இதயத்தில் தியானத்தால் எழுந்தருளுகிறான்.
No comments:
Post a Comment