Wednesday, August 14, 2013

நாளை நமக்காக! காலம் காத்திருக்காது!

அசோக மரத்தடியில் வீற்றிருக்கிறாள் சீதாப்பிராட்டி. அவள் காதருகில் பொன்னிறத் தும்பி ஒன்று பறந்து வந்து ரீங்கரித்து விட்டுப் போகிறது. அதைப் பார்த்த திரிஜடை... 'அன்னையே! மிக நல்ல சகுனம் இது. கட்டாயம் உங்களுக்கு இன்று ஒரு நல்ல சேதி வரும்!’என்றாள்.

சீதையின் முகத்தில் விரக்தி கலந்த சிரிப்பு. என்ன நல்ல சேதி வரப் போகிறது இங்கே? ராவணன் இப்போதுதான் ஒரு மாத கால அவகாசம் தந்து, அச்சுறுத்தி விட்டுச் சென்றிருக்கிறான். ராமபிரான் வந்து அவளை மீட்பதற்கான எந்த அறிகுறியையும் எட்டுத் திக்கிலும் இந்தக் கணம் வரை காணோம். இனியும் நம்பிக்கையோடு காத்திருப்பது தேவைதானா?

சீதையின் மனம் அளவற்ற சோர்வை அடைகிறது. அவள் எந்த அசோக மரத்தடியில் வீற்றிருக்கிறாளோ, அதே மரத்தின் கிளையன்றில் அனுமன் மிகச் சிறிய வடிவெடுத்து அமர்ந்து இருப்பதை அவள் அறியவில்லை.
அரக்கிகள் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்ததும், மெள்ள எழுந்திருக்கிறாள். உயிரை விட்டுவிடுவதே மேலானது என்று முடிவெடுக்கிறாள். 'போதுலா மாதவிப் பொதும்பர்’ எய்தி தன் நீண்ட கூந்தலாலேயே சுருக்கிட்டு உயிர்விட எத்தனிக்கிறாள். அந்த முக்கியமான கணத்தில் 'ராம ராம’ என்று ராம நாமத்தை உச்சரித்தபடி அவள் முன் குதித்துத் தோன்றி, அவளின் உயிரைக் காக்கிறான் ஆஞ்சநேயன்.

ஒருகணம், ஒரே ஒரு கணம் அனுமன் தாமதித்திருந்தாலும் சீதையின் உயிர் பிரிந்திருக்கும். இதிகாச நாயகனின் மனைவி மீட்கப்படாமலே மாண்டிருப்பாள்.

யுத்த களத்தில் ராம லட்சுமணர்கள் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள். 'உடனடியாக சஞ்ஜீவி மூலிகையைக் கொண்டு வா! அப்போதுதான் இவர்களைப் பிழைக்க வைக்க முடியும்’ என அனுமனை அனுப்புகிறார் ஜாம்பவான்.

மூலிகையை மலையில் தேடக்கூட நேரமில்லை; மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து, அந்த சாகசச் செயலின் மூலம் ராம லட்சுமணர்களின் உயிரைக் காப்பாற்றுகிறான் ஆஞ்சநேயன். 'எனக்கு மீண்டும் உயிர்கொடுத்த நீ, என் தந்தையைப் போன்றவன் அல்லவா!’ என்று ராமன் ஆஞ்சநேயரை அணைத்துக் கொள்கிறான். ஒருகணம் அனுமன் தாமதித்திருந்தால், ராம லட்சுமணர்களை இதிகாசம் இழந்திருக்கும்.

''பதினான்கு ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் ராமன் அயோத்தி வந்து சேரவில்லையே? உயிரை விட்டுவிட வேண்டியதுதான். பரதன் ஒரு முடிவு செய்து நெருப்பு மூட்டிவிட்டான். நெருப்பை மூன்று முறை சுற்றிவிட்டு நெருப்பில் பாய்ந்துவிட வேண்டியதுதான். கூப்பிய கரங்களுடன் கடைசி முறையாக வலம் வரத் தொடங்குகிறான், பரதன்.  அந்தக் கணத்தில் 'ஜெய் ஸ்ரீராம்!’ என்று கம்பீரமான ஒரு முழக்கம் கேட்கிறது. எல்லோரும் வியப்போடு, குரல் வந்த திசை நோக்கி விண்ணை அண்ணாந்து பார்க்கிறார்கள். 'ராமபிரான் வந்துகொண்டிருக்கிறான்’ என்ற நல்ல சேதியோடு ஆஞ்ச நேயன் மண்ணில் குதிக்கிறான்.

அவன் மட்டும் ஒருகணம் தாமதித்திருந்தால், தசரதனின் இறப்புக்கு அழுத அயோத்தி, பரதனின் மறைவுக்கும் அழத் தொடங்கியிருக்கும்.
ஆம். வாழ்வில் ஒவ்வொரு கணமும் முக்கியம்தான்.

உயரமானவர்கள், குள்ளமானவர்கள், சிவப்பானவர்கள், கறுப்பானவர்கள், ஆண்கள், பெண்கள் என ஏராளமான வேறுபாடுகளோடு மனிதர்களைப் படைத்திருக்கிறது, இயற்கை. ஆனால், அரசன் முதல் ஆண்டி வரை அனை வருக்கும் அது ஒரே ஒரு கொடையை மட்டும் சமமாக வழங்கியிருக்கிறது. அதுதான் 'நேரம்’!

யாராயிருந்தாலும் எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். அந்த நேரத்தை எவனொருவன் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்துகிறானோ, அவன் ஆண்டியாக இருந்தாலும் அரசனாகிவிட முடியும். அப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்தாதவன் அரசனாக இருந்தாலும்,
அவன் ஆண்டியாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மதிப்பு மிக்க இந்த நேரம் என்கிற அரிய செல்வத்தை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? பல கூட்டங்கள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாவதாக அழைப்பிதழில் போட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான கூட்டங்கள் ஆறரைக்கு மேல்தான் தொடங்குகின்றன. 'அப்படியானால் ஆறரைக்குத் தொடங்குவதாகவே அச்சிடலாமே?’ என்று கேட்டால், கூட்ட அமைப்பாளர்கள் சொல்கிறார்கள்... 'ஆறரை என்று அச்சிட்டால், கூட்டத்தை 7 மணிக்குத்தான் தொடங்க வேண்டியிருக்கும். மக்கள் குறிப்பிட்ட நேரத் துக்குக் கால் மணி, அரைமணி கழித்துத்தான் வந்து சேர்கிறார்கள்!’

நம் இந்தியர்களிடம் ஏன் இப்படி ஒரு மனப்பான்மை? இந்தியர்களின் கால தாமதத்தைக் குறிக்கும் வகையில் 'இந்தியன் பங்சுவாலிட்டி’ என்றே ஒரு சொற்றொடர் புழக்கத்தில் வந்துவிட்டதே!

கால தாமதத்தைச் சிறிதும் அனுமதிக்காத பெரியவர் ஒருவர், ஓர் அமைப்பை நடத்திவந்தார். அந்த அமைப்பின் ஆண்டு விழா, குறிப்பிட்ட நாளன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. அரங்கின் வாயிலில் நின்றுகொண்டிருந்த அவர் சரியாக 10 மணிக்கு அரங்கின் வெளிக் கதவைப் பூட்டிவிட்டார். ஓர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தார் முக்கியமான பார்வையாளர் ஒருவர். அவர் கால் ஊனமானவரும்கூட. உள்ளே செல்ல அனுமதி வேண்டினார். ஆனால், இந்தப் பெரியவர் மறுத்துவிட்டார்.

'தனது கால் ஊனத்தைக் கணக்கில் கொண்டாவது அனுமதிக்கக் கூடாதா?’ என்று அவர் வேண்டினார். 'அப்படி அனுமதித்தால், பிறகு அதையே ஒரு சாக்காக எங்கும் சொல்லிச் சலுகை பெறும் மனப்போக்கு உங்களுக்கு வரும். அது தவறு. கால் ஊனமானாலும், எல்லா வகையிலும் நீங்கள் மற்றவர்களுக்கு இணையானவர்தான். வரும் வழியில் ஏதோ இப்போதுதான் உங்களுக்குக் கால் ஊனமாகவில்லையே? அது எப்போதோ நடந்த விபத்துதானே? எனவே, உங்கள் ஊனத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் சற்று முன்கூட்டியே வீட்டிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும்!’ என்றார் பெரியவர்.

மேற்பார்வைக்கு, சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் கடுமையாக அவர் நடந்துகொண்ட தாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அது அப்படியல்ல என்று தெரியவரும். நாம் தொடர்ந்து ஏதேதோ சமாதானங்களைச் சொல்லி அடுத்தவர் பெருந் தன்மையை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்துவது தவறு. நம் சொந்த முயற்சியின் பேரில் கம்பீரமாக நிற்க நாம் பழக வேண்டும்.
மாபெரும் அரசியல் தலைவர் ஒருவரை கம்பன் விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார் கம்பனடிப்பொடி சா.கணேசன். அந்தத் தலைவர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். வந்த தலைவருக்கு அதிர்ச்சி! வேறொருவரைத் தலைவராகக் கொண்டு விழா தொடங்கப்பட்டு, நடந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி இந்த அரசியல் தலைவர் பார்வையாளராக இருந்து விழாவை ரசித்துவிட்டு விடைபெற்றார். அந்த அளவுக்குக் காலந் தவறாமையில் அளவற்ற கவனம் செலுத்தியவர் கம்பனடிப்பொடி சா.கணேசன்.

பொதுவாக, நம்மிடையே நேர உணர்வு இல்லை என்பதே நிஜம். அலுவலகத்துக்கு ஒருநாள் அல்ல, இரு நாள் அல்ல; எல்லா நாட்களும் தாமதமாக வருபவர்கள் உண்டு. அப்படித் தாமதமாக வருகிறோம் என்பதை அவர்கள் பெரிதாகப் பொருட் படுத்துவதுமில்லை; அதற்காகக் கூச்சப்படுவதும் இல்லை. ஆனால், சரியாக அலுவலக நேரம் முடிந்தபின் வெளியே செல்ல மட்டும் பறப்பார்கள்!

'ஓர் ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததைப் பெரிது படுத்துகிறீர்களே?’ என்று கேட்கிறார்கள் பலர். ஐந்து நிமிடம் என்பது சாதாரணமான விஷயமா? ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடம் என்றால், பன்னிரண்டு நாளில் ஒரு மணி நேரம் அல்லவா வீணாகிறது?

சாலை விபத்தில் அடிபட்டுத் தெருவில் கிடக்கிறான் ஒருவன். உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமா, ஓர் ஐந்து நிமிடம் கழித்துச் சேர்க்கலாமே என்று எண்ணுவோமா? உயிராபத்தில் இருக்கும்போது காலத்தின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், மற்ற தருணங்களில் காலத்தின் அருமையை நாம் உணர்வதில்லை.

தாலி கட்டும் முகூர்த்த நேரம், ரயில் புறப்படும் நேரம், விமானம் புறப்படும் நேரம் இவற்றிலெல்லாம் சரியான நேரத்தை அனுசரிக்க நாம் பழகியிருக்கிறோம். ஒரு கணம் தாமதித்தால், ரயில் போய்விடும் என்று ஓடி ஓடி ரயிலைப் பிடிக்கிறோம். வாழ்க்கை ரயிலும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கால தாமதத்தால் எத்தனை வாய்ப்புகளை நழுவ விடுகிறோம் என்பதை நாம் உணர்வதே இல்லை.

கிரிக்கெட் மேட்சுகளில் ஒரு பேட்ஸ்மன் அவுட்டா இல்லையா என்பதைத் தீர்மானிக்க... பந்து வருவதையும், பேட்ஸ்மனின் நகர்வையும் எத்தனை நுணுக்கமாக, துல்லியமாக, அங்குலம் அங்குலமாகப் படம் பிடித்துக் காட்டி முடிவு செய்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்களும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்தானே? ஒவ்வொரு மைக்ரோ செகண்டும் எத்தனை முக்கியமானது என்று இதிலிருந்து புரியவில்லையா?

வாழ்க்கை வளம்பெற வேண்டுமானால், காலத்தின் அருமையை எப்போதாவது குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உணர்ந்தால் போதாது; நாள் தோறும், நிமிடம்தோறும், ஒவ்வொரு கணம்தோறும் உணர வேண்டும்.

மகாத்மா காந்தியிலிருந்து அப்துல்கலாம் வரை பெரும் சாதனை புரிந்தவர்கள் அத்தனை பேரும் காலத்தின் அருமையை அப்படி ஒவ்வொரு கணமும் உணர்ந்தவர்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், நாமும் நம் துறையில் இன்னும் எத்தனையோ சாதிக்கலாம்.

No comments:

Post a Comment