Wednesday, August 14, 2013

உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா

வழக்கமான பரபரப்போடு அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் அன்று காலை பணிக்கு வந்து சேர்ந்தனர். வந்த அனைவருக்கும் கதவில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை படித்தவுடன் ஒரே அதிர்ச்சி.

“இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருந்த ஒரு முக்கிய நபர் மரணமடைந்துவிட்டார். நம் நிறுவனத்தின் மேல் மாடியில் உள்ள மெடிடேஷன்  ஹாலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடைபெறும். தவறாமல் அனைவரும் 11.00 மணிக்கு அங்கு வரவும்.” என்று அதில் காணப்பட்டது.

ஆரம்பத்தில் அந்த அறிவிப்பை பார்த்தவுடன், நமது சக ஊழியர் ஒருவர் மறைந்துவிட்டாரே என்று அனைவரும் ஆதங்கப்பட்டாலும் சற்று நேரம் கழித்து, நமது வளர்ச்சியையும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுத்துக்கொண்டிருந்த அந்த நபர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டது.

11.00 மணிக்கு அனைவரும் அந்த மெடிடேஷன் ஹாலுக்கு சென்றனர். ஒரே நேரத்தில் நிறுவன ஊழியர்கள் அனைவரும் அங்கு திரண்டதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. செக்யூரிட்டிகள் அனைவரையும் சமாளிக்க படாத பாடுபட்டனர்.

“எவண்டா அவன் நம்ம வளர்ச்சியை தடுத்த அந்த ஆள்?” என்று தெரிந்துகொள்ளும் ஆவலே அனைவரிடமும் இருந்தது. எனவே சவப்பெட்டியை பார்க்க முண்டியடித்தனர்.

சவப்பெட்டியை மிகவும் த்ரில்லிங்காக ஒவ்வொருவராக சென்று பார்க்க, பார்த்தவர்கள் அனைவரும் ஒரு கணம் பேச்சு மூச்சற்று போயினர். தங்கள் இதயத்தை தொட்டது போன்று அனைவரும் உணர்ந்தனர்.

காரணம் உள்ளே இருந்தது ஒரு கண்ணாடி.

அந்த கண்ணாடியின் மேல் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : உங்கள் வளர்ச்சியை தடுக்க கூடிய நபர் ஒரே ஒருவர் தான். அது நீங்கள் மட்டும் தான். உங்கள் வாழ்க்கையை புரட்சிகரமானதாக ஆக்க உங்களால் மட்டுமே முடியும். உங்கள் மகிழ்ச்சியை, உங்கள் வெற்றியை, உங்கள் தன்னிறைவை பாதிக்ககூடிய நபர் நீங்கள் ஒருவரே. உங்களுக்கு உதவ உங்களால் மட்டுமே முடியும். உங்கள் முதலாளி மாறினாலோ, உங்கள் நிறுவனம் மாறினாலோ, உங்கள் நண்பர்கள் மாறினாலோ, உங்கள் பெற்றோர் மாறினாலோ, உங்கள் வாழ்க்கைத் துணை மாறினாலோ உங்கள் வாழ்க்கை மாறாது.

உங்கள் முதலாளி மாறினாலோ, உங்கள் நிறுவனம் மாறினாலோ, உங்கள் நண்பர்கள் மாறினாலோ, உங்கள் பெற்றோர் மாறினாலோ, உங்கள் வாழ்க்கைத் துணை மாறினாலோ உங்கள் வாழ்க்கை மாறாது.

உங்கள் அவநம்பிக்கை மாறி, உங்கள் எண்ணங்கள் மாறி, அணுகுமுறைகள் மாறி, நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கும், எதிர்காலத்தில் பெறப்போகும் வெற்றிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு வேறு யாரும் அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டால் தான் உங்கள் வாழ்க்கை மாறும்.

இந்த உலகிலேயே மிக மிக முக்கியமான உறவுமுறை எது தெரியுமா? நீங்கள் உங்களுடன் வைத்திருக்கும் உறவு முறை தான்.

உங்களை சுய பரிசோதனை செய்யுங்கள். உங்களை நன்கு கவனியுங்கள். கஷ்டங்களை கண்டு கலங்கவேண்டாம். சிரமங்களுக்கு அஞ்சவேண்டாம். இழப்புகளை பொருட்படுத்தவேண்டாம்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போல. நாம் என்ன நினைக்கிறோமோ அதை தான் இந்த உலகம் நம்மிடம் பிரதிபலிக்கும்.

இந்த உலகமும் யதார்த்தமும் இந்த சவப்பெட்டியில் உள்ள கண்ணாடி போல. உங்களால் செய்துமுடிக்கக்கூடிய மகத்தான பணிகளை நினைவூட்டி உங்களை அறிய வைக்க உதவும். வாழ்க்கையை நீங்கள் எப்படி சந்திக்கிறீர்கள் என்பது தான் விஷயமே. அதில் தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

BE A WINNER. உங்களை நீங்களே செதுக்குங்கள். நீங்கள் என்னவாகப்போகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள். ஏனெனில் உங்களை தோல்வியடையச் செய்ய உங்களால் மட்டுமே முடியும். அடுத்தவர்களால் அல்ல.

No comments:

Post a Comment