நட்சத்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், மாஹேந்திரம், ரஜ்ஜு, வேதை, கண, யோனி ஆகிய ஏழு பொருத்தங்கள் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து எழுந்தன. ராசி, ராசி அதிபதி, வச்யம் ஆகிய மூன்றும் ராசியை வைத்து எழுந்தன. ஒரு ராசியில் 3 நட்சத்திரங்கள் இணைந்திருக்கும். 3 நட்சத்திரங்களை வைத்து நெருக்கத்தை ஆராய்வது ராசிப் பொருத்தம். ராசி அதிபதியை வைத்து பொருத்தம் ஆராயப்படும். வச்யப் பொருத்தமும் மூன்று நட்சத்திரங்களை வைத்து நிர்ணயிக்கப்படும்.
ஆழமாக சிந்தித்தால், அத்தனைப் பொருத்தங்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நட்சத்திரப் பொருத்தம் என்றே சொல்ல வேண்டி யிருக்கும். ராசியிலும், ராசி அதிபதி யிலும், வச்யத்திலும்... ராசியின் மொத்த உருப்படிகளுடன் இணைந்த நட்சத்திரத்தின் பொருத்தம் இறுதி செய்யப்படும். மற்ற ஏழு பொருத்தங் களுக்கு நட்சத்திரத்தின் பங்கு மட்டுமே பொருத்தத்தில் இணையும்.
27 நட்சத்திரங்களில் ஒன்றில் அத்தனைப் பேருடைய பிறப்பும் அமையும். மனிதர்களில் 27 வகையான இயல்புதான் இருக்கும் என்று சொல்ல இயலாது. மனிதனுக்கு மனிதன் ஏதாவது ஒரு வகையில் இயல்பு மாறுபடும். இயல்புக்குக் காரணம் கர்ம வினை. நட்சத்திரம் இயல்பை சுட்டிக்காட்டாது. ராசியில் அடங்கிய மற்ற உருப்படிகளுடன் இணைந்துதான் நட்சத்திரப் பலனை இறுதி செய்ய வேண்டும். அத்தனை பலன்களையும் பின்னுக்குத் தள்ளி நட்சத்திர பலன் மட்டும் சுதந்திரமாக ஒரு பலனைச் சொல்லாது. ஊடும் பாவும் போன்று நட்சத்திரங்களும், கிரகங்களும், ராசிகளும் பின்னிப்பிணைந்து கூட்டு பலனை இறுதியாக்கும். கிரகங்கள் சஞ்சரிக்கும் பயணப் பாதையாக நட்சத்திரங்கள் இருப்பதால், எல்லா கிரகங்களுக்கும் நட்சத்திர ஸம்பந்தம் இருக்கும். ராசியும், நவாம்சகமும் நட்சத்திர பாதத்துடன் இணைந்து உருவானது. நட்சத்திரங்கள் தங்களது பங்கை கிரகம், ராசி வாயிலாக வெளியிடும். ஜோதிடத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு ஆதாரமாக அமைந்திருக்கும் நட்சத்திரம்.
ராசி, கிரகம், நட்சத்திரம் ஆகிய மூன்றின் இணைப்பில் கர்மவினையின் தனி வடிவம் வெளிவரும். உப்பு, கசப்பு, புளிப்பு - இதன் கலவையில் மாறுபட்ட சுவையின் வெளிப்பாடு அமையும். அந்த மாறுபட்ட சுவைக்கு மூன்றில் ஒன்று மட்டும் காரணமாகாது; மூன்றின் இணைப்பும்தான் காரணம். நமது உடல் பஞ்ச பூதங்களின் ஒருவித கலவையில் உருப்பெற்றது. தனி பூதம் பலனை இறுதி செய்யாது. ஐம்பெரும் பூதங் களின் விகிதாசாரப்படி கலந்த கலவைதான் செயல்படும் திறனைப் பெறுகிறது. 'பஞ்சீகரணம் ப்ரக்ரியை’ என்று ஐம்பெரும் பூதங்களின் செயல்படும் தகுதியை கோடிட்டுக் காட்டும். ராசி, கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பலன் சொல்லி யிருக்கும் ஜோதிடம். ஆனால் தனி மனிதனின் இன்ப- துன்பங்களை இறுதி செய்வதில், கூட்டுப் பலனே கோலோச்சும். அதனதன் தனித்தன்மை அல்லது தனி பலனானது, கூட்டுப்பலனில் தன்னை இணைத்துக்கொண்டு, கர்மவினையின் தரத்துக்கு இணைந்து போகும்.
துவர்ப்பு - உப்பு - இதன் கலவையில், மூன்றாவது சுவை அனுபவத்துக்கு வரும். அந்த இரண்டின் பலனோடு இணைந்து பிரியமான சுவை உருவாகும் என்று பொருள். நெல்லிக்காயைச் சுவைத்த மறுகணம் தண்ணீர் அருந்தும்போது இனிப்பு தென்படும். அது நெல்லிக்காயின் சுவை அன்று. அதனுடன் தண்ணீர் கலவையில் இனிப்பு உதயமானது! மாறுபட்ட இயல்புடைய ஆண் - பெண் இருவரை தம்பதியாக இணைக்க, பத்துப் பொருத்தங் களின் கூட்டுப்பலன் இறுதி செய்யும். பத்துப் பொருத்தங்களில் ஒன்றுக்கு உயர்வு அளித்து, அதன் வழியில் முடிவெடுப்பது இறுக்கத்துக்கு வழிவகுக்காது.
இது ஷஷ்டாஷ்டகம், இது த்வித்வாதசம், இது வேதை, இது முன்றாம் தாரை, இது ரஜ்ஜு ஆகியவற்றைக் காட்டி, சேராது என்று சொல்வதும்... இது ஸமஸப்தகம், இது மகா நட்சத்திரம், இது 9-வது நட்சத்திரம் ஆகியவற்றைக் காட்டி சேரும், பொருந்தும் என்று சொல்வதும் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை. பத்துப் பொருத்தத்தில் ஐந்துக்கு மேல் இருந்தால் பொருந்தும்; அதற்குக் கீழ் இருந்தால் பொருந்தாது, இது 90% பொருந்தும், இது 30% பொருந்தாது... இவை, ஜோதிட சாஸ்திரத்தில் தென்படாது.
விடைத்தாளைத் தரம் பிரிக்கும் வரிசைகளின் கோட்பாடு ஜோதிடத்தில் பயனளிக்காது. 10 பொருத்தங்களில் ஒன்றின் குறையை மற்றொன்று நிறைவு செய்யும் விதத்தில் பொருத்தங் களின் இயல்பு இருக்கும். நட்சத்திரப் பொருத்தம் இல்லை எனில் மாஹேந்திரப் பொருத்தம் அதை நிறைவு செய்யும். ராசிநாதன் ஒன்றாக இருந்தாலோ, நண்பனாக இருந்தாலோ, ஸமஸப்தகமாக அமைந்தாலோ... ரஜ்ஜு, வேதை, கணம், ராசி ஆகியவற்றின் பொருத்தமின்மையை ஈடுகட்டிவிடும் என்கிறது ஜோதிடம் (ஏகாதிபத்யே மைத்ரேவா...). தன்னிச்சையாக தனது பலனை மற்ற பலன்களைப் பின்னுக்குத் தள்ளி நடைமுறைப்படுத்தும் தகுதி எந்தப் பொருத்தத்துக்கும் இல்லை. இணைந்து பலன் அளிக்கும் தகுதி மட்டுமே உண்டு.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம், 1, 3, 5, 7 என்றால் பொருந்தாது. 22-வது நட்சத்திரம் (88-வது நட்சத்திர பாதம்) பொருந்தாது. 27-வது நட்சத்திரம் (108-வது நட்சத்திர பாதம்) பொருந்தாது. 27 நட்சத்திரங்களில், மூன்று 9 வரிசைகளிலும் 1, 3, 5, 7 பொருந்தாது என்று சொல்லும். இவற்றை வைத்து பாமரர்கள் தங்கள் விருப்பப்படி பொருத்தத்தை இறுதி செய்கிறார்கள். பாமரர்களின் கணிப்பு வேறு, ஜோதிடர்களின் கண்ணோட்டம் வேறு, ஜோதிட சாஸ்திரத்தின் கண்ணோட்டம் வேறு.
ஆண் - பெண் இருவரது நட்சத்திரம், நட்சத்திர பாதம் ஒன்றாக இருந்தால் பொருந்தும் என்று சொல்லும். ராசி, ராசி அதிபதி ஒன்றாக இருந்தால், ஏக நட்சத்திரம் தோஷமில்லை பொருந்தும் என்று சொல்லும். 3-வது நட்சத்திரத்தில் முதல் பாதம் தவிர, மற்ற பாதங்கள் பொருந்தும். 5-வது நட்சத்திரத்தில் 4-வது பாதம் தவிர மற்றவை பொருந்தும். 7-வது நட்சத்திரத்தில் 3-ஆம் பாதம் தவிர மற்றவை பொருந்தும் என்று விவரிக்கும் ஜோதிடம் (ஆத்யம் சம்விபதி த்யாஜ்யம் ப்ரத்யரேச சதுர்த்தகம், நைதனே சத்ருதீயாம்சம் சேஷா: ஸர்வே சுபாவஹா:).
ராசிப் பொருத்தம் இருந்தால் 22-வது நக்ஷத்திரம்... அதாவது, 88-வது நட்சத்திர பாதம் தோஷம் இல்லை பொருந்தும் என்று சொல்லும். 27-வது நட்சத்திரம்... அதாவது, 108-வது நட்சத்திர பாதம் ஒரே ராசியாக இருந்தால் தோஷமில்லை என்று சொல்லும். ராசி அதிபதி ஒன்றாக இருந்தால் ஷஷ்டாஷ்டகம் தோஷம் இல்லை என்று சொல்லும் (ஏகாதிபத்யே மைத்ரேவா). பெண் நட்சத்திரத்தில் இருந்து 7-வது ஆண் நட்சத்திரமானால் பொருந்தாது. அது வத தாரை. அதாவது, இணையைப் பிரிக்கும் தாரை. அதே 7-வது நட்சத்திரத்துக்கு மாஹேந்திர பொருத்தம் உண்டு. '4-ன் 4’ அதாவது 7- மாஹேந்திரம் என்ற பொருத்தம். 'மஹா கேந்திரம்’ என்ற சொல் மாஹேந்திரம் என்று மருவி வந்தது. 4-க்கு கேந்திரம் என்று பெயர். கேந்திரத்தின் கேந்திரம்... நான்கின் நான்கு - 7- மஹாகேந்திரம். பெரிய கேந்திரம். அந்தப் பொருத்தம் இணையின் இறுக்கத்தை உறுதி செய்கிறது. ஒன்று வெட்டிவிடும் பொருத்தம். மற்றொன்று ஒட்ட வைக்கும் பொருத்தம். இவை இரண்டும் ஒரு புள்ளியில் வருவது பொருத்தமாகாது.
மூன்று 9 நட்சத்திரங்களில் வரும் 7-வது தாரை வதம். அதே தாரைக்கு மாஹேந்திரம் என்று சொல்கிறது ஜோதிடம். 7 இருக்கும் இடமெல்லாம் மாஹேந்திரம் இருக்கும். மாஹேந்திரம் இருக்கும் இடமெல்லாம் 7 இருக்காது. அதாவது வத தாரை இருக்காது. ஆகையால் 7-வது தாரை- அங்கு மாஹேந்திரம் செயல்படாது; வதம் செயல்படும். 7 அல்லாத இடங்களில் மஹேந்திரத்துக்கு இடமிருப்பதால் ஏழானது வதத்துக்கு விட்டுக்கொடுக்கலாம். 7 அல்லாத இடத்தில் வதத்துக்கு இடமில்லாததால், 7-ல் வதம் உறுதிப்படுகிறது என்கிற சாஸ்திரக் கோட்பாட்டை வைத்து, 7- வதம் சேர்க்கவேண்டாம்; மாஹேந்திரம் இருந்தாலும் பலமிழந்து விடும் என்று ஆராய்ந்து 7-ஐ ஒதுக்கலாம் என்று ஒரு சாரார் பரிந்துரைத்தனர் (ஸாவதாசநிரவதாசயோ: நிரவதாசம் பலீய:).
தினமும் இருவருக்கு அன்னதானம் அளிப்பார் அன்பர் ஒருவர். ஒருநாள் மூன்று பேர் வந்துவிட்டார்கள். மூன்றில் யாரை விலக்குவது என்ற கேள்வி எழுந்ததும்... தினமும் வருபவரில் ஒருவரை விலக்கி, புதிதாக வந்தவனுக்கு இடம் கொடுப்பது தகும் என்ற நியதிப்படி, புதிதாக வந்தவனுக்கு இடமளித்தான். அதுபோல், ஏழிலும் மாஹேந்திரத்தை ஏற்றால், வதத்துக்கு இடமில்லாமல் போய்விடும். ஆகையால் இடம் கிடைக்காத நிலையை உருவாக்காமல் இருக்க, 7-ல் இடம் கிடைத்த மாஹேந்திரத்தைத் தள்ளி, இடம் கிடைக்காத 7-ல் வதத்தை ஏற்பது பொருந்தும் என்று விளக்கம் அளித்தனர்.
தோஷம் என்பது இருவிதம். ஒரு பொருளில் முழுமையாகப் பரவியிருக்கும் தோஷம், எங்கோ ஒரு மூலை யில் ஒட்டிக் கொண்டிருக்கும் தோஷம் இப்படி இரு வகை உண்டு. பால்பாயசத்தில் பல்லி விழுந்து செத்துப் போனால் மொத்தத்தையும் தள்ளிவிடுவோம். பல்லி விஷம் முழுமையாகப் பரவியிருக்கும். மாம்பழத்தில் பறவை கொத்தியிருந்தால் மொத்தத்தையும் தள்ள மாட்டோம். கடித்த இடத்தைக் களைந்து, மற்ற பாகத்தை ஏற்போம். இந்த தோஷம் முழுமையாகப் பரவாத தோஷம் (ஏகதேசவ்யாப்தி - ஸர்வதேசவ்யாப்தி).
நட்சத்திரங்கள் பாதம் பாதமாகப் பிரிக்கப்பட்டு பலன் சொல்லப்பட்டிருக்கிறது. அரையாகவும் (இரண்டு பாதங்கள்) முக்கால், கால் பங்காகவும் பிரிக்கப்பட்டு ராசியில் இணைக்கப்பட்டிருக்கும். 88-வது பாதம் தோஷம், 108-வது பாதம் தோஷம் என்று சொல்லும் ஜோதிடம். பாதம் மாறுதலில், இரண்டு ராசிகளில் ஒரு நட்சத்திரம் இடம்பிடித்துவிடும். ஆயில்யம் 4-ஆம் பாதம் கண்டாந்தம், மகம் முதல் பாதம் கண்டாந்தம் என்று சொல்லும். நட்சத்திர பாதங்களை முன்வைத்து பலனில் மாறுதலைச் சொல்வது ஜோதிடத்தின் இயல்பு. புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் ராமர் தோன்றினார். ரேவதி 4-ஆம் பாதத்தில் ராவணன் தோன்றினான். இப்படியெல்லாம் பாதத்தோடு பலன் சொல்லும் பகுதி ஜோதிடத்தில் உண்டு.
அதுபோன்று, வததோஷமும் பாதத்தோடு முடிவடையும் தோஷம். நட்சத்திரம் பூராவும் வததோஷம் பரவியிருக்காது. 7-வது வத தாரையில் வெட்டிவிடும் தோஷம், மூன்றாவது பாதத்துக்கு மட்டும்தான் உண்டு. பாக்கி மூன்று (1, 2, 4) பாதங்களில் தோஷம் பரவாது. அந்த மூன்று பாதங்களில் மாஹேந்திரப் பொருத்தம் உண்டு. ஆகையால் எதிரிடையான இரண்டு பொருத்தங்களுக்கும் 7-வது புள்ளியில் இடம் உண்டு.
7-ல் வதமும், மாஹேந்திரமும் இணையும் என்று சொன்ன ஜோதிடத்துக்கு, எப்படி இணையும் என்பதையும் விளக்கத் தெரியும். அதைக் கண்ணுற்ற 'வித்யா மாதவீயம்’ விளக்கமளித்துப் புரிய வைக்கிறது. 7-வது தாரையில் மூன்றாவது பாதம் தோஷம்; 1, 2, 4 பாதங்கள் தோஷமில்லை என்ற விளக்கம் வித்யாமாதவீயத்தில் உண்டு. அதை விளக்கும் தறுவாயில்... மூன்றிலும் (3-ஆம் தாரை) ஐந்திலும் (5-ஆம் தாரை) வரும் தோஷத்தையும் விளக்கி தெளிவு படுத்தியது. அது, மூன்றில் முதல் பாதமும், ஐந்தில் 4-ஆம் பாதமும் தோஷம் மற்றவை ஏற்கலாம் என்று விளக்கியது (ஆத்யம்சம் விபதி...).
நுணுக்கமான விஷயங்களை அலசி ஆராயும் ஜோதிடம், தான் வெளியிட்ட தகவல்களில் அவநம்பிக்கை வைக்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்லும். பத்து பொருத்தங்களை ஆராயும் விஷயத்தில் சாஸ்திரக் கோட்பாடுகளையும் சேர்த்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். விருப் பப்படி பலன் சொல்லும் எண்ணம் தோன்றக் கூடாது. பல நல்ல இணைப்புகள் விடுபட்டு விடும். தகாத இணைப்புகள் வென்றுவிடும். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
No comments:
Post a Comment