பொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது? தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம்.
கணிப்பொறியிலோ, செல்ஃபோனிலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட புதியதொரு மென்பொருளைப் பற்றி ஆராயலாம். ஆனால் இவையெல்லாம் போதாது. கீழே சொல்லப்பட்ட முறையான பயிற்சிகளை சரியாக செய்து வந்தால், மூளைக்குள்ளே உள்ள பலதரப்பட்ட திறமைகளை, முதுமையின் காரணமாகவோ, சரியான தூண்டுகோலின்மையினாலோ, அத்திறமைகள் மங்குவதற்கு முன்பாகவே, எப்போதும் புதுப்பித்துக் கொள்ள முடியும். இப்பயிற்சிகள் வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் இவற்றை தினப்படியான செயல்களுடன் ஒன்றிணைத்து செய்யத் தொடங்கினால், அதுவும் சிலவாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வேறுபாட்டை உணர முடியும்.
காணுதல் :
ஒரு வாரம் முழுவதும் தினமும் ஒரு பொருளையோ, அல்லது ஒரு நபரையோ, உற்று நோக்கவும். இரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யும் பொழுது அல்லது, அலுவலகத்தில் தேநீர் இடைவேளையில் இதைச் செய்யலாம். கையில் ஒரு குறிப்பேட்டினை வைத்திருந்து, பார்த்த பொருளையோ அல்லது நபரையோ உடனே வரைந்து பார்க்கவும். இது குறுகியகால நினைவாற்றலுக்கான பயிற்சியாகும். அந்த வார முடிவில், பார்த்த ஏழு பொருள்களின் அல்லது மனிதர்களின் படங்களை உங்கள் நோட்டுப் புத்தகத்தில் ஏற்கனவே வரைந்த படங்களைப் பார்க்காமல், மீண்டும் வரைந்து பார்க்கவும். இது நீண்டகால நினைவாற்றலுக்கான பயிற்சியாகும்.
கேட்டல் :
அலைபேசியில் யாரிடமிருந்தாவது அழைப்பு வரும் போதெல்லாம், திரையில் தெரியும் பெயரைப் பார்க்காமல், அழைப்பவரின் குரலை மட்டும் வைத்து, அழைப்பது யாரென்று அறிய முயலவும் அல்லதுமிகவும் பிடித்தமான திரைப்பாடலைக் கேட்கும் பொழுது, அப்பாடலின் பிண்ணனியில் இசைக்கப்படும் இசைக்கருவியை அடையாளம் காண முயலுங்கள். இதேபோல், தினமும் ஒரு பாடலுக்கான இசைக்கருவியை கண்டுபிடிக்கும் பயிற்சியை ஒரு வாரத்திற்குச் செய்து வாருங்கள்.
வாசனை முகர்தல்/சுவை உணர்தல் :
உணவகத்திற்கு சென்று, நல்ல வாசனையான புதியதொரு உணவு வகையை ஆர்டர் செய்து, அவ்வுணவின் வாசனையையும், சுவையையும் வைத்து, அதில் கலந்துள்ள மசாலாப் பொருள்களை அடையாளம் காண முயலுங்கள். வாசனை அல்லது சுவையின் மூலம், பொருள்களை அடையாளம் கண்டு கொண்ட பிறகு, சர்வரின் மூலமாகவோ, அவ்வுணவைப் பற்றித் தெரிந்த வேறு யார் மூலமாகவோ, அது சரிதானா என்று சரிபாருங்கள்.
தொடு உணர்தல்/சுவை உணர்தல் :
வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, கண்களை மூடிக் கொண்டு, உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருள்களை, கையால் தொட்டுப் பார்த்தோ அல்லது அவற்றின் வாசனையை வைத்தோ, அப்பொருள்களை அடையாளம் கண்டுபிடியுங்கள்.
நினைவாற்றல் :
அடிக்கடி அழைக்கும் இரண்டு நண்பர்களின் தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அவற்றை மனப்பாடம் செய்துகொண்டு, அந்த எண்களை அடுத்த முறை அழைக்கும் பொழுது, அவற்றை தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள பட்டியல் மூலமாக டயல் செய்யாமல், நினைவிலிருந்து டயல் செய்ய வேண்டும். அந்த வார முடிவில், அனைத்து 14 எண்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப் பார்க்கவும்.
தூரம், பரப்பளவு, பருமன் ஆகியவற்றைப் பார்வையால் அளத்தல் :
விஷுவோ ஸ்பேஷியல் திறமை (Visuo spatial abilities) எனப்படும், பார்வையால் அளக்கும் திறமையினைக் கொண்டு, தூரம், பரப்பளவு, பருமன், ஆகியவற்றைப் பார்வையால் அளக்க முடியும். வயது ஏற ஏற இந்தத் திறமை மங்கி கொண்டே வரும். எனினும், இத்திறமையை, பட்டைதீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ள இதோ சில வழிகள். ஒரு புதிய இடத்திற்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய பிறகு, சென்று வந்த வழியை நினைவிலிருந்து, வரைபடமாக, ஒரு தாளில், எழுதவும். ஒரு பொருளின் தடிமன் அல்லது பருமன் எவ்வளவு இருக்கும் என்று பார்வையினாலேயே மதிப்பீடு செய்யவும். பின்னர் அதனை அளந்து பார்த்து மதிப்பீட்டை சரிபார்க்கவும்.
உருவாக்கும் திறனை மேம்படுத்தவும் :
தனித்தனியான, சிறு சிறு பொருள்களைக் கொண்டு, வேறொரு புதிய பொருளை உருவாக்கும் மனத்திறனின் அளவு இதுவாகும். இத்திறனை, பின்வரும் இரண்டு பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தலாம். அதிகத் துண்டுகளில்லாமல் எண்ணிக்கையில் குறைந்த எண்ணிக்கை கொண்ட, ஜிக்சா (jigsaw puzzle)புதிரை எடுத்துக் கொண்டு, அத்துண்டுகளை சரியாகச் சேர்க்க முயலவும். புதிரை முடிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். இதே புதிரை அடுத்தவாரம் செய்யுங்கள். அப்போது எடுத்துக் கொண்ட நேரத்தை மீண்டும் குறியுங்கள். போரடித்தால், வேறு புதிரைத் தேர்ந்தெடுங்கள்.
தர்க்கவியல் திறமையை (Logic Ability) வளர்த்துக் கொள்ளவும் :
நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தும் நியாயமாக அல்லது அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வழியில் ஏதே ஒரு வழியில் இயங்குகின்றன என்று அனைவருமே எண்ணுவோம். ஒர சில சமயங்களில், அந்த ஒழுங்கினை மறந்துவிடுகிறோம். இத்தகுதியைக் கூர்மையாக்கும் பயிற்சி இதோ. மளிகைப் பொருள் வாங்கும் பட்டியலை நினைவுகூர்ந்து பார்க்கவும். இது மிகவும் எளியதுபோலத் தோன்றினாலும், சொல்லும் பொழுது மிகக் கடினமானது என அறியமுடியும். பள்ளியில் படிக்கும் பொழுது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் பட்டியலை எவ்வாறு மனப்பாடம் செய்தோம்? அதே போன்ற உத்தியைப் பயன்படுத்தி, மளிகைப் பொருள் பட்டியலையும் மனப்பாடம் செய்ய முயலவும்.
வார்த்தைகளுடன் விளையாடவும்- சொல் திறனை வளர்த்துக்கொள்ளவும் :
பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ, சரியான சொற்களைப் பயன்படுத்தினால், நீண்டகால மற்றும் குறுகியகால நினைவாற்றலுக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்று பொருள். சொல் திறனை மேம்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள பயிற்சியை தினந்தோறும் செய்யவும். நம்மில் பெரும்பாலானோர், தினந்தோறும் தொலைக்காட்சியிலோ, செய்தித்தாள்களிலோ செய்திகளைக் காண்பது உண்டு. காலையில் சில தலைப்புச் செய்திகளை நினைவில் பதித்துக் கொள்ளவும். மாலையில் அத்தலைப்புச் செய்திகளை வார்த்தைகளால், எழுதிப் பார்க்கவும். ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளவும்.
நியூரோபிக்ஸ் :
மேலே குறிப்பிட்டுள்ளவை, உடலும் உள்ளமும் சார்ந்த திறமைகளை மேம்படுத்த உதவும். ஆனால் ஒரே வேலையை செய்ய, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட புலன்களைப் பயன்படுத்தும் நியூரோபிக் பயிற்சிகள் உள்ளன. உங்களுக்கான சில ஆரம்பகட்டப்பயிற்சிகள் இதோ. – வழக்கமாக வலதுகையால் தானே பல்துலக்குவோம்? இப்போது இடதுகையால் பல்துலக்குங்கள். – கண்களை மூடிக்கொண்டு, ஆடை அணியவும். – வேறு சிலருடன் அமர்ந்து உணவு உண்ணவும். ஆனால் பேசக்கூடாது. கண்களால் மட்டும் ஜாடை காட்டலாம். – மழைத்துளி விழும் ஓசையைக் கேட்டு அதற்குத் தக்கவாறு விரல்களால் தாளம் போடவும். – அலுவலகத்திற்கு செல்லும் பொழுது ஒரு புதிய வழியில் செல்லவும்.
சுறுசுறுப்பாக இருங்கள் :
உடலியக்கம் சுறுசுறுப்பாக இருந்தால், உடல் எடை குறைந்து, புதிய மூளை செல்கள் உருவாவதற்கும், மூளைக்குள் ஆக்ஸிஜன் பாய்ந்து நரம்புச் செல்களின் செயல்பாடு (neurotrophic) வளர்வதற்கும் உதவும். நரம்பு செல்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், புதிய நரம்பு செல்கள் உருவாகி, நரம்புகளிலிருந்து மூளைக்குள் செய்திகளைக் கடத்தும், நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் (neurotransmitters) எண்ணிக்கையைப் பெருக்கும். மேற்கூறிய பயிற்சிமுறைகளை உடற்பயிற்சிகளுடன் இணைத்து செய்து வந்தால் தான், தகுந்த பலன் அளிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment