Wednesday, August 28, 2013

வாழ்க்கை - முயற்சி

எல்லோருக்குமே வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. பெரும்பாலான மக்களின் மனநிலையை ஒட்டி கீழே சில கேள்விகளும் அதற்கான பதில்களும்:

1 வாழ்க்கையில் சீக்கிரம் நல்ல உயரத்திற்குச் செல்ல என்ன வழி?

2 சில வாரங்களிலேயே கோடீஸ்வரன் ஆவது எப்படி?

3. உலகம் முழுவதும் உங்கள் பெயரை உச்சரிக்க என்ன செய்ய வேண்டும்?

4. கின்னஸ் புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

அதற்கான பதில்கள்:

1. ஒரு விமானத்தில் (டிக்கெட் எடுத்துதான்) ஏறினால் நல்ல உயரத்தை எளிதில் அடைந்து விடலாம்.

2. சட்டத்தில் சொல்லியுள்ளபடி (வீடுதிரும்பல் மோகன் இதற்கு உதவுவார்) உங்கள் பெயரை "கோடீஸ்வரன்" என்று மாற்றிக் கொண்டால் போதும், நீங்கள் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்.

3. இன்றைய தேதியில் உலகம் யாருடைய பெயரை உச்சரிக்கிறதோ, அந்தப் பெயரை உங்கள் பெயராக மாற்றிக்கொள்ளுங்கள். உலகம் உங்கள் பெயரைத்தான் உச்சரிக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம்.

4. ஒரு கின்னஸ் புத்தகத்தை வாங்கி உங்கள் பெயரை ஏதாவது ஒரு பக்கத்தில் (நீங்கள் விரும்பும் துறை உள்ள இடத்தில்) எழுதிவிடுங்கள். உங்கள் பெயரும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று விடும்.

மொக்கை போடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.  கஷ்டப்பட்டு அடைய வேண்டிய நிலைகளை சுலபத்தில் அடைய நினைக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்படி எழுதினேன்.

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் வாழ்க்கை கதையை படித்துப் பாருங்கள். அவர்கள் இந்நிலையை அடைய எத்தகைய தியாகங்களைக் கொடுத்து, எப்படி உழைத்து முன்னேறினார்கள் என்பதை உணரலாம்.

சினிமாவில் மட்டும்தான் ஒரே பாட்டில் ஒரு ஏழை பணக்காரன் ஆக முடியும் என்பார்கள்.  நான் அதைக் கூட  ஒப்புக்  கொள்ள  மாட்டேன்.  நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அந்த ஒரு பாடலிலேயே, ஹீரோ முதலில் நடந்து செல்வார், சைக்கிளில் செல்வார், மொபெட்டில் செல்வார். பிறகு காரில் செல்வார். அதன் பிறகு, அநேகமாக பாட்டின் முடிவில் ஒரு பங்களாவில் நுழைவார்.  ஆக, அதில் கூட ஒரு லாஜிக் சொல்லாமல் அப்படிக் காட்ட முடியாது.

நம்முடைய குறிக்கோள் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம், அது நல்ல குறிக்கோளாக இருக்க வேண்டும், அது ரொம்ப முக்கியம்.  பிறகு, அதை அடைய வேண்டிய வழிகள் எத்தனை உள்ளனவோ, அத்தனையையும் பரிசீலியுங்கள்.  வழிகளும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவையாக இருப்பது மிகவும் அவசியம்.  அதில் உங்களுக்கு ஏற்ற வழி என்று ஒன்றிரண்டு இருக்கும், அதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது முழு மூச்சாக அந்த வழியில் பயணிக்கவும்.  

முக்கியமாக இப்போதுதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  உங்கள் வளர்ச்சியில் பொறாமைப் படுபவர்கள், உங்களை ஏளனமாக நினைப்பவர்கள், உங்கள் எதிரிகள், மறைமுக துரோகிகள் எல்லோரும் தங்களால் இயன்ற அளவு, உங்கள் முயற்ச்சிகளுக்கு தடை போடுவார்கள் .

“உனக்கு இதெல்லாம் தேவையா?”

“உள்ளூர்ல கோழி பிடிக்க முடியாதவன், வெளியூர்ல வேலை தேடித் போகலாமா?”

“இருக்கறவன் அள்ளி முடிஞ்சுக்கறான், நீ அதுக்கெல்லாம் ஆசைப் பட முடியுமா?”

என்றெல்லாம் உங்களிடம் நேரடியாகவும்,

“இதைப் பாருடா, இவனுக்கெல்லாம் இந்த ஆசை வருது, இவனுக்கு இருக்கற யோக்கியதைக்கு இது ரொம்பவே அதிகம்தான்”

“நான் எழுதித் தர்றேன், இவன் மட்டும் இதை செய்து முடிச்சுட்டா, நான் ஏன் பெயரை மாத்திக்கறேன்”

“நான் நினைக்கிறேன், இவன் மூளை மழுங்கிப் போச்சு, அதான் இப்படி பைத்தியமா அலையறான்”

என்றெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னாலும் எதிரிகளும், துரோகிகளும் உங்களைப் பற்றி விமரிசிப்பார்கள்.

நீங்கள் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

நினைவில் வையுங்கள், இதே விமரிசகர்கள்தான், நீங்கள் நாளை உங்கள் லட்சியத்தை அடைந்தவுடன்,

“எனக்கு அப்பவே தெரியும்டா, உனக்கு ஏத்த லட்சியத்தைத் தான் நீ தேர்ந்தேடுத்திருக்கே, கங்கிராட்ஸ்!”
“உன் திறமைக்கு இதுவே லேட்தான், இன்னும் சீக்கிரமாவே இது உனக்கு கிடைச்சிருக்கணும்”

“உன்னோட பிரெண்ட் என்பதில் எனக்கு எப்பவுமே மகிழ்ச்சிதான்”

என்று உங்களிடமே, வழிய வழியப் பேசுவார்கள்.  இந்த உலகமே உங்களைக் கொண்டாடும்.

எனவே, குறுக்கு வழியை யோசிக்காமல், நேர்வழியில் நல்ல ஒரு நிலையை அடைய இன்றே திட்டமிடுங்கள்.

இறுதியாக  ஒன்று,

உங்கள் வாழ்க்கை உங்கள் வெற்றியில் தான் உள்ளது.

உங்கள் வெற்றி உங்கள் லட்சியத்தை அடைவதில் உள்ளது.

உங்கள் லட்சியம் உங்கள் திறமையைப் பொறுத்துள்ளது.

உங்கள் திறமை உங்கள் எண்ணங்களைப் பொறுத்தது.

உங்கள் எண்ணங்களை சீர்படுத்துவது உங்கள் கையில் உள்ளது.

எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது.

திட்டமிடுங்கள், வெற்றி பெறுங்கள்
வாழுங்கள், வாழ விடுங்கள்!

No comments:

Post a Comment