மகான் அரவிந்தர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். 1872-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணதன் கோஷ், தாயார் சுவர்ணலதா தேவி. இவர்களின் கடைசி மகன்தான் அரவிந்தர். இவருக்கு 2 அண்ணன்கள் உண்டு. தந்தை கிருஷ்ணதன் கோஷ் புகழ்பெற்ற டாக்டராக திகழ்ந்தவர்.
அரவிந்தர் 5 வயதாக இருந்தபோது டார்ஜிலிங்கில் உள்ள கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 7 வயது இருந்த போது அவரும், 2 சகோதரர்களும் இங்கிலாந்தில் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் செயின்ட்பால் பள்ளியில் படித்த அவர் பின்னர் மான்செஸ்டர், கேம்பிரிட்ஜ் கல்லூரிகளில் படித்தார்.
அவரது தந்தை அரவிந்தரை ஐ.சி.எஸ் (இப்போதைய ஐ.ஏ.எஸ்) படிக்க வைக்க விரும்பினார். அப்போது இங்கிலாந்தில் தான் அதை படிக்க முடியும். இதற்கான நுழைவு தேர்வில் அரவிந்தர் 250 பேரில் 11-வது ஆளாக வந்தார். கிங்ஸ் கல்லூரியில் ஐ.சி.எஸ் 2 ஆண்டு படித்த அவர் அனைத்து தேர்விலும் வெற்றி பெற்றார்.
அப்போது கடைசியாக குதிரை ஏற்ற தேர்விலும் வெற்றி பெற்றால் தான் ஐ.சி.எஸ் ஆக முடியும். ஆனால் ஆங்கிலேயர் வழங்கும் அந்த ஐ.சி.எஸ் பட்டத்தை அவர் பெற விரும்பவில்லை. எனவே குதிரை ஏற்ற தேர்வுக்கு வேண்டும் என்றே தாமதமாக சென்றார்.
இதனால் அவர் ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெறவில்லை. 14 ஆண்டுகள் இங்கிலாந்தில் படித்து வந்த அரவிந்தர் இந்தியா திரும்பினார். இங்கு வந்ததும் பரோடா சம்ஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அரசு உயர் அதிகாரியாக பணியாற்றிய அவர் பின்னர் பரோடா கல்லூரி ஆசிரியராக பணியில் சேர்ந்து கல்லூரி துணை முதல்வர் பதவி வரை உயர்ந்தார்.
இந்த கால கட்டத்தில் இந்திய சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இளைஞர்களையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட செய்தார். அந்த நேரத்தில் கொல்கத்தாவில் தொடங்கபட்ட தேசிய கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றார்.
வந்தே மாதரம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய அவர் அதில் சுதந்திர உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் கட்டுரைகளை எழுதினார்,1907-ம் ஆண்டு சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற அவர் திலகருடன் சேர்ந்து செயல்பட்டார்.
இந்தியாவிற்கு பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலில் அறிவித்தவர் அரவிந்தர்தான். இந்த நேரத்தில் தான் அலிப்பூர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அதில் அரவிந்தர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஒரு வருடம் ஜெயிலில் இருந்த நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கபடாததால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஜெயிலில் இருந்த போது அவரது மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆன்மீகத்தை நாடினார். இந்த நிலையில் அவரது உள்மனதில் அவரை புதுச்சேரிக்கு செல்லும் படி கட்டளை வந்தது.
எனவே அப்போது மேற்கு வங்காளம் அருகே இருந்த புதுச்சேரி பகுதியான சந்திரநாகூருக்கு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் புதுச்சேரி வந்தார். 1910-ம் ஆண்டு ஏப்ரல் 4 -ந்தேதி புதுச்சேரி வந்த அவர் இங்கு ஆன்மீக பணிகளில் ஈடுபட தொடங்கினார்.
சுதந்திர போராட்டம், அரசியல் அனைத்தையும் கைவிட்ட அவர் முழு நேர ஆன்மிகவாதியானார். புதுவித கோகாசனங்களை உருவாக்கி போதனைகளை செய்தார். ஆன்மீக பத்திரிகைகளையும் நடத்தி ஆன்மீக கட்டுரைகளை எழுதி வந்தார்.
இந்த நேரத்தில் தான் 1914-ம் ஆண்டு பிரான்சை சேர்ந்த மீரா (அன்னை) புதுவை வந்தார், அவர் அரவிந்தரை சந்தித்தார். பின்னர் சிறிது காலம் ஜப்பான் சென்ற மீரா மீண்டும் 1920-ம் ஆண்டு புதுவை வந்தார். அப்போது முதல் மீரா அரவிந்தரின் முழு நேர சீடராகிவிட்டார்.
1926-ம் ஆண்டு அரவிந்தர் ஆசிரமத்தை தொடங்கினார். இதற்கு முக்கிய காரணமாக அன்னை மீரா இருந்தார். அரவிந்தர் மற்றும் அன்னையின் ஆன்மீக பணிகளால் ஆசிரமம் வேகமாக வளர்ந்தது.
1950-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி தனது 78-வது வயதில் அரவிந்தர் இந்த உலகைவிட்டு மறைந்தார். அதன் பிறகு அன்னை அரவிந்தரின் பணியை தொடர்ந்து செய்து வந்தார். அன்னை 1973-ம் ஆண்டு மறைந்தார்.
No comments:
Post a Comment