இன்று நட்பு தினம். FRIENDSHIP DAY. ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்தளவு அவசியமோ அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம். நமது பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நண்பன் யாராக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க முடியும். ஒருவரின் வாழ்க்கையையே திசைமாற்றும் வல்லமை கொண்டது நட்பு என்பதால் நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
நட்பு குறித்தும் நண்பர்கள் குறித்தும் இலக்கணங்கள் மாறிவிட்ட இன்றைய காலகட்டங்களில், நட்பு என்றால் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் நண்பர்கள் என்றால் யார் யார் என்பதை வள்ளுவர் எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் மிக அழகாக விளக்கியிருக்கிறார். நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு என்று நட்புக்கு மட்டும் மூன்று நேரடி அதிகாரங்களை திருவள்ளுவர் வழங்கியிருக்கிறார் என்றால் நட்பு ஒருவரின் வாழ்வில் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணிப்பாருங்கள்.
“என் நண்பனிடம் இருக்கும் கெட்டப் பழக்கம் என்னை பாதிக்காது” – என்று கூறுவது சரியா ?
தீய நண்பர்களின் நட்பும் சகவாசமும் இருக்கும் சிலர், “என் நண்பர்களிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்கள் என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும், ஆனால் எனக்கு நண்பர்களாக இருந்தால் போதும்” என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.
அது தவறு. ஒரு ஆப்பிள் கூடையில் ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தாலும் அது மற்ற ஆப்பிள்களையும் கெடுத்துவிடும். அதுப் போலத் தான் இதுவும்.
பள்ளி செல்லும் பிள்ளைகளை கொண்ட பெற்றோர் தமது பள்ளியில் தங்கள் குழந்தையின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையை பற்றி விசாரித்து நல்ல ஒழுக்கமுடைய (கவனிக்க… ஒழுக்கம். படிப்பு அல்ல.) பிள்ளையின் பக்கத்தில் அமருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதையொட்டி தான் உங்கள் பிள்ளையின் வளர்ச்சி இருக்கிறது.
தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும், அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். உண்மையில் நட்பு என்கிற சொல்லையே இது களங்கப்படுத்துவதாகும். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுக்காது இருப்பதுதான். எனவே, யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல நண்பர் என்ற போர்வையில், நம் வாழ்வை கெடுக்கும் எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
“சிகரெட் பிடிக்கவில்லை என்றால் நீ ஒரு ஆம்பிளையே இல்லை” என்று உசுப்பேற்றும் நண்பர்கள் ஏராளம். நட்பை மதிப்பவனாயிருந்தால், இந்த மதுவை குடி என்று அன்பான எச்சரிக்கை கொடுத்து பலரை புகைக்கும் மதுவிற்கும் அடிமையாக்குபவர்களும் ஏராளம். நண்பர்களின் மனம் கோணக்கூடாதே என்பதற்காக புகைப்பிடித்து, அதற்கு அடிமையாகி, தங்களின் ஆரோக்கியத்தை பலிகொடுத்தவர்கள் பலர்.
“லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி. எல்லாத்தையும் கத்துக்கணும்”
“லைஃபை என்ஜாய் பண்ணனும் மச்சி. எல்லாத்தையும் கத்துக்கணும்” என்று அபத்தமாக சொல்லி, மது உள்ளிட்ட தவறான பழக்கங்களுக்கு பழக்கிவிடும் நண்பர்களும் அதிகம். இத்தகையோர் தங்களின் மகிழ்ச்சி மற்றும் சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, மதுவை ஒரு துணையாக்கிக் கொள்கின்றனர். தீய நண்பர்கள் புகை மற்றும் மதுப் பழக்கம் மட்டுமின்றி, வேறு பல ஒழுக்கக்கேடான விஷயங்களிலும் நமது ஆர்வத்தைத் தூண்டி, ஏதாவது ஒரு பொருந்தாத காரணத்தை சொல்லி, நம்மை அந்த ஆபத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
இதன் மூலம் நாம் நமது கவனத்தை இழப்பதோடு, வாழ்க்கையெனும் ஓட்டப்பந்தயத்தில் பின் தங்கிவிடுகிறோம். மேலும், ஒழுங்காக படித்து, நாலு விஷயம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தணியாத தாகத்தோடு இருக்கும் ஒரு மாணவனை கிண்டலடிப்பதோடு, வயசுப் பையன் அல்லது பெண் இவ்வாறு இருக்கக்கூடாது என்றும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறி மனதைத் கெடுக்கின்றனர்.
சிகரெட் மது உள்ளிட்டவை தான் தீய பழக்கங்கள் என்றில்லை. அடுத்தவர்களை ஏமாற்றுவது, கடமையை மறந்து களிப்புற்றிருப்பது, நேரத்தை வீணடிப்பது, கோள் மூட்டுவது, உழைக்காமல் உண்பது, சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்வது இவையும் தீய பழக்கங்களே. இத்தகு செயல்களை செய்பவர்களிடம் சிகரெட், மது பழக்கங்கள் இல்லாவிட்டாலும் அப்பழக்கம் உள்ளவர்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்கள்.
இளமையில் கடமையை மறந்துவிட்டு தீயவர்களோட சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாவோர், தமது வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (குறள் 792)
(பொருள் : ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.)
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு சவால்கள் அதிகம். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சொல்லாமல் கொள்ளாமல் தங்களது மகனின் அறைக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவேண்டும்.
நல்ல நண்பன் என்பவன் யார் ?
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787)
(பொருள் : நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.)
நல்ல நண்பன் என்பவன் என்றுமே தனது நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். தனது நண்பன் தீமைகளின் பக்கம் சென்றால்கூட, புத்திசொல்லி திருத்த முயற்சிப்பான். ஒருவேளை, தான் ஏதேனும் கெட்டப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தாலும்கூட, தன் நண்பன் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகாதபடி தடுப்பான்.
அந்த நல்ல நண்பன் சீரிய சிந்தனைக்கும், அறிவு முன்னேற்றத்திற்கும், ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கும் எப்போதும் துணை நிற்பான். அவனும் உயர்வதோடு, தன்னை சார்ந்தவன் உயரவும் அவன் காரணமாக இருப்பான்.
எனவே, தயவுசெய்து நல்ல நண்பர்கள் என்றால் யார்? என்று அடையாளம் காண கற்றுக் கொள்ளுங்கள். ஒரு மனிதனின் ஆதரவுக்கும், முன்னேற்றத்திற்கும்தான் நட்பே ஒழிய, அது ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க கூடாது.
ஒரு நட்பால் நீங்கள் பல கெட்டப் பழக்கங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வீழ்ச்சியடைவீர்கள் என்று தெரிந்தால், எந்த தயக்கமுமின்றி, அந்த நட்பை அமைதியாக துண்டித்து விடவும். அதனால் உங்களுக்கு சிறியளவில் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால்கூட, பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. (குறள் 800)
(பொருள் : மனத்தில் மாசு இல்லாத நல்லவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். தீயோரின் நட்பை, என்ன விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.)
எனவே தீயோர்களின் நட்பை என்ன விலைகொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
உங்களை சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்களா ?
நாம் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது தான். உங்களை சுற்றி உள்ள நண்பர்களில் நல்ல நண்பன் என்று யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு திருமண வயதில் அக்காவோ தங்கையோ இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியோடு மனப்பூர்வமாக அவளை எவருக்கு திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொள்வீர்களோ அவரே உங்கள் உண்மையான / நல்ல நண்பன்.
இறுதியாக….
எத்தகையோர் நட்பை நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் தெரியுமா?
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். (குறள் 795)
(பொருள் : தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.)
நட்பு தினமான இன்று நட்புக்கு இலக்கணமாய் திகழ்வோரின் நட்பு உங்களுக்கு இருந்தால் அந்த நட்பை போற்றுங்கள். இல்லையேல் வள்ளுவர் கூறியதைப் போல ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
HAPPY FRIENDSHIP DAY
எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு FORWARD மெயிலிலிருந்து ஒரு அற்புதமான தகவலை தருகிறேன். நீங்களும் அந்த சமயத்தில் இதை படித்திருக்கக் கூடும். எதற்கும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நல்ல விஷயம் தானே!
Simple Friends vs. Real Friends
A simple friend has never seen you cry.
A real friend has shoulders soggy from your tears.
A simple friend doesn’t know your parents’ first names.
A real friend has their phone numbers in his address book.
A simple friend brings a bottle of wine to your party.
A real friend comes early to help you cook and clean.
A simple friend hates it when you call after he has gone to bed.
A real friend asks you why you took so long to call.
A simple friend seeks to talk with you about their problems.
A real friend seeks to help you with your problems.
A simple friend wonders about your romantic history.
A real friend could blackmail you with it.
A simple friend, when visiting, acts like a guest.
A real friend opens your refrigerator and helps himself.
A simple friend thinks the friendship is over when you have an argument.
A real friend knows that it’s not a friendship until after u’ve had a fight.
A simple friend expects you to always be there for them.
A real friend expects to always be there for you!
No comments:
Post a Comment