Tuesday, August 20, 2013

அவ்வப்போது ஏற்படும் வலிகளை அசட்டை செய்ய வேண்டாம்

தலைவலி,நெஞ்சுவலி,பல்வலி போன்ற பல்வேறு பொதுவான வலிகள் நம் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. போகிற போக்கில் நாம் அவற்றை புறக்கணித்துவிட்டு செல்வதுண்டு. ஒருசில வலிகள் நோயின் அறிகுறிகளாக இருப்பதில்லை. அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்பது வள்ளுவன் வாக்கு. எனவே எல்லா அறிகுறிகளையும் புறக்கணிப்பது அறிவற்ற செயலாகும்.

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைக் கூட பகலில் வென்றுவிடும், அதுபோல் சரியான நேரத்தில் நோயின் அறிகுறியைக் கண்டு பரிசோதனை செய்தால் நோயை முதலில் கண்டுபிடித்து எளிதாக தீர்க்க முடியும். எந்தெந்த அறிகுறிகள் புறக்கணிக்ககூடாதவை என்று கண்டறிய வேண்டியது என்பது இன்றியமையாதது. சில வலிகள் மிக மோசமான நோயின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

ஆகவே அவற்றைப் புறக்கணிக்க வேண்டாம். அப்படிப்பட்ட புறக்கணிக்கக் கூடாத வலிகள் மற்றும் அறிகுறிகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அவற்றை படித்து நோயின் அறிகுறிகளை கண்டுபிடித்து பரிசோதனை செய்தால் நோய்களைத் தீர்க்க முடியும்.

அடிக்கடி வீக்கம்

பெண்கள் மாதவிடாய் சுழற்சி காரணமாக குண்டாகிவிட வாய்ப்பு இருக்கிறது. வழக்கத்தைவிட அதிகமாக பருத்துவிட்டால், பரிசோதிப்பது நலம். அடிப்படையான மகளிர் நோய் பிரச்சினை காரணமாக அவ்வாறு ஏற்படலாம். எனவே விரைவில் உங்கள் மகப்பேறு மருத்துவரைச் சென்று சந்தியுங்கள்.

மண்டையை உடைக்கும் தலைவலி

உங்கள் மூளையில் உள்ள இரத்த குழாய் திடீரென வெடிப்பதின் காரணமாக மிகவும் கடினமான வலியைத் தூண்டக்கூடிய தலைவலி ஏற்படலாம்.

பல்வலி

ஐஸ் கிரீம் சாப்பிடும்போதோ அல்லது குளிர்பானம் குடிக்கும் போதோ லேசான பல்வலி வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அதீதமான வலி உண்டானால், பல் மருத்துவர் இருக்கும் திசை நோக்கி பயணம் மேற்கொள்ளுங்கள். சொத்தை பல்லால் கூட இந்தவலி ஏற்படலாம். இம்மாதிரியான அறிகுறிகள் தென்படும்போது பல் மருத்துவரை சந்திப்பதை தாமதப்படுத்தினால், வாய் முழுவதும் பரவக்கூடும்.

நெஞ்சு வலி

சில உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தும். சாதாரண நெஞ்சு வலிக்கும், கடுமையான நெஞ்சு வலிக்கும் இடையேயான வித்தியாசத்தை நீங்கள் கண்டறியும் வேளைகளில், இதய மருத்துவரிடம் செல்ல தயங்க வேண்டாம். உங்கள் நெஞ்சில் ஏதோ சுமை உள்ளது போல் வலி இருந்தால் , அது மாரடைப்புக்கான அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.

இயற்கைக்கு மாறான முடி வளர்ச்சி

நம் அனைவர்க்கும் உடலின் பல பகுதிகளில், ஆங்காங்கே முடி இருந்தாலும், உங்கள் முகம், மார்பு, வயிறு அல்லது மார்பகங்களை அருகே தடித்த, கருமையான முடி இருந்தால் கவனிக்கவும். அது ஒரு மகளிர் நோய்க்கான (PCOS) அறிகுறியாக இருக்க முடியும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறும் பிரச்சினைகளும், நோய்க்கான அறிகுறிகளாகும்.

திடீர் எடை இழப்பு

காரணமில்லாமல் ஏற்படும் திடீர் எடை இழப்பு என்பது நோய்க்கான அறிகுறியே ஆகும். திடீரென ஏற்படும் எடை இழப்பு, நீரிழிவு அல்லது மற்ற சுகாதார பிரச்சினைகளை அடையாளம் காட்டும் கண்ணாடி.

படுக்கையறை பிரச்சனை

விறைப்பு என்பது அனைத்து ஆண்களுக்கும் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று. ஆனால் அதுவே இது ஒரு தொடர்ச்சியான பிரச்சனை என்றால், நீங்கள் அதை பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல் என்பது வரவிருக்கும் மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியாக இருக்க முடியும். மாடிப்படிகளில் ஏறும்போது ஏற்படும் மூச்சு திணறல் என்பது இதய தசைகள் போதுமான ஆக்சிஜனைப் பெற முடியாத நிலையில் உள்ளன என்பதின் ஒரு அடையாளமாக இருக்க முடியும். அது 55 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு வரக்கூடிய கரோனரி இதய நோயின் அடையாளமாகும்.

தோலில் புதிய அடர்த்தியான செம்புள்ளிகள்

தோலில் ஏற்பட்டுள்ள புதிய செம்புள்ளிகள் தோல் புற்றுநோய், ஊறல் நோய் அல்லது மெழுகுத்தன்மையுள்ள தீங்கற்ற புண்களின் அறிகுறியாக இருக்கலாம். தோல் அளவு, நிறம் அல்லது வடிவில் ஏற்படும் மாற்றங்களை அடையாளம் கண்டால் மருத்துவரை பார்க்க வேண்டும். குறிப்பாக அடர்த்தியான, ரத்தக்கசிவு, நமைச்சல் தரக்கூடிய அறிகுறிகள் தோலில் தென்பட்டால், தோல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை உணர்த்துகின்றன.

மஞ்சளான தோல்

தோல் மஞ்சளாக இருந்தால் கல்லீரல் பிரச்சினையாக இருக்க முடியும். மஞ்சள் தோல் அல்லது மஞ்சள் காமாலை, கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்று அறிவுறுத்துகிறது. இந்த அறிகுறி பெரியவர்களுக்கு ஏற்படுமானால், கல்லீரல் நோய், கணைய புற்றுநோய் அல்லது கல்லீரலில் வீக்கம் ஏற்படுத்தும் வைரஸ் கல்லீரல் அழற்சி நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

வாயடைப்பு

திடீரென வாய் அடைப்பு ஏற்பட்டு, இயங்கமுடியாமல் போகுமானால் பக்கவாதமாக இருக்க முடியும். இரத்த உறைவு, காயம், இரத்த குழாய் அல்லது வேறு பிரச்சனை மூளைக்கு செல்லும் செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் போது நிலையற்ற இஸ்கிமிக் தாக்குதல் (TIA) ஏற்படலாம், அதாவது மூளை செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகும் அல்லது பேச்சுதிறன் பாதிப்புக்கு உள்ளாகும்.

No comments:

Post a Comment