தினம் ஒரு சிந்தனை - 1 இறை நம்பிக்கை
கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது மறைநூல் வாக்கு.
இறைவனில் நம்பிக்கைக் கொள்வோர் என்றுமே தனிமையை உணர்வதில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் - இதில் நம் பெற்றோர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அடங்குவர் - ஏதாவது சமயங்களில் குறிப்பாக நமக்கு மிகவும் தேவைப்படும்போது, நம் அருகில் இல்லாமல் போய்விடக் கூடும். அல்லது இருந்தும் நமக்கு துணையாய், ஆறுதலாய் இருக்க இயலாமல் போய்விடக் கூடும்.
ஆனால் இறைவன் ஒருவர்தான் நம்முடன் என்றும், எப்போதும், எங்கும் இருக்கக் கூடியவர். ஏனெனில் அவர் நம்மில், நம்முள், நம்முடன் இருக்கிறார். அவரை தொட்டுணர முடியாமல் அளவுக்கும் நம்முடன் கலந்திருக்கிறார். நம் உள்ளுணர்வுகளை எப்படி தொட்டுணர முடிவதில்லையோ அதுபோலத்தான் இறை பிரசன்னமும். இறைவனை உணர அவரை நேரிலோ, கனவிலோ காண வேண்டும் என்பதில்லை. நம் உணர்வுகளால் காண முடிந்தாலே போதும்.
இறை நம்பிக்கை என்பது மூளையால், பகுத்தறிவால் ஆய்ந்து அறியக் கூடிய ஒன்றல்ல. மாறாக நம் உள் உணர்வுகளால் அனுபவிக்க வேண்டிய ஒன்று. அவர் நம் உள்ளிருந்து நம்மை வழி நடத்தும் ஆசான், சோர்ந்திருக்கையிலே நமக்கு ஆறுதலாய் வரும் மருத்துவன், ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றும் காவலன், நம்மை உள்ளார்ந்த அன்புடன் நேசிக்கும் காதலன்..
இன்னும் எத்தனையோ அவதாரங்களை எடுக்கக் கூடிய ஒரே வல்லவன்.
எந்த ரூபத்திலும், வடிவிலும் வணங்கப்பட்டாலும் நம் அனைவருக்கும் அவந்தான் தலைவன்.
அவனை நம்புவோம். ஆறுதலடைவோம்.
No comments:
Post a Comment