நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்!
விதைக்காமலே அறுவடை செய்ய வேண்டும்.
மூலதனம் போடாமல் முதலாளியாக வேண்டும். உழைக்காமலே உயர வேண்டும் என்று விரும்பும் காலம்...
இது இன்று நேற்றல்ல.. எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. இதைப் பற்றி உத்தமர் ஒருவர் பாடம் நடத்துகிறார். அந்த வகுப்பிற்குப் போகலாம் வாருங்கள்!
வேதத்தில் கரை கண்டவர் சிதம்பர தீட்சிதர். தான் பிறந்ததே பிறர் மீது அன்பு செலுத்தி அவர்களின் துயர் தீர்ப்பது தான் என்று வாழ்ந்தவர். அல்லல் பட்ட அனைவரும் அவர் துணை நாடினர். அவரும் தக்க பரிகாரம் சொல்லி தீர்த்து வந்தார். ஒருநாள்...
பெண் ஒருத்தி அவரிடம் வந்தாள். ""சுவாமி! மணமான எனக்கு மழலைச் செல்வம் வாய்க்கவில்லை. தக்க வழிகாட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்!'' என வேண்டினாள். தீட்சிதர் கை நிறைய கொத்துக் கடலையைக் கொடுத்து,""அம்மா! கொஞ்சநேரம் ஆகட்டும். நான் கூப்பிடும் வரை அந்தக் கதவு அருகில் உட்கார்.'' என்றார்.
அவளும் அப்படியே அமர்ந்து கடலையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை அவளிடம் வந்து, ""எனக்கு கொஞ்சம் கொடேன்,'' என்று கை நீட்டியது.
ஆனால், அவளோ, ""மாட்டேன். உனக்கு கொடுத்தால் மற்ற குழந்தைகளும் கேட்கும். போய்விடு,'' என்று விரட்டி விட்டாள். இதைக் கவனித்த தீட்சிதர் அவளைக் கூப்பிட்டார். அவளும் வேகமாக எழுந்து சென்றாள். அவளிடம், ""உனக்கு குழந்தையே பிறக்காது,'' என்றார் தீட்சிதர்.
மேலும்,""என்ன மனசு உனக்கு. இனாமாகப் பெற்ற கடலையில் இருந்து ஒரு குழந்தைக்கு கொஞ்சம் கூட கொடுக்க மனமில்லையே! அன்பு இல்லாத உனக்கு ஆண்டவன் எப்படி குழந்தை வரம் தருவார்?'' என்றார் தீட்சிதர்.
அவள் தலைகுனிந்து நின்றாள்.
அன்பு செலுத்த தெரியாதவர் கடவுளிடம் அன்பை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? கடவுள் கொடுத்ததெல்லாம் நமக்கே சொந்தம் என்று சுயநலத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை. நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்! அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்! ஆண்டவன் அருளால் அனைத்தும் நலமாய் நடக்கும்.
No comments:
Post a Comment