நல்லவர்களோடு பழகினால்..
எவருடைய மனமும், வாக்கும் நீதி நெறிமுறைகளிலிருந்து வழுவாமல் இருக்கிறதோ, அவரே நல்லவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்...' என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
அத்தகைய நல்லோரின் சேர்க்கை, நம் மனதை மட்டும் அல்ல, வாழ்க்கை யையும் செம்மைப்படுத்தும். அதனால் தான், 'நல்லோரை காண்பதும் நன்று; அவரோடு இணங்கி இருப்பது அதனினும் நன்று...' என்கிறார் அவ்வையார்.
ஒரு சமயம், விஸ்வாமித்திரர் காட்டில் யாகம் செய்தார். அப்போது தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் செய்தார். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முனிவர்கள் வந்து தானம் பெற்றுச் சென்றனர்; வசிஷ்டரும் தானம் பெற்றார். சிறிது காலத்திற்கு பின், வசிஷ்டர் தானம் செய்த போது, அத்தகவல் அறிந்த விஸ்வாமித்திரர் தானம் வாங்க வந்தார்.
அவர் வருவதற்குள், தன்னிடம் இருந்த அனைத்து பொருட்களையும் தானம் கொடுத்து விட்டார் வசிஷ்டர். ஆனாலும், விஸ்வாமித்திரரை வெறுங்கையோடு அனுப்ப மனம் இல்லாமல், 'என்னிடம், ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) நேரத்திற்குரிய, சத்சங்க சாவகாசப் பலன் இருக்கிறது; அதில் கால் பங்கை, உங்களுக்கு தருகிறேன்...' என்றார். அதைக் கேட்டதும் கோபத்தில், 'நீர் என்னை அவமானப்படுத்தி விட்டீர்...' என்றார் விஸ்வாமித்திரர்.
அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், 'கோபப்படாதீர்கள்... நான் கூப்பிட்டதாகச் சொல்லி, ஆதிசேஷனையும், சூரியனையும் அழைத்து வாருங்கள்...' என்றார்.
'ஏதோ விஷயம் இருக்கும் போலிருக்கிறது; என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்...' என நினைத்து, சூரியனையும், ஆதிசேஷனையும் அழைத்தார் விஸ்வாமித்திரர்.
'நான் உங்களுடன் வந்து விட்டால், எனக்குப் பதிலாக யார் ஒளி வீசுவது?' என சூரியனும், 'பூமியைத் தாங்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்; நான் வந்து விட்டால், என் வேலையை யார் செய்வது?' என, ஆதிசேஷனும் கேட்டனர்.
விஸ்வாமித்திரர் இதை, வசிஷ்டரிடம் கூறினார். அப்போது வசிஷ்டர், 'சரி... என்னிடம் உள்ள சத்சங்க சாவகாசப் பலனில், கால்பங்கை சூரியனுக்கும், கால்பங்கை, ஆதிசேஷனுக்கும் அளிப்பதாக கூறுங்கள்...' என்றார்.
அவர் அளித்த சத்சங்க சாவகாசப்பலன்கள், சூரியனின் வேலையையும், ஆதிசேஷனின் வேலையையும் செய்தது. அதனால், விஸ்வாமித்திரர் கூப்பிட்டதும் சூரியனும், ஆதிசேஷனும் வந்து விட்டனர்.
விஸ்வாமித்திரருக்கு, சத்சங்க சாவகாசப் பலனின் பெருமை புரிந்தது. மிகுந்த பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து, கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப் பெற்றுத் திரும்பினார்.
அவர் தன் ஆசிரமத்தை நெருங்கும் போது, தெய்வீக புருஷன் ஒருவன் தோன்றி, 'முனிவரே... வைகுண்ட வாசன், ராமராக அவதரிக்கப் போகிறார். அவருக்கும், அவர் சகோதரர்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம், உங்களுக்கு கிடைக்கவிருக்கிறது...' என்று கூறினார்.
'நல்லவரான வசிஷ்டரின் தொடர்பால் கிடைத்த சத்சங்க பலனால் தான், இந்த பாக்கியம் நமக்கு கிடைக்கப் போகிறது...' என, உணர்ந்தார் விஸ்வாமித்திரர்.
நல்லவர்களின் நட்பையே வேண்டுவோம்; நல்லவைகள் நம்மைத்தேடி வரும்!
விதுர நீதி!:
தான் செய்த தவறுகளை, மற்றவர்கள் அறிந்திராத போதிலும், எவன் அவற்றை நினைத்து வெட்கமடைகிறானோ, அவன், உலகிற்கே வழிகாட்டும் சத்குருவாக கருதப்படுவான். எவன், அளவற்ற ஆற்றல், பரிசுத்தமான இதயம் மற்றும் ஆழ் மனதில் அமைதியை பெற்றிருக்கிறானோ அவன், சூரியனைப் போல், புகழுடன் பிரகாசிப்பான்
No comments:
Post a Comment