பணம்+பதவி+பங்களா=நிம்மதி?
பொருளாசை, பொண்ணாசை, பதவி ஆசை..
இவைகளில் பற்றில்லாத மனிதன் உண்டா?
ஆனால் இவைகள் மனிதனுக்கு நிம்மதியை தருகின்றனவா? சற்று சிந்தித்துப் பார்ப்போமா?!
இல்லை. நிச்சயம் இல்லை, என்றுதான் பதில் வரும்..
என்னுடைய கற்பனை கதையான சூரியனில் (http://enkathaiulagam.blogspot.com) இதுவரை நீங்கள் சந்தித்துள்ள எல்லா குடும்பங்களுமே ஓரளவுக்கு பணம், பதவி, பங்களா என செல்வத்தின் எல்லா வசதிகளையும் பெற்றவர்கள்தான்.
ஆனாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரோரு விதமான பிரச்சினைகள்.
இக்குடும்பங்கள் கற்பனையே.. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவர்கள் எல்லோருமே நாம் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள் தான்.
வெளியிலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய சோகங்கள் நமக்கு தெரிவதில்லை.
அவர்கள் வசிக்கும் ஆடம்பரமான வீடுகளும், அவர்கள் பயணிக்கும் பளபளக்கும் வாகனங்களும், அவர்கள் உடுத்தும் பகட்டான ஆடைகளும்தான் நம் கண்களில் படுகின்றன.
ஆனால் அவர்களை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர்களுடைய உண்மையான மனநிலை, அவர்கள் வீடுகளிலுள்ள அபிப்பிராய பேதங்கள், அவற்றால் விளையும் பிரச்சினைகள், சோகங்கள்...
இதைக் குறித்து பைபிளில் என்ன கூறப்பட்டுள்ளதென சுருக்கமாக பார்ப்போம்.
பழைய வேதாகமம்:
சீராக் என்பவரின் மகன், யேசுவின் பொன்மொழிகள் (The Wisdom of Jesus, Son of Sirach -இயேசு கிறீஸ்து அல்ல!) என்கின்ற புத்தகம் பழைய வேதாகமத்தின் (Old Testament) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் மதம், நன்னடத்தை மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல அறிவுரைகளும் ஒரு தந்தை தன் மகனை நோக்கி கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிக்கும்போது இதில் கூறப்பட்டுள்ளவை யாவும் இன்றைய காலக் கட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவைகளைப் போல் தோன்றுகின்றன!
இதில் செல்வத்தால் விளையும் பிரச்சினைகள் (Problems caused by Money) என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளவற்றின் சுருக்கம்:
(சீராக் ஆகமம்: 31ம் அத்தியாயம்: வசனங்கள் 1-2 மற்றும் 5)
செல்வத்தைப் பற்றி கவலைக் கொள்வதால் பயனில்லை. அது உன் உறக்கத்தையும் உடல் வலுவையுமே இழக்க செய்கிறது. பணத்தை விரும்புவன் எவனும் நியாயமுள்ளவன், உன்னதன் என்று தீர்ப்பிடப்பட்டதில்லை. அவனுடைய அதீத செல்வம் அவனை
பாவ வழியில் இட்டுச் சென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பழமொழிகள் ஆகமம்
பழைய வேதாகமத்தில் யூத சமுதாயத்தில் பரவலாக உபயோகப்படுத்தப் பட்ட பழமொழிகள் அடங்கிய புத்தகமும் (The Book of Proverbs) சேர்க்கப்பட்டுள்ளது:
அதில் 22 - 23வது அதிகாரத்தில் முப்பது நீதி மொழிகள் (The Thirty Wise Sayings) என்று பிரத்தியேகமான பகுதியுள்ளது. அதில் ஏழாவது நீதி மொழி செல்வத்தைப் பற்றியது. அதன் சுருக்கம்:
செல்வந்தனாக வேண்டுமென்ற பேராசையுடன் உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. உன்னுடைய செல்வம் நீ கண்ணை மூடித் திறப்பதற்குள்ளாகவே இறக்கைக் கொண்ட கழுகைப் போல் பறந்து சென்று விடக் கூடும்!.
அதீத செல்வத்தின் விளைவுகளைப் பற்றி புதிய வேதாகமத்திலும் பல இடங்களில் காண்கிறோம்.
அவற்றுள் சில:
புதிய வேதாகமம்:
(புனித மத்தேயு (St.Mathew) சுவிசேஷம்: 6ம் அத்தியாயம்: வசனம்: 19): மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டு திருடுவர்.
(புனித லூக்காஸ் (St.Luke) சுவிசேஷன்: 12ம் அத்தியாயம்: வசனம்:15) எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவுதானிருந்தாலும் செல்வப் பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது
பாடுபட்டு நாம் சேர்த்து வைக்கும் செல்வத்தை நாம் அனுபவிக்கும் முன்னரே நம் காலம் முடிந்துவிடக் கூடும்.
செல்வம் தேவைதான். எவ்வளவு சேர்த்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்? நம்மில் யாருக்காவது இந்த ரகசியம் தெரியுமா?
நான் சிறுவனாய் வெறும் கால்களுடன் நடந்தபோது காலனி அணிந்து சென்றவனைப் பார்த்து பொறாமைப் பட்டேன். பிறகு காலனி கிடைத்தபோது சைக்கிளில் செல்பவனைப் பார்த்தேன். பிறகு சைக்கிளில் செல்ல முடிந்தபோது ஸ்கூட்டர் கண்ணில் பட்டது.. ஸ்கூட்டரில் சென்றபோது காரில் இருந்தால் சுகமாயிருக்குமே என்று நினைத்தேன். பிறகு பிரிமியரில் பத்மினியில் சென்றபோது மாருதி 800ல் செல்வது எவ்வளவு வசதியாயிருக்கும் என்று எண்ணினேன்..
இப்போதும் என்னுடையதை விட பெரிய, அழகான, பளபளப்புடன் எனக்கும் முன்னும், பக்கத்திலும் செல்லும ஆடம்பர வாகனங்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறேன்..
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அதிகாரம் செய்யக் கூடிய பதவி, ஐந்திலக்க ஊதியம், மூன்று படுக்கையறையுடன் சகல வசதிகளுடைய வீடு..
இது போதுமா மன நிம்மதியைக் கொடுக்க? அல்லது இனியும் கொஞ்சம் செல்வம் சேர்க்க வேண்டுமா? பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இதுபோன்ற வசதிகளுடன் கூடிய வாழ்க்கை அமைய நான் இன்னும் அதிகம் செல்வம் சேர்க்க வேண்டுமா? அப்படியென்றால் இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டும்?
No comments:
Post a Comment