பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள் ...
பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!! இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்: 1.அச்சமின்மை (அபயம்) 2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:) 3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி) 4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி) 5.ஐம்புலனடக்கம் (தம:) 6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்) 7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்) 8.தவம் (தப:) 9.நேர்மை (ஆர்ஜவம்) 10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை) 11.உண்மை (சத்யம்) 12.சினமின்மை (அக்ரோத:) 13.துறவு (த்யாகம்) 14.அமைதி (சாந்தி) 15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy) 16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா) 17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்) 18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை) 19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்) 20.மன உறுதி (அசாபலம்) 21.தைரியம், துணிவு (தேஜ:) 22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா) 23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி) 24.சுத்தம் (சௌசம்) 25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:) 26. செருக்கின்மை ( ந அதிமானிதா ) இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்: அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம். அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம் தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம். தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத.
No comments:
Post a Comment