கர்ணனை கொடையாளி என்பது சரியா ??
ஒருநாள் துரியோதனன் கிருஷ்ணனிடம் எல்லோரும் கர்ணனையே கொடையாளி என்கிறார்களே! அப்படி அவன் பிரமாதமாக என்ன கொடுத்து விட்டான்? அப்படி ஏதாவது கொடுத்திருந்தாலும் அது என்னுடைய பொருள்தானே ? என்று கேட்டான்.
உண்மைதான் உன்னைவிடக் கர்ணனைப் புகழ்வது முட்டாள்தனம்தான் என்ற கிருஷ்ணன் துரியோதனா ஆறு மாதத்திற்குப் பிறகு நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் சேர்ந்துவிட்டேன். விறகு ஒன்றுதான் பாக்கி அதை யாக காலத்தில் நீ தரமுடியுமா? என்று கேட்டார்.
இவன் இடையன்தானே! அந்த புத்தி எங்கே போகும். ஆறு மாதத்திற்கு முன் கேவலம் விறகுக்காக என்னிடம் சொல்ல வேண்டுமாக்கும் என்று நினைத்த துரியோதனன் இது என்ன பிரமாதம். அந்த சமயம் ஒரு சீட்டு கொடுத்து அனுப்பு. அனுப்பிவைக்கிறேன் என்றான்.
மழைக்காலம். வானமே பொத்துக்கொண்டு விட்டாற்போன்ற மழையில் கிருஷ்ணன் இருபது வண்டிகளோடு துரியோதனனுக்கு சீட்டு கொடுத்து அனுப்பினார்.
அதைப் பார்த்த துரியோதனன் சமயம் தெரியாமல் விறகு கேட்கிறானே. இடையன் புத்தி அவனை விடுமா? என்று திட்டினான் இப்போது சௌகரியப்படாது என்று கூறி வண்டிகளைத் திருப்பி அனுப்பி விட்டான். திரும்பி போகும் வண்டிகளைப் பார்த்து விசாரித்தான் கர்ணன். தன நாட்டில் உள்ள பழைய வீடுகளை இடித்து அதில் உள்ள மரங்களை அந்த இருபது வண்டிகளிலும் ஏற்றினான். அதோடு தன வண்டிகளிலும் இரண்டைக் கட்டி அனுப்பினான். இடிந்த வீடுகளுக்கு பதிலாக மக்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு துரியோதனனைக் கிருஷ்ணன் சந்தித்தார். கண்ணா யாகத்தை எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்டான். கர்ணன் உதவியால் குறித்த காலத்தில் யாகம் பூர்த்தியடைந்து விட்டதே “ என்றார் கிருஷ்ணன்.
துரியோதனனுக்கு ஒன்றம் புரியவில்லை.
விஷயத்தை விளக்கிய கிருஷ்ணன்
துரியோதனா, கர்ணன் உன்னைவிட உயர்ந்தவன் என்பது இப்பொழுது தெரிகிறதா. பிறரால் வேண்டப்பட்டு மகிழ்ச்சியடைவான். கேட்டதை விட அதிகமாகக் கொடுப்பான். கொடுத்தான் பின்தொடர்ந்து வந்து இப்பொழுது இவ்வளவு தான் என்னால் முடிந்தது. மற்றொரு சமயம் அவசியம் வரவேண்டும் என்ற நல்ல வார்த்தைகள் சொல்லுவான். கொடைக்குக் கர்ணனிடம்தான் பாடம் கேட்க வேண்டும். அதிலும் அவன் கொடையாளியாகவே திகழ்வான் என்றார் !!
No comments:
Post a Comment