Wednesday, December 10, 2014

தினம் ஒரு சிந்தனை 4 - தலைவர்கள்

தினம் ஒரு சிந்தனை 4 - தலைவர்கள்

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு (கோல்) என்பது உண்டு. அதை அடைவதற்கு நாம் அனைவருமே முழு வீச்சாய் முயல்கிறோம். சிலர் மற்றவர்களை விட அதை எளிதில் அடைந்துவிடுகின்றனர். இவர்களுக்கு இலக்கை எவ்வாறு அடைகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படியாவது அடைந்துவிட வேண்டும். இலக்கு, இலக்கு என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். இடையில் தடையாய் வரும் எதையும் அல்லது எவரையும் விலக்கிவிட தயங்கமாட்டார்கள். இவர்கள் சுயநலவாதிகள். இவர்கள் தங்களுடைய இலக்கை அடைந்துவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அங்கேயே நிலைத்திருந்து அதனுடைய பலனை முழுமையாக அடைவார்களா என்பது ஐயமே.

இலக்கை இப்படித்தான் அடைய வேண்டும் என்ற தங்களுடைய கருத்தில் உறுதியாய் இருப்பவர்கள் சிலர். இலக்கை அடைவதை விட அதை எப்படி அடைவது என்பதுதான் முக்கியம் என நினைப்பவர்கள் இவர்கள். இத்தகையோர் தங்களுடைய இலக்கை அடைய தடையாய் இருப்பவர்கள் ஒதுக்கி தள்ளிவிடுவதில்லை. மாறாக த‌ங்களுடைய பயணத்தின் முக்கியத்துவத்தை, குறிக்கோளை அவர்களுக்கும் உணர்த்தி அவர்களையும் அவரவர் இலக்கை நோக்கி பயணிக்க உதவிடுவார்கள். தான் மட்டும் இலக்கை அடைந்தால் போறாது தன்னைச் சார்ந்தவர்களும் ஏன் தன்னுடைய எதிராளியும் அவர்களுடைய இலக்கை அடைய செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள்தான் உண்மையான தலைவர்கள்.

இன்றைய பாரதத்தின் பல இன்னல்களுக்கும் வித்தாய் இருப்பவர்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள முதல் ரகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் அரசியல்வாதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அரசு இயந்திரத்தின் அன்றாட செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாயுள்ள அதிகாரிகளாகவும் இருக்கலாம்.

சமீபகாலமாக வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த வழக்குகளில் கையும் களவுமாக பிடிபடும் எத்தனை அரசு அதிகாரிகளைப் பற்றி செய்திகளில் வாசிக்கின்றோம். இவர்கள் அனைவருக்குமே இலக்கு பணம் சேர்ப்பதுதான். அதை இப்படித்தான் சேர்க்க வேண்டும் என்றில்லாமல் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள். இவர்கள் தேவைக்கு அதிகமாகவே பணத்தை சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் ஏதாவது ஒரு சூழலில் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சேர்த்த பணத்தை இழந்துவிடுவதுடன் அரசு பதவி அளித்துவந்த சகல அந்தஸ்த்தையும் இழந்து ஒரு மூன்றாந்தர குற்றவாளியைப் போல் சிறையிலடைக்கப்படுகின்றனர்.

இலக்கு என்பது தேவைதான். ஆனால் அது நாம் எட்டக் கூடிய, நம்முடைய இன்றைய நிலமைக்கு ஒத்த இலக்காக வேண்டும். அன்றாட ஜீவனத்துக்கே வழியில்லாதவன் ஆகாசத்தில் பறக்க ஆசைப்படுவதைப் போன்று இருக்கலாகாது நம்முடைய இலக்கு. நம்முடைய தகுதிக்கு மீறிய இலக்கே நம்மில் பலரையும் வழி தவறி செல்ல வைத்துவிடுகின்றது.

நம்மால் எது முடியுமோ அதை அடைய முயலுவோம். அதி வேகமாக செல்லாமல் மெள்ள மெள்ள, சிறிய சிறிய அடிகள் வைத்து அதை அடைய முயலுவோம். இலக்கை அடைந்த பின் அதில் நிலைத்து நின்று அதனுடைய பயனை முழுமையாக அனுபவிக்க முயல்வோம். நாம் மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களும் அவரவர் இலக்கை அடைய துணை செல்வோம்.

No comments:

Post a Comment