Wednesday, December 10, 2014

தினமொரு சிந்தனை - 2 - பிறரை தீர்ப்பிடாதே

தினமொரு சிந்தனை - 2 - பிறரை தீர்ப்பிடாதே

பைபிளில் ஒரு இடத்தில் இயேசு கூறுவார். "உன் கண்ணில் இருக்கும் விட்டத்தை எடுத்துவிட்டு உன் சகோதரனின் கண்களில் இருக்கும் துரும்பைப் பார்"

ஆம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட வார்த்தைகள் என்றாலும் இன்றைக்கும் மிகவும் பொருத்தமான அறிவுரை.

நம்மில் பலரும் இப்படித்தான். பிறரைப் பற்றி தீர்ப்பிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரை தீர விசாரிக்க வேண்டியது அவசியம் என்பதை
மறந்துவிடுகிறோம்.

என்னுடைய பணிக்காலத்தில் என்னுடைய வங்கியின் ஒழுங்குமுறை கமிட்டியின் உத்தரவுப்படி பல விசாரனைகளை தலைமையேற்று நடத்தியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலனவைகளில் விசாரனையின் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குற்றம் சுமத்துபவர்களின்
கற்பனையாகவே இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அல்லது தனிப்பட்ட பகையின் வெளிப்பாடக இருக்கும். அல்லது மிகைப்படுத்தப்பட்ட
குற்றச்சாட்டாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகையில் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு செல்வதென்பது இயலாத காரியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாரையாவது நம்மையும் அறியாமல் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதை மனதில் அப்படியே வைத்துக்கொண்டு சமயம் பார்த்து திருப்பித்தாக்குவதில் நம்மில் பலரும் வல்லவர்கள். அதுவும் hitting below the belt என்பார்களே அதுபோன்று
கேவலமாக தாக்குவதில் சிலர் சூரர்கள். என்னுடன் சாராதவன் எனக்கு எதிரி என்கிற எண்ணத்தில் பணியாற்றும் சில உயர் அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டாதவர்கள் சிலரை தூண்டிவிட்டு குற்றம் சுமத்தை வைத்து  விசாரணை என்ற பெயரில் நாடகமும் நடத்தி தண்டிப்பதும் உண்டு.

ஆனால் இத்தகையோர் தங்களுக்கும் இதுபோன்றதொரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடுவார்கள். என்னுடைய முப்பத்தாண்டு
கால அலுவலக அனுபவத்தில் இத்தகையோர் தாங்களாகவே பிரச்சினையில் சிக்கிக்கொள்வதும், வேறு சிலர் செய்யாத தவற்றுக்கு தண்டிக்கப்படுவதையும் கண்டிருக்கிறேன்.

ஆகவே இன்றைய சிந்தனை இதுதான். ஒருவரை தீர்ப்பிடுவதற்கு முன்பு குற்றச்சாட்டை முழுமையாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை விட குற்றம் சுமத்துபவர்களின் பின்னனியை விசாரித்து அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பதை
உறுதி செய்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அவர்
அளிக்கும் விளக்கத்திலிருந்தே விசாரனைக்குட்படுத்தப்பட வேண்டியவர் அவர்தானா அல்லது குற்றம் சுமத்தியவர்களா என்பது தெளிவாகிவிடும்.

No comments:

Post a Comment