பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது?
‘அவன் அப்படி, இவள் இப்படி’ என்று பிறரைப் பற்றிய நம் மதிப்பீடுகள், நம் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன என்றும், சூழ்நிலைகளைத் தான் நாம் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல என்றும் இதில் விவரிக்கிறார் சத்குரு… கேள்வி சில நேரங்களில் மனிதர்களை நான் நன்றாக மதிப்பீடு செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. மற்ற நேரங்களிலோ அது என் அகங்காரம் எடுக்கும் முடிவுகள் என்றும் தோன்றுகிறது. இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை நான் எப்படி அறிவது? அப்படியே அந்த வித்தியாசத்தை நான் அறிந்தாலும், இந்த மதிப்பீடுகளை நான் உபயோகிக்கலாமா?
சத்குரு: ‘திறமையாய்’ செயல்படுவதைப் பற்றி பலரும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர். பிறரை நன்கு அறிந்தால், சூழ்நிலைகளைத் திறம்படக் கையாளலாம் என்பது பொதுப்படையான கருத்து. ஆனால் இது நிஜமல்ல. இக்கணத்தில் ‘நான்’ என்று நீங்கள் கருதும் உங்களை நீங்கள் நன்றாக அறிந்திருந்தால் மட்டுமே, இவ்வுலகில் நீங்கள் திறம்பட செயல்பட முடியும். ஏதோ ஒன்றை சரியாய் மதிப்பீடு செய்ய முனைந்தால், சிலநேரங்களில் நீங்கள் அதை சரியாகவும் செய்யலாம். மதிப்பீடு செய்வதற்குத் தேவையான மனம் தான் உங்களிடம் இருக்கிறதே! ஆனால் இந்த மதிப்பீடுகளை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இன்று பரவலாய் இருக்கும் மனப்பான்மையில், எதைப் பார்த்தாலும், அது கல்லோ, மரமோ, தண்ணீரோ அல்லது எதுவாக இருந்தாலும், அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றே மனம் போகிறது. ஏதோ ஒன்றை சும்மா பார்த்துவிட்டு, அதை அப்படியே அங்கேயே விட்டுச் செல்லும் மனம் இல்லை. பொருட்கள் நம் உபயோகத்திற்கும், மனிதர்கள் நம் அன்பிற்கும் பாத்திரமாக இருக்க வேண்டியவர்கள். அப்படித்தான் அவை உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்று, பலரும் பொருட்களை நேசித்து, மனிதர்களை உபயோகப் படுத்துகிறார்கள். இது பொருட்களோடு நின்றிடும் எண்ணமல்ல, இது மனிதர்களுக்கும் நீள்கிறது. இது போன்ற மனநிலையில், யாரைப் பார்த்தாலும் அவரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற எண்ணமே மேலோங்குகிறது. இது மிகத் தவறான ஒரு கண்ணோட்டம். ஏனெனில், பொருட்கள் நம் உபயோகத்திற்கும், மனிதர்கள் நம் அன்பிற்கும் பாத்திரமாக இருக்க வேண்டியவர்கள். அப்படித்தான் அவை உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இன்று, பலரும் பொருட்களை நேசித்து, மனிதர்களை உபயோகப் படுத்துகிறார்கள். மனிதர்கள் தங்கள் கணவனையோ, மனைவியையோ விவாகரத்து செய்வதைக் கண்டிருப்பீர்கள். ஆனால் யாரேனும் அவர்களின் பணம், நகை, செல்வங்களை விவாகரத்து செய்து பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் உடலைப் பார்த்த அடுத்த நொடி, அவர் அழகாக இருக்கிறார், அசிங்கமாக இருக்கிறார், வயதானவர் அல்லது இளமையானவர் என்ற மதிப்பீடுகள் உங்கள் மனதில் கணநேரத்தில் தோன்றிடும். பிறகு அவரின் பேச்சு, நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து இன்னும் பலவாறான முடிவுகளை எடுத்திடுவீர்கள். எனக்கு அவரை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, அவரைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது, அவரிடம் எனக்கு பாசம் மேலோங்குகிறது இன்னும் எவ்வளவோ. அதனால் ஒருவரைப் பார்க்கும் போது, அவரின் உடலாலோ, மனத்தாலோ, உணர்வுகளாலோ அவரை அடையாளம் காண எண்ணாதீர்கள். முதலில் அவரது மிக ஆழமான அம்சத்தை நோக்கிடுங்கள். அவருள் இருக்கும் வாழ்வின் ஆதாரத்தை வணங்குங்கள். வாழ்வின் ஆதாரத்தை தானே கடவுள் என்கிறீர்கள்? அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் செயல்படும் ஒன்றல்லவா? அதனால் முதலில் அதை வணங்குங்கள். உங்களுடைய முதல் ஈடுபாடு இதனுடன் தான் இருக்கவேண்டும். அதற்குப் பின்தான் ஒரு மனிதனின் பிற அம்சங்களை நீங்கள் நோக்கவேண்டும். அவரின் உடலோ, மனமோ உங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்தவர் அல்ல. இன்னும் அவரிடம் வேறு என்னென்ன உங்களுக்கு பிரச்சனையாக இருந்தாலும், அது இனி ஒரு பிரச்சனையாக இராது. ஏனெனில், அவருள் இருக்கும் வாழ்வின் அடிப்படை அம்சத்தை நீங்கள் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டீர்கள். இது மதிப்பீடு அல்ல, புரிந்துகொள்வதும் அல்ல. இது வாழ்வின் ஆழமான பரிமாணத்தை உணர்ந்திருப்பதால் நீங்கள் செய்வது. அதனால் தான் நம் கலாச்சாரத்தில், முதலில் ஒருவரைப் பார்க்கும் போது, அவருள் இருக்கும் வாழ்வின் ஆதாரத்தை வணங்கிடுவோம். இப்படி செய்துவிட்டால், அதன் பின் மதிப்பீடுகளோ, மன இறுக்கமோ நிகழாது. எந்த மனிதருமே எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. இன்று ஒருவர் உங்களுக்குப் பிடிக்காதது போல் நடந்து கொள்ளலாம். ஆனால் நாளையே அவர் மிக அற்புதமானவராக ஆகிடலாம். என்றாலும், நீங்கள் அவரைப் பற்றி ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதால், இன்று அவர் இருக்கும் நிலையை நீங்கள் தவற விட்டுவிடுவீர்கள். ஒருமுறை இதில் இறங்கிவிட்டால், அந்த வலையில் சிக்கிக் கொள்வீர்கள். உங்கள் மதிப்பீடுகள் பிறரைப் பற்றியது அல்ல. அது உங்கள் சிந்தனையின் தரத்தையே பிரதிபலிக்கின்றன. நில்லாது தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் மனம், எல்லோரைப் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் அசராது மதிப்பீடுகள் செய்துகொண்டே இருக்கும். அதற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் அளிக்காதீர்கள். மதிப்பீடுகள் செய்யத் துவங்கிவிட்டால், அடிப்படையில் இரண்டு பிரிவுகளே உள்ளன – இது நல்லது, அது கெட்டது என்பன. எதுவெல்லாம் நல்லது என்று எண்ணுகிறீர்களோ, அவை எல்லாம் உங்களை ஈர்க்க, நீங்கள் அவற்றோடு பிணைக்கப்படுவீர்கள். எவையெல்லாம் கெட்டது என்றெண்ணுகிறீர்களோ, அவற்றருகே செல்லமுடியாமல் காழ்ப்புணர்ச்சி தடுக்க, எதிர்மறை உணர்வுகள் உங்களில் மேலோங்கும். அதனால் பிறரை நீங்கள் மதிப்பீட்டிற்கு ஆட்படுத்தத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் சூழ்நிலைகளைத் தான் மதிப்பீடு செய்யவேண்டுமே அன்றி, மனிதர்களை அல்ல. எல்லா விதமான மனக்குமுறலும், பொறுமலும், மனக்கசப்பும் நமக்குத் தோன்றுவதற்குக் காரணம், நம் கட்டுப்பாடுகளும், நம் செயல்திறன் குறைபாடும் தானே அன்றி, சூழ்நிலைகள் அல்ல. இதைப் புரிந்து கொண்டால், மனப்பக்குவம் தானாய் மிளிரும். எல்லோருமே மதிப்பீடுகள் செய்யமுடியும். ஆனால் வளரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள், அடுத்தவரை மதிப்பீடு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் முன்வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், 100 அடி பின்னோக்கிப் போவீர்கள். இதை நீங்கள் உடனேயே உணரமாட்டீர்கள், ஆனால் சில நாட்களோ, மாதங்களோ ஆன பின்னர், இதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். அதனால் மாம்பழமோ, ஆப்பிளோ, மனிதனோ, மரமோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவற்றை மதிப்பீடு செய்யாமல், அவை எப்படி இருக்கின்றனவோ, அவ்வாறே அவற்றை உணருங்கள். இது உங்களுள் மிக ஆழமான ஒரு அனுபவத்தைத் தோற்றுவிக்கும். அப்போது ‘வாழ்வை’ அதன் முழுமையில் நீங்கள் உணர்வீர்கள்.
No comments:
Post a Comment