முக்தி எப்போது?
ஒரு முறை நாரதர் காட்டு வழியே பயணம் செய்யும்போது, ஒருவன் ஆழ்ந்த தவத்தில் இருப்பதைக் கண்டார்.
நாரதரிடம், ‘‘தேவரிஷியே… எங்கு செல் கிறீர்கள்?’’ என்று கேட்டான் அந்த தவ சீலன்.
‘‘பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, சொர்க்கத்துக்கு செல்வேன்!’’ என்றார் நாரதர்.
‘‘அப்படியானால், கடவுள் எனக்கு எப்போது முக்தி அளிப்பார் என்று மறக்காமல் கேட்டு வாருங்கள்’’ என வேண்டினான். நாரதர் அதை ஏற்றுக் கொண்டார்.
மற்றோரிடத்தில் ஒருவன் ஆடிப்பாடிக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டதும், ‘‘நாரதரே, எங்கே போகிறீர் கள்?’’ என்றான். அவனது பேச்சில் ஒருவித அதிகாரமும் இறுமாப்பும் தொனித் தன.
நாரதர், ‘‘சொர்க்கத்துக்கு!’’ என்றார்.
‘‘அப்படியானால், நான் எப் போது முக்தி அடைவேன் என்று கடவு ளிடம் கேட்டு வாருங்கள்!’’ என்றான்.
‘‘சரி!’’ என்ற நாரதர், சொர்க்கம் சென்றார்.
மறுபடியும் பூவுலகத்துக்கு வந்த நாரதர். கடந்த முறை, பார்த்த தவசீலரை சந்தித்தார். நாரதரின் வரு கையை உணர்ந்த அந்த தவசீலர் கண் விழித்தார். சந்தோஷப்பட்டார். ‘‘சுவாமி… என்னைப் பற்றி கட வுளிடம் கேட்டு வந்தீர்களா?’’ என்றார்.
நாரதர் புன்சிரிப்புடன், ‘‘ஆமாம், தவசியே… நீ இன்னும் நான்கு தடவை பூமியில் பிறந்த பிறகுதான் உனக்கு முக்தி என்று கடவுள் கூறிவிட்டார்!’’ என் றார். உடனே, தவசீலர் அழத் துவங்கினார்.
‘‘இதற்காக ஏன் அழுகிறாய்?’’ என்றார் நாரதர்.
‘‘சுவாமி… நான் இவ்வளவு கடுமையாக விடா முயற்சியுடன் கடுந்தவம் செய்தும் கடவுள் இன்னும் மனம் இரங்கவில்லை. இந்த நிலையில் நான் மேலும் நான்கு பிறவிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டாரே! அப்படியானால், நான் பெரும் பாவியல்லவா? அதை நினைத்துதான் அழுதேன்!’’ என்றான்.
நாரதர் அங்கிருந்து நகர்ந்தார். ஆட்டமும் பாட்டமுமாக முன்னர் சந்தித்த மனிதனிடம் வந்தார். அவன் நாரதரிடம், ‘‘என்ன நாரதரே! என் விஷயத்தைக் கடவுளிடம் கேட்டீர்களா?’’ என்றான்.
நாரதரும் ‘‘கேட்டேன்… கேட்டேன்’’ என்றார்.
‘‘என்ன சொன்னார்?’’
நாரதர் அமைதியாக, ‘‘அதோ! அந்த புளிய மரத்தைப் பார். அதில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ, அத்தனை பிறவிகள் உனக்கு இன்னும் உள்ளன. எனவே, அதன் பிறகுதான் முக்தி என்று கடவுள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்’’ என்றார் நாரதர்.
‘‘ஆஹா, இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். எனக்கு இவ்வளவு விரைவில் முக் தியா? என்னால் நம்ப முடியவில்லையே’’ என்றபடி ஆடிப் பாடினான் அவன். இதைக் கண்ட நாரதர் திகைத்தார். அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.
‘‘அன்பு மகனே, நான் உனக்கு இக்கணமே முக்தி தந்தேன்!’’ அவன் முக்தியடைந்தான்.
நாரதர் அசரீரியிடம் கேட்டார்:
‘‘உங்கள் செயலின் அர்த்தம் எனக்கு விளங்க வில்லையே?’’
‘‘விருப்பு-வெறுப்பு அற்றவன்தான் உண்மை யான ஞானி. அவனை கவலை, மகிழ்ச்சி, பயம், துக்கம், பாவ-புண்ணியம் எதுவும் பாதிக்காது. அவன் இறைவனுக்குச் சமமானவன். இந்த மனிதன் தன்னுடைய ஆட்டம் பாட்டம் கூத்து போன்றவற்றை விடாப்பிடியாகச் செயல்படுத்தினான். நீர் அவனுக்கு புளிய மரத்தின் இலைகள் அளவுக்குப் பிறவி எடுத்த பின்தான் முக்தி என்றீர். அதற்காகவும் அவன் கலங்கவில்லை. ஆனால், தவசியோ நான்கு பிறவிகள் எடுப்பதையே கடினம் என்றான். ஆகவே, அழுது, கடவுளே இல்லையென்றும் எண்ணினான். ஆனால், இரண்டாவது மனிதனுக்கோ சகிப்புத் தன்மையுடன், பொறுமையும் இருந்தது. அதற் காகவே அவனுக்கு உடனடியாக முக்தி வழங்கி னேன்.’’ என்றது அசரீரி. இந்த பதிலைக் கேட்ட நாரதர் மௌனமானார்.
இறைவனைச் சோதிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை!
No comments:
Post a Comment