Tuesday, May 5, 2015

சந்தோசமாக இருக்க சில வழிகள்...

சந்தோசமாக இருக்க சில வழிகள்...

சந்தோஷம்தான் நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத்தான், வாழ்க்கையை சந்தோஷமாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைப்பாட்டுக்கு காரணமாக இருக்கும். எனவே தேவையானதைத் தேட வேண்டும், தேவையற்றதை தள்ளியாக வேண்டும்.

நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் தருவது தூக்கம். எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது. தூங்கி எழுந்தால் துக்கம் கூட மாறிவிடும்.

குழப்பங்களும் நீங்கிவிடும் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் தூங்கும் நேரத்தில் உடலில் நடைபெறுகிறது. இரைச்சல் இல்லாத, வெளிச்சம் புகாத அமைதியான அறையில் நிம்மதியாக உறங்குங்கள், ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள், வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.

வேலையில் மெனக்கெடாதீர் சிலர் வேலை வேலையென்றும், பணம், பணமென்றும் திரிவார்கள். இதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். வேலை என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

வேலையில் தொடர்ந்து நெருக்கடி இருந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருந்தால் அது வேலையல்ல ‘கஷ்டம்’ தினமும் 8மணி நேரம் உழைக்க செலவிட்டால் 8 மணி நேரம் ஆயாசமாக இருங்கள். 8 மணி நேரம் உறங்குங்கள்.

துன்பம் வந்துவிட்டால் எல்லோரும் துவண்டு போய் விடுவார்கள். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் சந்திக்காத துன்பமே இல்லை. அவரிடம் ஒருமுறை, ‘நீங்கள் இவ்வளவு துன்பத்துக்கிடையிலும் பெருமளவு சாதித்திருக்கிaர்களே எப்படி?’ என்று கேட்டார்கள்.

அப்போது அவர் ‘எந்த துன்பமும் மாறிவிடும்’ என்று பதிலளித்தார். அதுதான் நிஜயம் எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இயல்பு வாழ்வில் இன்பம், துன்பம் எல்லாம் மாறிமாறி வரும் பணமும், புகழும் அப்படித்தான்.

தேவையை நிறைவேற்றிக் கொள்ள நீங்களே களம் இறங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு தேவையானதை மற்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச் சொல்ல வேண்டாம். இப்படிச் செய்வது சுலபம் என்று பலரும் எண்ணுவது உண்டு. ஆனால் அவர்கள் வாங்கி வந்த பிறகு அதில் குறைகள் இருந்தால் உங்களுக்குத்தான் இழப்பு.

அதற்காக கோபப்பட்டால் உங்கள் உறவும் கூட பாதிக்கும். எனவே உங்கள் தேவையை நிறைவேற்ற நீங்களே செயல்படுங்கள். விரும்பியதை வாங்குங்கள், செய்யுங்கள், சாப்பிடுங்கள் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்.

வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டாம். நண்பகர்களுடன் கலந்து கொள்ளும் விழாக்களில் மதுப்பழக்கத்தை கற்றவர்கள்தான் ஏராளம். உங்கள் நண்பர்களும் அதுபோல ‘சும்மா சாப்பிடு’ என்று கூறி வற்புறுத்தலாம். ‘வா சினிமாவுக்கு போகலாம்’, ‘ஜாலியாக இருக்கலாம்’ என்று உங்கள் நேரத்தை வீணடிக்கலாம்.

எனக்காக இதைச் செய்து கொடு என்று அலைக்ககழிக்கலாம். அவை அனாவிசயம் என்று உங்களுக்குத் தோன்றினால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதுதான் உங்கள் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம்.

உணவுப் பழக்க வழக்கத்தில் ஒழுங்கு முறையை கடைபிடியுங்கள். உணவுக் கட்டுப்பாடு நல்லது. சத்து நிறைந்த உணவை உண்பது உடலுக்கு நலம் சேர்க்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நலமாக இருந்தால் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள். அதேபோல இரு வேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுங்கள். காலை மாலை நேரங்களில் பார்க், பீச்சில் உலாவி வாருங்கள்.

குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுங்கள். மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும்தான் மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தான். தேவைக்காக மட்டும் சகோதரர்களை நாடுவதும், ஆசைக்காக மட்டும் மனைவியை நாடுவது உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வதாகும்.

உறவுகளிடம் இனிமையாகப் பழகுங்கள். மனைவி, குழந்தைகளை அவ்வப்போது மகிழ்ச்சிப்படுத்துங்கள். சினிமா, சுற்றுலா என்று இன்ப உலா செல்லுங்கள். விளையாட்டு மகிழ்ச்சி என்று சந்தோஷமாக இருங்கள். வாழ்வே வசந்தமாக தோன்றும்.

ஒரு போதும் விரக்தியாக இருக்காதீர்கள். எனக்கேன் இந்த சோதனை, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன், செத்துவிடலாம் போலிருக்கு என்று விரக்தி புலம்பல்களை வெளியிடாதீர்கள். நெருக்கடி வரும் போது சிறிது நேரம் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருங்கள். காலம் சூழலை மாற்றி நிம்மதியை திரும்பச் செய்யும் என்று நம்புங்கள்.

நெருக்கடி நேரத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசுங்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.

No comments:

Post a Comment