Wednesday, May 6, 2015

முயற்சிகள் பலவிதம்

முயற்சிகள் பலவிதம்

மதுரை கிருஷ்ணகுமாரும், தாராபுரம் பழனிச்சாமியும், தன்னம்பிக்கை மே மாத இதழில் முயற்சியே வளர்ச்சிக்கு வேர் என்ற எனது கட்டுரையைப் படித்துவிட்டு போன் செய்தார்கள்.

“அது என்ன சார், விதவிதமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வீரியமாக முயற்சிப்பது, வித்தியாசமாக முயற்சிப்பது. அவைகளைப் பற்றி சற்று விளக்கமாக எழுதக்கூடாதா?”

அவர்கள் எனது பல நூல்களின் வாசகர்கள். அவர்களுக்காகவும், அதே கேள்வியை மனதில் கொண்ட மற்ற வாசகர்களுக்காகவும் இந்தக் கட்டுரை.

1. விதவிதமாக முயற்சிப்பது:
குதிரையின் கண்களுக்கு சேனம் கட்டியது போல், ஒரே மாதிரியான முயற்சியையே எப்போதும் எடுத்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு அவ்வளவாக உத்திரவாதம் அளிக்கும் என்று சொல்ல முடியாது.

ஏன்?

நம்மைவிட நமது போட்டியாளர்கள் வெற்றி குறித்து மிகத்தீவிரமாக சிந்திக்கிறார்கள். மிகத்தீவிரமாக செயல்படுகிறார்கள்.

அப்படியென்றால், நாமும் அப்படியெல்லாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அல்லவா இருக்கிறோம்.

ஆகவே, நமது முயற்சிகள் விதவிதமாக இருக்க வேண்டும். புரியவில்லையா? ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

பொதுத்தேர்வில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைக் குறிவைக்கும் மாணவர்கள் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள்?
அன்று நடந்த பாடங்களை அன்றே “படித்துப்” பார்க்கிறார்கள்.
படிக்கும் போதே வாய்விட்டுச் “சொல்லிப்” பார்க்கிறார்கள்.
சொல்வதோடு நில்லாமல், முக்கியமான கேள்விகளுக்கான பதில்களையும், முக்கியமான பகுதிகளையும் ஒரே கேஸட்டில் “பதிவு செய்து” கொள்கிறார்கள்.

வீட்டில் மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நேரங்களிலும், உறங்கப்போகும் சமயங்களிலும் அந்த கேஸட்டைப் போட்டு “கேட்டுக் கொண்டே” இருக்கிறார்கள். மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு தடவை ரிக்கார்ட் பண்ணினா நூறு தடவை படிச்சதுக்குச் சன்ம்

படிப்பதோடு நின்றுவிடாமல், பாடத்தின் முக்கியமான பகுதிகளை “எழுதிப்” பார்க்கிறார்கள்.

கடினமான சொற்கள், சமன்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை வீட்டிலேயே ஒரு “போர்டில் எழுதி” வைத்துக்கொள்கிறார்கள். போகும் போதும் வரும் போதும் நின்று, பார்த்து மனதில் வாங்கிக் கொள்கிறார்கள்.

கற்றவை இன்னும் ஆழமாக மனதில் பதிவதற்காக, கற்ற பாடங்களை தங்கள் நண்பர்களுக்கு “கற்பிக்கிறார்கள்”.

முக்கியமான பகுதிகளையும், கேள்வி பகுதிகளையும், திரும்பத் திரும்பப் படிக்கிறார்கள் ( )

சென்ற வருடங்களின் கேள்வித்தாள்களை சேகரித்து வைத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, வீட்டிலேயே நிஜப்பரீட்டை போன்ற உணர்வோடு எழுதிப்பார்க்கிறார்கள் ( ).
தாங்கள் எழுதியவற்றை மற்றவர்களிடம் கொடுத்து, திருத்தி, மதிப்பெண் போட்டுக் கொள்கிறார்கள். எங்கே தவறு? என்ன தவறு? என்று ஆய்ந்து பார்க்கிறார்கள்.
- போதுமா?

இதுதான் அதிக மார்க் வாங்க ஆசைப்படும் மாணவன் எடுக்கின்ற விதவிதமான முயற்சிகள்.

2. வீரியமாக முயற்சிப்பது:
உடல் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி செய்பவர்கள், பூமிக்கு வலிக்குமே என்று பொடிநடை போடக் கூடாது என்பார் வைரமுத்து. வியர்வை வரும் அளவுக்கு கைகளை வீசி நடக்க வேண்டுமாம். நடையில் வீரியம் வேண்டுமாம்.

ஒரு மரத்தையோ, மரத்தின் கிளையையோ வெட்டும்போது கோடலியால் மரத்துக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா?

காய்ச்சிய இரும்பை, கொல்லன், சுத்தியலால் தட்டிக் கொடுப்பானா? சம்மட்டியால் ஓங்கி அடித்து நசுக்குவானா?

உங்கள் வீட்டுச் சுவற்றில் ஆணி அடிக்கிறீர்கள். ஒவ்வொரு அடியிலும் வேகமும் வீரியமும் இருக்குமா, இல்லையா?

டென்னிஸ், பாட்மிண்டன், வாலிபால் போன்ற விளையாட்டுகளில், ஆளில்லாத இடமாக பந்தைப் போடுவது ஒரு யுக்தி என்றால், அடிவயிறு கலங்குகிற மாதிரி, அம்பு போல் பந்தை வீரியமாய், வலிமையுடன் இறக்குவதும் வெற்றிக்கு உதவும் ஒரு யுக்தி தானே.

வெற்றிக்கான முயற்சிகளில் வீரியம் இல்லையென்றால், வெற்றி ஆடி அசைந்து தான் வரும். வராமலேயும் போகும்.

3. வித்தியாசமாக முயற்சிப்பது:
கடும் போட்டி நிலவும் போது, ஜெயிக்க விரும்புகின்ற ஒருவன், சற்றே வித்தியாசமாகவும் செயல்பட்டுத்தான் ஆக வேண்டும். தனது தனித்துவத்தை, ஸ்பெஷாலிட்டியை காட்டித்தான் ஆக வேண்டும்.

ஒரு மாம்பழத்துக்காக, பிள்ளையாருக்கும் முருகனுக்கும், சிவபெருமான் வைத்த போட்டியில் பிள்ளையார் எப்படி ஜெயித்தார்? சற்றே வித்தியாசமாய் முயற்சித்ததால் தானேÐ
ஒரு நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு இடம் தான் காலி. ஆனால் வந்திருந்ததோ இருபதுக்கும் மேற்பட்டவர்கள்.
அதில் ஒரு விசித்திரம்.

முதலில் வந்தவரை முதலில் கூப்பிடாமல், ஏ, பி, ஸி, டி வரிசையில் பெயர்களை அழைத்தார்கள்.

நம்ம ஆள் பெயர் வீரராகவன். கடைசி ஆள். இவனுக்கு பயங்கர சந்தேகம்.

தேர்வு செய்பவர்கள், பசியின் காரணமாகவோ, அலுப்பின் காரணமாகவோ, மற்ற வேலைச் சுமையின் காரணமாகவோ, நம்மைக் கூப்பிடுவதற்கு முன்பாகவே யாரையாவது தேர்வு செய்துவிட்டால்…? யோசித்தான். ஒரு துண்டுப் பேப்பரை எடுத்தான்.

“சார், என் பெயர் வீரராகவன். உங்கள் அழைப்பு வரிசைப்படி நான் கடைசி ஆள். இந்தப் பதவிக்கான எல்லாத் தகுதிகளும், திறமைகளும், அனுபவமும் உண்டு. என்னை அழைப்பதற்கு முன்பாக, தயவு செய்து யாரையும் செலக்ட் செய்து விடாதீர்கள்”.

இதை எழுதிப் பியூனிடம் கொடுத்து உள்ளே அனுப்பினான்.

அவர்கள் இதைப் படித்தார்கள். கண்களில் வியப்பு. இதழ்களில் புன்னகை.

பலே, பையன் கொஞ்சம் ஸ்மார்ட் தான். வரட்டும் பார்ப்போம்.

அவனும் அழைக்கப்பட்டான். கேள்விகளுக்கெல்லாம் மிகச்சரியான பதிலளித்தான். பாராட்டுப் பெற்றான். பதவியும் பெற்றான்.

சரியான பதில்களை பலரும் அளித்திருப்பார்கள். ஆனால்…

துண்டுபோட்டு பஸ்ஸில் சீட் பிடித்த அந்த வித்தியாசமான முயற்சியல்லவா வேலை கிடைக்க உதவியது.

உங்கள் முயற்சிகளும், விதவிதமாக, வீரியமாக, வித்தியாசமாக இருந்தால், வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment