ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!
ஆர்வத்துக்கும் திறமைக்கும் முரண்பாடு வந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை இதுதான் என்பது போகிறபோக்கில் மாணவர்கள் சிலரைக் கேட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?
உங்களுக்கு எது நன்றாக வரும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். எனக்குப் பாடப் பிடிக்கும், ஆனால் குரல் சரியில்லை, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஆனால் சீக்கிரமே அவுட் ஆகிவிடுவேன், எனக்கு அறிவியல் பிடிக்கும், ஆனால் சமன்பாடுகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது…
பிடித்தது கையில் சிக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இருக்கிறது. எதில் திறமை இருக்கிறதோ அது அவ்வளவாகப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் இந்த ரகம். நன்றாக ஓவியம் வரையத் தெரியும், ஆனால் ஓவியத்தில் பெரிய ஆர்வம் இல்லை. நன்றாக ஓடுவேன் ஆனால் அதெலெடிக்ஸில் ஈடுபாடு கிடையாது, நிகழ்ச்சிகளை நடத்தச் சொன்னால் கலக்கிவிடுவேன் ஆனால் அதெல்லாம் தேவையில்லாத தொல்லை…
உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆர்வமும் திறமையும் பரஸ்பரம் இணைந்து போகாத நிலைதான் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான பிரச்சினை. இப்படிப்பட்ட சிக்கல் வரும்போது என்ன செய்வது?
ஆர்வத்துக்கு முதலிடம்
ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும். பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.
அப்படி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில விஷயங்களில் ஆர்வம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் திறமையை ஒரு மட்டத்துக்கு மேல் வளர்த்துக்கொண்டு செல்ல முடியாது. உதாரணம் வாய்ப்பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அடிப்படையாக ஓரளவேனும் நல்ல குரல் அமையாவிட்டால் ஒரு அளவுக்கு மேல் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. விளையாட்டிலும் அப்படித்தான். கிரிக்கெட்டின் மேல் வெறியாக இருக்கலாம். வெறித்தனமாக உழைக்கலாம். ஆனால் இயல்பாகவே கிரிக்கெட் திறன் இல்லாவிட்டால், அதில் ஒரு மட்டத்துக்கு மேல் போக முடியாது. அப்படிப் போக முடியும் என்றால் இன்று இந்தியாவில் ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்களும் இரண்டாயிரம் கும்ப்ளேகளும் உருவாகியிருக்க வேண்டும். ஏன் உருவாகவில்லை? ஆர்வம் மட்டும் போதாது என்பதுதான் காரணம்.
ஆர்வத்தை மட்டும் பின்தொடர்வதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விளையாட்டு, ராணுவம் போன்ற சில துறைகளுக்கு உடல் வலுவும் திறனும் அவசியம். இவை இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் காரணத்தால் உடலில் குறைபாடு உள்ளவர்கள், எவ்வளவு முயன்றாலும் அந்தத் துறையில் பிரகாசிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, ஆர்வம் என்பதைக் கண்மூடித்தனமாகப் பின்தொரட முடியாது.
சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறன்கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது வசப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.
உங்கள் பாதை உங்கள் பயணம்
திறமை இருந்தால்…
ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.
அதற்காக ஆர்வத்துக்கு அணை போட்டு இயல்பான ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியது இல்லை. மனதுக்கு அதிகமாகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்காகவோ மாற்றுத் துறையாகவோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பாட்டைப் பிரதானத் துறையாகக் கொண்டவர் எழுத்திலும் பிரகாசிக்கலாம். திறமையின் அடிப்படையில் ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஆர்வத்தின் அடிப்படையில் ஓவியம் அல்லது கைவினைத் தொழிலில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். ஆர்வத்துக்கும் தீனி, வருமானத்துக்கும் வழி.
இதுவரை பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்வோமா?
தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதானத் துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விஷயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.
ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.
பொருத்தமான உதாரணத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். ஒரு பையன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் சென்றான். வேகப் பந்து வீச்சைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை. சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்.
பந்துவீச்சுப் பயிற்சியின்போது சில சமயம் மட்டை வீச்சிலும் ஈடுபட வேண்டுமல்லவா? அப்படி அவன் ஆடும்போது தலைமைப் பயிற்சியாளர் அவனைக் கவனித்தார். அவனது மட்டை பேசும் விதத்தைக் கண்டு அசந்துபோனார். அவனைக் கூப்பிட்டு, “உனக்குப் பந்து வீச்சு சரிப்பட்டு வராது, நீ போய் பேட்டிங் பயிற்சி செய்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பையன் ஏமாற்றத்துடன் திரும்பினான். ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்னாளில் உலகிலேயே சிறந்த மட்டையாளர் எனப் பெயர் வாங்கினான். அவன் செய்த சில சாதனைகளை யாராலும் நெருங்கக்கூட முடியாது என்னும் அளவுக்குச் சாதனைகள் புரிந்தான்.
அவன் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
No comments:
Post a Comment