வேலை + படிப்பு… வெற்றிக்கு சில யோசனைகள்!
குடும்பச் சூழல் காரணமாகவோ அல்லது பொருளாதாரச் சூழல் காரணமாகவோ சில நேரங்களில் ஒரு டிகிரி முடித்ததுமே வேலைக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அல்லது அன்றைய சூழலில் நீங்கள் படித்ததே மிகப் பெரிய படிப்பாக இருந்திருக்கும். ஆனால், தற்போது நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கல்வித் தகுதியை அதிகரித்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். அல்லது உங்களுக்கே சில விஷயங்களைக் கற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
அனுமதி தேவை!
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். அந்த நிறுவனத்தில் இருந்துகொண்டே நீங்கள் படிக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தி டமிருந்து அதற்கான அனுமதியைப் பெறவேண்டும்.
காரணம், நீங்கள் படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும். அதனால் நிறுவன வேலைக்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் குறைய வாய்ப்புள்ளதால், மேற்படிப்பைப் படிக்க நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு அனுமதி தராமலே போகலாம். அதனால் நிறுவனத் தின் அனுமதி கட்டாயம் தேவை. அனுமதி பெற்றபின் படிப்பை தொடருவது படிப்பு, வேலை இரண்டுக்குமே நல்லது.
ஆர்வம் இருந்தால் மட்டும் படியுங்கள்!
வேலையில் இருக்கும் உங்களுக்கு உங்கள் வேலையைச் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இதில் படிக்க வேண்டும் என்று நினைக்கும் போது அதற்கான ஆர்வம் உங்களிடம் இருந்தால் மட்டுமே உங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும். நிறுவனத்தில் அனைவருமே என்னைவிட அதிகம் படித்திருக்கிறார்கள்; நானும் ஏதாவது படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்காதீர்கள். உங்களுக்குத் தேவைப்படும், உங்களை அடுத்த கட்டத்துக்கு வளர்க்கும் படிப்பை மட்டும் படியுங்கள்.
நேரம் ஒதுக்குங்கள்!
உங்களுக்கு அலுவலக நேரம் என்பது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கலாம். அதனைத் தாண்டி குடும்ப வேலைகள் போன்றவை உங்கள் நேரத்தை ஆக்கிரமிக்கலாம். அதுமட்டுமின்றி அடுத்த நாளுக்கான வேலையும் சேரலாம். அதனால் உங்களால் சரியான நேரத்தை படிப்புக்காக ஒதுக்க முடியாத சூழல் உருவாகலாம்.
சிலருக்கு அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குமேல் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு எல்லாம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் உங்களது வேலை முடிந்தது போக, மீதமுள்ள நேரத்தை உங்கள் படிப்புக்காகச் செலவழிக்கலாம். அப்படி இல்லாதவர்கள் வீட்டிலேயே சில மணி நேரத்தை படிப்புக்கு மட்டும் என ஒதுக்கி அந்த நேரத்தில் மற்ற வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.
என்ன படிக்கப் போகிறீர்கள்?
வேலை பார்த்துக்கொண்டே படிக்க வேண்டும் என்று திட்டம் போட்டவுடன் எந்தமாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியம். சிலர் தொலை தூரக் கல்வி மூலம் மேற்படிப்பு களைப் படிப்பார்கள். இன்னும் சிலர், சில தனியார் நிறுவனங்களில் சான்றிதழ் கோர்ஸ்களைப் படித்துத் தேர்ச்சி பெறுவார்கள். இந்த நிலையில் நமக்கு எது வசதியாகவும் பயனளிப்பதாகவும் உள்ளதோ, அந்த முறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பை தொடருவது நல்லது. ஆறு மாதத்தில் படித்துத் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களுக்கு, கல்லூரிகளில் மூன்று வருடம் படிப்பதை வேலையில் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. அது அவரது பதவி உயர்வையும் விரைவாக்கும்.
தானாகக் கற்கும் திறன் கொண்டவரா நீங்கள்?
சிலர், எனக்கு டிகிரியெல்லாம் தேவையில்லை; ஆனால், எனக்கு அந்தப் படிப்பு குறித்த அறிவும் அதில் வேலை செய்யும் திறனும் இருந்தால் போதும் என்று நினைப்பவராக இருந்தால், நீங்கள் இணையதளத்திலேயே கற்றுக்கொள்ள பல தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதனைப் படித்தே நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அதிலும் சிலருக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்கிறது. அனைத்து பாடங்களுமே ஆங்கிலத்தில் இருப்பதால் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கிறது என்பார்கள். அதனைச் சரிசெய்ய இணையதளங்களில் காட்சியாகவே வீடியோக்கள் மூலமாகவும், பிராந்திய மொழிகளிலும் தகவல்கள் வர ஆரம்பித்து விட்டன. அதனைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
25 வயதுக்குள் இரண்டு டிகிரி!
உங்களுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது எனில் 25 வயதுக்குள் இரண்டு டிகிரி, அதாவது ஒரு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்து விடுங்கள். இல்லையெனில் வேலைப்பளு அதிகமாகி உங்களது படிக்கும் மனப்போக்கு குறைந்துவிடும்.
அதற்குமேல் உங்களை அப்டேட் செய்து கொள்ளத் தேவைப்பட்டால் சில கோர்ஸ்களைத் தனியாகப் படித்துக் கொள்ளலாம். 25 வயது எனும்போது நீங்கள் முதல் டிகிரியை முடித்து, இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபிறகு இரண்டாவது டிகிரியை முடிக்க முடியும் என்பதால் அதற்குள் இரண்டு டிகிரியை முடிப்பது சிறந்தது.
படிப்புக்குப் பணம் சேமியுங்கள்!
நீங்கள் வேலைக்குச் சேர்ந்து படிக்கவேண்டும் என்று திட்டமிட்டுவிட்டால் உங்கள் படிப்புக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிடுங்கள். அதற்கு மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து உங்கள் தேவை போக எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை யோசியுங்கள். அதனை ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்துக்கு முன் சேமிக்கத் துவங்குங்கள்.
இப்படிச் செய்யும்போது குறைந்தபட்சம் உங்களால் முதல் செமஸ்டருக்கான கட்டணத்தை யாவது தயாராக வைத்திருக்க முடியும். இப்படிச் செய்யும் போது உங்கள் படிப்புச் செலவு சுமையாக இருக்காது. அதன்பின் சேமிக்கும் பணத்தை நல்ல லாபம் தரும் முதலீடுகளில் சேர்த்து வைக்கலாம்!
No comments:
Post a Comment