Friday, May 29, 2015

உங்களை நம்புங்கள்! நினைத்த காரியம் வெற்றிபெறும்!!

உங்களை நம்புங்கள்! நினைத்த காரியம் வெற்றிபெறும்!!

கல்வியிலோ,தொழிலிலோ நினைத்த இலக்கை,இலட்சியத்தை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகள் எது தமது இலட்சியத்தை அடைவதற்கான மிகப் பொருத்தமான வழியென்று தெரியாது தடுமாறுகின்றனர்.

இதற்கு என்ன காரணம்? சிறந்த தலைமைத்துவம், வழிகாட்டல் இன்மையே. இலட்சியத்தை அடைய முயற்சிக்கின்றீர்களா? உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள். உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் மாபெரும் சக்தி. ஏனெனி்ல்,இளமையும் ,சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல, உங்கள் கனவை நிஜமாக்குவதற்கு வார்த்தைகளில் உயிர்த்துடிப்பு இருப்பது மிகவும் அவசியம். உங்களின் ஆர்வம் கேட்போரின் மனதைத் தொடவேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாதது என நினைப்பதைத் தவிர்த்து எதுவுமே சாத்தியம் என நினைத்தால் நிச்சயம் வெற்றிதான்.

வீட்டில் யன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் பொலவே விடாமுயற்சியுடையவர்கள் தமக்கான புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து செல்லவேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்கள். சலிப்பு என்ற சொல்லுக்கே இடமளிக்காமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள்.

Goal-Setting-The-Key-to-Successசாதிக்க வேண்டும் என்ற துடிப்புடைய சிறு குழுவினரிடம் பன்முக நுண்மதி, பொதுஅறிவு மிருதுநிலைத் திறன், சிந்தனைத்திறன் என்பவற்றுடன் செயற்படும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு என்பன காணப்படுமாயின், இந்த உலகையே மாற்றியமைக்க முடியும்.

எல்லோரும் நடந்த பாதையில் செல்லாமல் மாறாக பாதைகளே இல்லாத இடத்தில் நடக்க முயன்றால், உங்களது காலடித் தடங்கள் மற்றவர்களுக்கு புதிய பாதையாக அமையும். இப்பாதையூடாக உங்களுடைய கற்கைநெறிகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும். இதன்போது உங்களைப் பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.

மாற்றமடையும்போது கற்கின்றோம். கற்கும்போதே மாற்றமடைகின்றோம். மாற்றம் ஒன்றே தொழில் வாழ்க்கைக்கும் உயர்கல்விக்கும் சிறந்த வழிகாட்டியாகும். அதற்காக எல்லோரும் மாற்றங்களுக்கான தேவையை இனங்கண்டறிவது மட்டுமன்றி, அறிந்துகொண்ட தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய நடைமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.இதன்மூலம்,உயர்கல்வி,தொழிற்கல்வி என்பவற்றைக் கற்பதற்கான வாய்ப்பை பெறமுடியும்.

ஒரு விதையை நிலத்தில் போட்டு அதன் வளர்ச்சிக்குத் தேவையான பசளை, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அந்த விதை, தனது வளர்ச்சிக்காக இடப்பட்ட எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரமாண்ட மரமாக வளர்கிறது. அதேபோல், இளம் சமுதாயத்தினர் பரந்து கிடக்கும் வாய்ப்புக்களில் தமக்கு பொருத்தமானதை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment