வேகமாய் வருகிறது வெற்றி
வெற்றி பெறுதலுக்கான வழிமுறைகளாக நல்லவராக இருத்தல், தகுதிகளை திறமைகளை கூர்மைப்படுத்திக் கொள்ளல், அதன்பின் சரியான திட்டமிடுதல் என்று நமது பண்பு நலன்களை சீரமைத்துக் கொள்ளல் அவசியம் எனக் கண்டோம்.
அடுத்தது திட்டமிட்டதை நிறைவேற்ற சீரான உழைப்பு. இதில் தான் பலபேர் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். அவர்கள் கற்பனை வானில் வண்ணக் கனவு காண்பவர்கள். எழுந்ததும் கலைந்து போவது இரவு கண்ட கனவு. அதுபோல நமது திட்டமிடுதல் ஆகிவிடக் கூடாது.
திட்டம் என்பது நினைவுச் சித்திரம்; கனவுக்கோலம்; அதனை மெய்யாக்கிக்காட்டி உண்மை உருவகமாய் நிலைபெறச் செய்ய கடின உழைப்பு தேவை. கடின உழைப்பு என்பது கடினமானது அல்ல. இந்த வாக்கியம் உங்களுக்கு விநோதமாக தோன்றுகிறதா? கடின உழைப்பு என்று சொல்லிவிட்டு அது கடினமானது இல்லையோ, அதுபோல தொழிலகத்தில் கடின உழைப்பை கொட்டுதலும் கடினமானது அல்ல. உழைப்பு கடினமானதாக சளைக்காத உழைப்பாக இருக்க வேண்டும். ஆனால் அதை மேற்கொள்ளுதல் கடினமானதல்ல. அது தினசரி உழைப்பாக இடைவிடாத உழைப்பாக மாறிவிட்டால் எளிமையானதாகிவிடும்.
‘A Fool and His Money are Soon Parted’ என்பார்கள். ஒரு முட்டாளின் கையில் கிடைக்கும் பணம் விரைவில் போய்விடும். நல்லறிவு படைத்தவன் நல்லதொரு உழைப்பாளியாக இருப்பான். அறிவாற்றலில் மேம்பட்டவன் உழைப்புக்கு அஞ்சமாட்டான். அறிவும் உழைப்பும் இரு கண்கள் போன்றவை.
‘நீ உழைக்கும்போது நூறு ஆண்டுகள் வாழப் போகிறேன் என்ற நம்பிக்கையோடு உழைக்க வேண்டும்’ என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் ‘வெற்றி என்பது 98 சதவிகிதம் வியர்வை சிந்தி உழைப்பதிலும் 2 சதவிதிதம் செயலை மட்டும் முடிக்க வேண்டும் என்ற ஊக்கத்திலும் தான் இருக்கிறது என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.
வயதான தந்தைக்கு மூன்று மக்கள். உழைத்து பல லட்சம் சொத்துக்கு உரிமையாளர் ஆனார். அவரது கடைசி காலத்தில் தனது மூன்று மகன்களையும் அழைத்தார். ‘எனது நிலத்தில் பொற்கலத்தில் நிறைய தங்கக் காசுகள் வைத்திருக்கிறேன். நிலத்தைத் தோண்டி, உழுது பார்த்து, கிளறிப் பார்த்து தேடிய போதும் பொக்கிஷம் ஒன்றும் கிடைத்தபாடில்லை. உழுத நிலத்தை மென்மேலும் பதப்படுத்தி விதை விதைத்து பயிர்செய்து விடுவோம் என்று உழைப்பில் இறங்கினர். மூன்று ஆண்டுகளில் ஏராளமான சொத்து சேர்த்து பணக்காரர் ஆகிவிட்டனர். பழைய கதைதான். ஆனால் அதுதரும் படிப்பினை இன்றைய வாழ்வுக்கும் பொருந்துவது போல இருக்கிறது அல்லவா?
‘கடின உழைப்புக்கு இணை ஏதும் இல்லை’ என்ற வாசகம் இதைத்தானே அறிவுறுத்துகிறது. உழைப்பு, உழைப்பு, இடைவிடாத உழைப்பு என்று பாடுபடுவோர் எதையும் சாதிக்க இயலும். செல்வம் குவியும். வளம் நிறையும் வெற்றிகள் தேடி வரும். உறவுகள் பெருகும். மதிப்பு உயரும். நடப்பன எல்லாம் நல்லவை ஆக இருக்கும்.
இந்த உழைப்பு தினசரி உழைப்பாக இருக்கட்டும். இன்று உழைப்பது நாளை தூங்குவது என்றிருக்கக் கூடாது. திட்டமிட்ட உழைப்பாக இருக்க வேண்டும். செக்குமாடு சுற்றிவருவது போல பயனற்ற உழைப்பாக இருக்கக்கூடாது. இடைவிடாத உழைப்பாக இருக்க வேண்டும். தோல்விகள், சறுக்கல்கள் வரும்போது உழைப்பை பாதியிலேயே நிறுத்திவிடக் கூடாது. இலட்சிய நோக்குடைய உழைப்பாக இருக்க வேண்டும். ‘எதற்காக உழைக்கிறோம்; எதனை அடைய உழைக்கிறோம்’ என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.
அரசாங்கப் பணியாக இருப்பினும் தனியார் நிறுவனப் பணியாக இருப்பினும் சுயதொழிலாக இருப்பினும் உழைப்பு நேர்மையானதாகவும், தெளிவானதாகவும், நம்முடைய உயர்வுக்கும் பிற்காலத்தில் வழிவகுக்கக் கூடியதாகவும்’ இருக்க வேண்டும். நிர்வாகத்துக்காக உழைத்தாலும் நமக்கு நல்ல பெயர் வரவேண்டும்; நாளை பதவி உயர்வு என்று வரும்போது நம்மை அவர்கள் எடைபோட்டு பார்க்க உதவுவதாக இருக்க வேண்டும். இது சுயநலமானதாக தோன்றுகின்றதா? பரவாயில்லை. நிர்வாகத்தின் வளர்ச்சியையும் தனது வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே சீரான உழைப்பை நல்குங்கள். வெற்றி வரும்.
‘வேலை செய்தாலும் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் வரும்’ என்ற நிலைமை சில அலுவலகங்களில் இருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் சிலர் ஒழுங்காக வேலை பார்ப்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் அங்கும் சிலர் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். உரிய நேரத்தில் பணிக்கு வருவார்கள்.
கண்காணிப்பவர் இல்லாவிட்டடாலும் தனது கடமையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தே தீரும். உரிய நேரத்தில் அவர்களுக்கு பதவி உயர்வு தானே வரும். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தனது பணியைச் செவ்வனே செய்வோர்க்கு காலம் தனது பரிசுகளை தரத் தயங்காது. இதைத்தான் மகாகவி பாரதி,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
என்று வலியுறுத்தினார். நாம் எதைச் செய்ய நினைத்தோமோ அதைச்செய்து முடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதைச்செய்ய நினைக்கிறீர்களோ அது நல்லதாக, அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். நல்லது செய்ய நினைத்து உழைப்பைக் கொட்டினால் அது வெற்றி தரும். கெட்டது செய்ய நினைத்து உழைப்பைக் கொட்டினால் வேதனை தான் வரும். எனவே நல்ல இலட்சியங்களை மனதிற்கொண்டு கடின உழைப்பை நல்கினால் வாழ்வு பூந்தோட்டமாகும்.
No comments:
Post a Comment