Tuesday, May 5, 2015

உங்கள் ஆற்றலை அறிந்து செயல்படுங்கள்

உங்கள் ஆற்றலை அறிந்து செயல்படுங்கள்

12 -ம் வகுப்பு படித்து முடித்ததும் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலான மாணவர்களின் பதில் என்ன? சிலர் மருத்துவர் என்பீர்கள்; சிலர் பொறியாளர் என்பீர்கள்; ஆசிரியர், போலீஸ், கலக்டர், ராணுவ அதிகாரி என பல பதில்கள் வரக்கூடும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன், சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

பதிலை மேலோட்டமாக யோசிக்காமல், உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விக்கு, அதிமுக்கியமான பதில் என்பதை நினைவில் கொண்டு உங்கள் ஆழ்மனதைக் கேளுங்கள்.

நம்மில் பலருக்கு, நண்பர்கள் தேர்ந்தெடுக்கும் துறையையே தெரிவு செய்யும் அவசரம். இரண்டு காரணங்கள்:

1. புதிதாய் யாருடனும் பழக்கம் ஏற்படுத்திகொள்வதில் உள்ள தயக்கம்
2. இன்பமாய் பொழுதைக் கழிக்க நண்பர் துணை தேவை

இன்னும் சிலருக்கோ, பெரும்பான்மையினர் தேர்வு செய்யும் துறையே சிறந்தது. வேறு சிலருக்கு, ஏதோ ஒரு படிப்பு, என்ன கிடைக்கிறதோ அதை படிக்க வேண்டியதுதான்.

எத்தனையோ புத்தகங்களும், நாளிதழ்களும், தொலைக்காட்சி சானல்களும், இது குறித்து, பல தகவல்களை வெளியிட்டாலும், நம்மில் பலரும், இது குறித்த தெளிவான கண்ணோட்டம் இல்லாமலேதான் இருக்கிறோம்.

பல்வேறு துறைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த பல நல்ல இணைய தளங்கள் உள்ளன. ஆனால், துறையைத் தேர்ந்தெடுக்கும் முன், நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில், உங்கள் பலம் என்ன என்பதுதான்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் குறித்து உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அவருடன் படித்த பலர் இன்று என்ன செய்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பில்கேட்ஸின் வெற்றியின் ரகசியம் என்ன என்று எப்பொழுதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? அவரே சொல்வதைக் கேளுங்கள். "நான் உங்களை போன்றவனே.உங்களுக்கும் எனக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. ஒரு வித்தியாசம் கட்டாயம் சொல்லவேண்டுமெனில் நான் தினமும் எனக்குப் பிடித்த வேலையைச் செய்கிறேன் - தினமும்". உங்களுக்குப் பிடித்த வேலை என்ன? அதற்கு என்ன படிக்கவேண்டும்? சிந்தியுங்கள்.

நீங்கள் ஒரு துறையில் வெற்றி பெற வேண்டுமானால், உங்களுக்குத் தேவையானவை மூன்று அம்ஸங்கள்:

1. உங்களது ஆற்றல் அல்லது பலம் (Talent)
2. அந்த துறை குறித்த விஷய ஞானம் (Knowledge)
3. திறமை (Skill)

விஷய ஞானமும், திறமையும் நம் முயற்சியால் கைகூடும். ஆனால் ஆற்றல்கள் நாம் சிறு குழந்தைகளாய் - சொல்லப்போனால், 3 வயதுக்குள்ளாக - இருக்கும்போது நமது சூழ்நிலையின் தாக்கத்தால் உருவானவை. எளிதாய் நண்பர்களை உருவாக்குவது, எந்த சூழ்நிலையையும் கலகலப்பாக்குவது, பிறரை ஊக்குவிப்பது, புதிது புதிதாய் கற்றுக்கொள்வதில் ஆர்வம், பொறுப்புடன் செயல்படுவது, வெற்றிக்காக முழு முயற்சி எடுப்பது என்பது போன்ற பல ஆற்றல்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில நமது ஆதார ஆற்றல்களாகவும், மற்றயவை போதுமான அளவோ அல்லது அதற்கும் குறைவாகவோ உருவாகின்றன. உங்களது ஆதார ஆற்றலைச் சார்ந்து உங்கள் வேலையை உருவாக்கிக்கொண்டால் நீங்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடிக்கலாம்; இல்லையெனில், ஏதோ ஒரு படிப்பு, ஏதோ ஒரு வேலை, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவு என்று வாழ வேண்டியது தான்.

சரி, ஆதார ஆற்றலை எப்படி கண்டுபிடிப்பது என்பது அடுத்த கேள்வி. எதைச் செய்யும்போது உங்களுக்கு நேரம் செல்வது தெரியவில்லையோ, மீண்டும் மீண்டும் செய்தாலும் சலிக்கவில்லையோ, ஒவ்வொரு முறை செய்யும்போதும், முதல் முறையை விட ஒரு சதவீதமாவது சிறப்பாகச் செய்கிறீர்களோ அதுவே உங்கள் ஆதார ஆற்றல். எனவே, புதிய புதிய செயல்களை செய்து பாருங்கள். முதல் இரு வாரங்கள் எந்த வேலையும் கடினமானதாகவே தோன்றும். அந்த வேலையின் நுணுக்கத்தை கற்றுக்கொண்ட பின்னர், குறைந்தது இரண்டு மாதங்களாவது செய்து பாருங்கள். இரண்டு மாதமும், உங்கள் உணர்வுகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவை, ஆதார ஆற்றலின் வரையறையுடன் ஒத்துப்போனால், உங்கள் ஆதார ஆற்றல்களில் ஒன்றை நீங்கள் கண்டுகொண்டீர்கள் என்று பொருள்.

இதைப் படித்தவுடன், தொலைகாட்சியில், கிரிக்கெட் பார்ப்பதுதான் நான் சலிக்காமல் செய்யும் செயல் என்று உங்களில் சிலர் கேலியாக நினைக்கலாம். இந்த ஆற்றலுடன் உங்களது பிற ஆற்றல்களையும் சேர்த்து உங்களது துறையாகத் தேர்வு செய்யலாம் - எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்பு இன்றி குறை நிறைகளை சுட்டிக்காட்டுவதும், எழுதுவது/பேசுவதும் உங்கள் ஆற்றலாக இருந்தால், விமர்சகர் ஆகலாம்; எழுதுவது / பேசுவது இல்லையெனில், அம்பயர் ஆகலாம். ஹர்ஷா போகலே என்ற விமர்சகரை நீங்கள் அறிந்திருபீர்கள். அவர் விளையாட்டு வீரர் அல்ல ஆனால், அவர் தன் ஆற்றலை உணர்ந்ததால் விளையாட்டுவீரர்களுக்கு இணையான புகழும் செல்வமும் ஈட்டியவர்.

தொலைகாட்சிகளிலும் வானொலியிலும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தும் திரு. அப்துல் ஹமீது அவர்களை நினைத்து பாருங்கள்; அவருக்கு திரை இசைப்பாடல்களைக் கேட்கப்பிடிக்கும். அத்துடன், நல்ல ஞாபக சக்தி அவருக்கு. இவை இரண்டும் சேர்ந்த ஒரு வேலையை அவர் தேர்ந்தெடுத்தார். பல பாடகர்களைவிட இன்று அவர் பிரபலம்.

எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், உங்கள் ஆற்றல்களை நீங்கள் கண்டுகொண்டால். இல்லையெனில், மாதந்தோறும், பட்ஜெட் போட்டு, கனவுகளைச் சுருக்கி வாழும் கோடானுகோடி மனிதர்களில் ஒருவராய் நீங்கள் வாழ்ந்து மடிய வேண்டியதுதான். 

உங்கள் ஆற்றல் அறிந்து அதைச் சார்ந்து உங்கள் வாழ்வு அமைய வாழ்த்துகள்!!

No comments:

Post a Comment