மலரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம். சில தீர்மானங்கள் செய்து கொள்கிறோம்.
“இந்த ஆண்டு சொந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறேன்.”
“இந்த ஆண்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லப் போகிறேன்.”
“இந்த ஆண்டு எனது கனவு வீட்டைக் கட்டப்போகிறேன்.”
“இந்த ஆண்டு உலகம் புகழும் மகத்தான கதை ஒன்றை எழுதப் போகிறேன்.”
“இந்த ஆண்டு அளவோடு சாப்பிட்டு கொடி போல உடலை வைத்துக் கொள்ளப் போகிறேன்.”
இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒரு தீர்மானம் செய்கிறோம். நல்ல தீர்மானங்கள்! நல்ல நோக்கம்.
அடுத்த ஆண்டு தொடங்கும்போது பார்த்தோமானால் இதே தீர்மானங்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! அதாவது இந்த ஆண்டு முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் நாம் முன்னேறவில்லை. அதை அடைய நாம் எதையும் சாதிக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்வார்கள். “மீண்டும் முதல் படியில்!” என்று. முதல் படிக்கே திரும்பத் திரும்ப வந்தோமானால் நாம் எப்படி முன்னேறுவது?
ஒரு அமைச்சர் மரம் நட வந்தார். மரம் நட்டார். தண்ணீர் ஊற்றினார். ஒரு சந்தேகம் வந்தது. "நான் நடும் மரத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார்.
"அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் எந்த அமைச்சர் வந்தாலும் இங்கேதான் நடுகிறார். நாங்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்!" என்று சொன்னார்கள்.
எப்படிக் கதை!
செடி நடும்போது மாத்திரம் தண்ணீர் ஊற்றினால் எப்படி வளரும், செடி? எப்படி வளர்ந்து மரமாகும்?
இதுதான் பலருடைய கதை!
வேகம் இல்லை!
வெகு தீவிரமாக ஆர்வத்துடன் தீர்மானம் செய்கிறோம். வைராக்கியத்துடன் சொல்லிக் கொள்கிறோம். "நாளையிலிருந்து நான் புது மனிதன்!" என்று. ஓரிரு நாள் அந்த நினைப்பு நம்முடன் இருக்கிறது. ஆனால், நாம் தொடர்ந்து புது மனிதனாக ஆக, கவனத்துடன் இருப்பதில்லை. முதலில் இருந்த வேகம் இப்போது நம்மிடம் இருப்பதில்லை. ஆரம்ப சூரத்தனத்துடன் சரி. பிறகு முயற்சிகளை விட்டு விடுகிறோம்.
"இந்த ஆண்டு எம்.பி.ஏ. நிர்வாகப் படிப்பு படிக்கப் போகிறேன். அதுவும் தபால் மூலம் சொல்லித் தருகிறார்கள். நிர்வாகம் பற்றி படித்தால் தான் நாளை சொந்தத் தொழிலில் இறங்கலாம்" என்று நல்ல தீர்மானம் எடுப்போம். அல்லது -
"தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். பதினாறு பெரிய மாநிலங்களில் ஒரு மாநிலம். பணம் புரள்வதெல்லாம் பம்பாயில், பஞ்சாபில், குஜராத்தில். எனவே நான் அங்கே போய் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன். அவர்களுக்கு வேண்டியதை தயார் செய்யப் போகிறேன்."
இப்படி ஒரு வியாபாரி தீர்மானம் செய்கிறார். ஆனால் அதில் அவர் முனைகிறாரா தொடர்ந்து அதை முடிக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. திறந்த சோடா பாட்டில் போல பல ஆசைகளையும் தீர்மானங்களையும் புஸ்வாணமாக்கி விடுகிறோம்!
நாம் எங்கே தோற்றுப் போகிறோம்? எதனால் தோற்றுப் போகிறோம்?
நம்மிடம் சுய கட்டுப்பாடு இல்லை. தொடர்ந்த ஈடுபாடு இல்லை. குறிக்கோள் கடைசிவரை நிற்பதில்லை. கண்காணிப்பு இல்லை. கவனம் வேறு எதில் எல்லாமோ சென்று நமது குறிக்கோளை திசை திருப்பி விடுகின்றன. நம் கவனமெல்லாம் முயற்சி இன்றி, ஆர்வமின்றி, ஆற்றலின்றி, உழைப்பின்றி, மங்கி மடிந்துவிடுகிறது. இதுதான் குறிக்கோளை எட்டமுடியாததற்கு காரணம்.
சுயக்கட்டுப்பாடு
ஒரு பெரிய விருந்து, ஒரு நல்ல அறிஞரை அழைத்திருந்தார்கள். சாப்பிடும்முன் அவரைப் பேசச் சொன்னார்கள். அவர் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார். "நீங்கள் எல்லாரும் மனிதர்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா?"
"மனிதர்கள்! மனிதர்கள்!" என்றார்கள், அமர்ந்திருந்தவர்கள்.
அவர் சொன்னார்: "மிருகங்கள் தங்களுக்குப் போதுமென்று எண்ணியதும் சாப்பிடுவதில்லை! நிறுத்திக் கொள்கின்றன."
அறிஞர் என்ன சொல்கிறார்?
மனிதன் தேவையினால் உந்தப்படுவதில்லை. ஆசையினால் உந்தப்படுகிறான்! தேவையினால் உந்தப்படுபவன் கட்டுப்பாடுடையவன். ஆசை என்பது மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது. ஆசைக்கு எங்கே முடிவு?
எனவேதான் சொல்லுகிறேன் - வாழ்வின் மிக முக்கியமான பாடம் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொண்டோமா என்பதுதான்.
உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா? "காலையில் 5 மணிக்கு எழுவேன்" என்று சொல்வதிலிருந்து "வயிற்றை லேசாக வைத்துக் கொள்வேன், போட்டு அடைக்க மாட்டேன்" என்று சொல்வது வரை உங்களிடம் சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா? இதெல்லாம் நம் சொந்த விஷயங்கள். நாம் விரும்பினால் நடத்திக்காட்ட முடியும். நாம் மனது வைத்தால் செய்து காட்ட முடியும். நாம் பாடுபட்டால் இதையெல்லாம் நமது நல்ல பழக்கங்களாக ஆக்கிக் கொள்ள முடியும்.
சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதன் தறிகெட்டு ஓடும் குதிரைக்குச் சமானம். அதேபோல சுயக்கட்டுப்பாடற்ற - சட்டங்களை மதிக்காத சமுதாயம், வாழத் தகுதியற்றது. முன்னால் முதல்வர்களான பங்காரப்பா, கல்யாண்சிங் போன்றவர்கள் - சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள் - உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்தார்களா என்று யோசித்துப் பாருங்கள்.
மவுன விரதம்
மனதை மட்டுமல்ல, பேசுகின்ற வார்த்தையையும் வாயையும் கட்டுப்படுத்த வேண்டுமென்று நமது ஞானிகள் எண்ணினார்கள். மகாத்மா காந்தி வாரத்தில் ஒருநாள் திங்கட்கிழமை மவுன விரதம் இருந்தார். அன்று யாருடனும் பேசமாட்டார். யோகி வேதாத்ரி அடிகள் ஆளியாறுக்கு அருகிலுள்ள அவரது ஆசிரமத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மாத காலம் மவுன விரதம் இருப்பார். எதற்கு?
தன்னைத்தானே அடக்க, நாவை அடக்க, பேச்சை அடக்க, சுயமாகத் தன்னைப் பற்றி தானே சிந்தித்துப் பார்க்க.
நம் வீடுகளில் பெண்கள் பலர் திங்கட்கிழமை, சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருப்பார்கள். அன்று முழு நாளும் சாப்பிட மாட்டார்கள். அல்லது ஒரு வேளை உணவு உண்பார்கள். கேட்டால் சோம வார விரதம், கந்த சஷ்டி விரதம் என்பார்கள். அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி என்று விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். என் தாய் திருவாதிரையன்று முதல் நாள் எதுவும் சாப்பிட மாட்டார்கள். மறுநாள் நடராசர் வீதியில் உலா வரும்போது (ஆருத்திரா தரிசனம்) தரிசித்துவிட்டு திருவாதிரைக் களி என்ற உணவை சாப்பிடுவார்கள்.
மகாத்மா காந்தியின் தாய் தினமும் சூரியனைப் பார்த்து தரிசித்து விட்டுதான் உணவு உட்கொள்வார் என்றும் "அன்று சூரியன் தெரியாவிட்டால் அவர் பட்டினிதான்" என்றும் தன் தாயின் விரதத்தையும் மன உறுதியையும் பற்றி காந்தி தன் சுயசரிதையில் எழுதுகிறார்.
விரதம் ஏன்?
ஏன் இந்த விரதங்கள்?
நம் உடலுக்கு ஓய்வு கொடுக்க, மேலே மேலே போட்டு வயிற்றை அடைத்து நாம் நம் உடலைத் துன்புறுத்துகிறோம். தேவையில்லாமல் உடலில் சதை போடுகிறது. கீழே குனிய முடியாமல் தொப்பை பெருக்கிறது. சரியான அளவு சாப்பிடும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதிக உணவு கொண்டால் அதிகம் சிந்திக்க முடிவதில்லை. தூக்கம்தான் நம்மை ஆட்கொள்கிறது.
விரதம் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? முகத்திலே ஒரு ஒளி இருக்கும். ஒரு அமைதி இருக்கும். ஒரு இனிமை இருக்கும். நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள உண்ணா நோன்பு போன்ற நல்ல பயிற்சி வேறில்லை.
இங்கேதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; முதலில் புரிந்து கொள்ள வேணடும். என்ன அந்த முக்கியமான விஷயம்?
சுயக்கட்டுப்பாட்டை சாப்பிடுவதில் கற்றுக் கொண்டோமானால், நாவை அடக்கக் கற்றுக் கொண்டோமானால், நம் வாழ்வின் முக்கியமான எல்லா விஷயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும். நம் வாழ்வை மிகப் பிரமாதமாக வாழ முடியும்.
விரதங்கள் வழியே முதலில் நம் மனதைக் கட்டுப்படுத்துகிறோம்; பிறகு வாழ்வை ஒரு ஒழுங்கில் கொண்டு வருகிறோம். விரதம் இருப்பது "எல்லாவற்றிலும் என்னால் கட்டுப்பாடுடன் இருக்க முடியும்" என்கிற நம்பிக்கையை நம்முள் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக நம் வாழ்வு நம் கைக்குள் - நாம் விரும்புகிறபடி அமைகிறது.
சுயக்கட்டுப்பாடு என்பது வாழ்வின் தேவையான அடிப்படைப் பழக்கம். முதலாவதாக கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கம். தியானம் நம் சிந்தனைகளை ஒரு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறது. விரதம் நமது செயல்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.
சுயக்கட்டுப்பாடு இருந்தால், ஒரு ஒழுங்கின் மூலம், வைராக்கியத்தின் மூலம் இந்தப் புத்தாண்டில் ஆசைப்படும் இலட்சியங்களை நிச்சயம் சாதனைகளாக மாற்றுவீர்கள்.
No comments:
Post a Comment