மனமும் குணமும் மாறாது
ஊதாரித்தனமாக செலவழிக்கும் ஒரு பணக்காரியிடம் ஐந்து பசுக்கள் இருந்தன. தன் வீட்டில் கறக்கும் பாலை விற்றுக் கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து விடுவாள். போதாக்குறைக்கு கடனும் வாங்குவாள். அவள் எதிர்வீட்டில், ஒரே பசுவுடன் ஏழைப்பெண் இருந்தாள். அந்த பசு தரும் வருமானம் தான், அவள் குடும்ப வாழ்வை ஓட்டியது. அவள் அந்தப்பணத்திலும் சிறிது மிச்சம் பிடிப்பாள். பணக்காரி, தன் வீட்டுப்பாலை முழுமையாக விற்று விட்டு, ஏழைப் பெண்ணிடம் கடனுக்கு பால் வாங்கினாள். இப்படியே ஐம்பது செம்பு பால் வாங்கி விட்டாள்.
ஒருமுறை, ஏழையின் பசு இறந்து விட்டது. தன் நிலையைச் சொல்லி, பணக்காரியிடம், ""அம்மா! நீங்கள் என்னிடம் வாங்கிய பாலுக்குரிய பணத்தைக் கொடுங்கள்,'' என்றாள். பணக்காரியோ, பாலே வாங்கவில்லை என மறுத்து விட்டாள்.
விஷயம் கோர்ட்டுக்குப் போனது.
"என்னிடம் ஐந்து பசுக்கள் இருக்க, இவளிடம் ஏன் பால் வாங்கப் போகிறேன்?'' என்று குண்டை தூக்கிப் போட்டாள் பணக்காரி. ஏழையோ, நடந்த உண்மையைச் சொன்னாள்.
நீதிபதி புத்திசாலி. நடந்ததைப் புரிந்து கொண்டார். ஆளுக்கு ஐந்து செம்பு தண்ணீரைக் கொடுத்து, "கால் கழுவி வாருங்கள்' என்றார்.
பணக்காரி, ஐந்து செம்பை நீரையும் காலில் மொத்தமாக கொட்டிக்கவிழ்த்து விட்டு, அழுக்கு கூட போகாமல் உள்ளே வந்தாள். ஏழையோ, ஒரே செம்பில் அழுக்கு தீர கால் கழுவி வந்து விட்டாள். நான்கு செம்பு நீரைத் தொடவே இல்லை. இதிலிருந்தே, பணக்காரியின் ஆடம்பரத்தைப் புரிந்து கொண்ட நீதிபதி, ஏழைக்கு சாதகமாக தீர்ப்பளித்தார்.
மனமும், குணமும் இயற்கையில் எப்படி அமைந்ததோ அப்படித்தான் கடைசி வரை இருக்கும். அதை மறைத்து நல்லவர் போல் நடிக்க முயன்றாலும் முடியாது.
No comments:
Post a Comment