சேத்தாண்டிகளா நாம்?
1.எங்கள் ஊரில் நான் சிறுவயதாக இருக்கும் போது புரட்டாசிப் பொங்கல் என்று தமிழில் புரட்டாசி மாதம் பொங்கல் வைத்து வரப்போகின்ற விவசாய காலத்திற்குத் தங்களைத் தயார் செய்ய ஊர் கூடி விழா எடுத்துக் கொண்டாட்டங்களில் திளைக்கும்.அப்போது எல்லோரும் ரசிக்கும் படியாக யாரோ சிலர் தங்கள் உடல் முழுவதும் சாக்கைக் கொண்டு மூடியும் கண் பார்க்கவும் சுவாசிக்கவும் மட்டும் வெளியே தெரியும் மட்டும் சிறு ஓட்டைஅந்த சாக்கில் ஏற்படுத்திக் கொண்டு தங்கள் உடல் வெளியே தெரியாதபடிக்கும்,யார் என்று அடையாளம் தெரியாதபடிக்கும் தங்களை மறைத்துக் கொண்டு அந்த சாக்கின் வெளிப்புறத்தில் அருகில் உள்ள குட்டையில் இருந்து சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு மக்கள் கூடியுள்ள இடங்களில் இரண்டு மூன்று நபர்களாகச் சேர்ந்து சேற்றைப் பூச வருவார்கள்.
2. அதற்குப் பயந்து கொண்டு ஆண்களும் பெண்களும் சிரித்துக் கொண்டே ஒடுவதை எம்போன்ற சிறுவர்கள் ரசித்தும் சிரித்தும் இருப்போம் .அந்த சேற்றை உடல் முழுவதும் பூசியுள்ள நபர்களைப் பார்த்தவுடன் சேத்தாண்டி வர்றான் என்று சொல்லி எல்லோரும் பரபரப்புக்கும் மகிழ்சிக்கும் உள்ளாவார்கள்.அப்படிப்பட்ட சேத்தாண்டிகளை அதன் பின்பு பாதி நகர வாழ்க்கையில் இருந்த என்னால் பார்க்க முடியவில்லை அந்த சேத்தாண்டிகள் கலாச்சாரம் தற்போது கிராமக் கலாச்சாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.அப்படிப்பட்ட சேத்தாண்டிகள் கொடுத்த மன மகிழ்ச்சியையும் மன விடுத்தல்களையும் அதன் பின்பு எந்த ஒரு சூழ்நிலையிலும் அனுபவிக்க முடியவில்லை.
3.அப்படி ஏதாவது மன மகிழ்ச்சிகள் இருந்தால் கூட அது எல்லாம் சேத்தாண்டிகளுக்குக் கீழாகத்தான் இருக்கின்றது.ஆனால் அப்படிப்பட்ட சேத்தாண்டி வேசத்தை தினம் தோறும் நம் வாழ்வில் விதம் விதமாகப் போட்டு வாழ்ந்து வருகின்றோம். சில நேரங்களில் மற்ற சேத்தாண்டிகளின் பல விதமான வடிவங்களால் ஆன சாக்குகளையும் ,சேறுகளையும் தினம் தோறும் கண்டு வருகின்றோம்.ஆனால் நாம் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக இப்படிப்பட்ட சேத்தாண்டி வேடங்களைப் பூணுவதில்லை.நமது மகிழ்ச்சிக்காக மட்டுமே மற்றவர்கள் அனைவரையும் சேத்தாண்டிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். நாம் மட்டும் அந்த வேசத்தை ரசிக்கும் நபராக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். மற்றவர்கள் மகிழ நாம் சேத்தாண்டிகளாக இருக்க விரும்புவதில்லை.அப்படி சேத்தாண்டிகளாக இருந்தாலும் மற்றவர்கள் தான் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்கின்றோம்.
4.நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தங்களது மகிழ்ச்சிக்காக மட்டும் சேத்தாண்டி வேசம் பூண்டு வருபவர்கள் யார்?அவர்களால் நாம் எப்படிப் பாதிக்கப்படுகின்றோம்?அவர்கள் நமக்கு சிரிப்பு மூட்ட வருகின்றார்களா?அல்லது நாம் அவர்களுக்கு சிரிப்பு மூட்டச் சொல்லுகின்றார்களா?
5.ஒவ்வொருவரும் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் உருவகப்படுத்தி மற்றவர்களிடம் தனது எண்ணங்களை விதைத்து அறுவடை செய்ய முயலும் போது தான் வாழ்க்கையின் நிகழ்வுகளும் போராட்டங்களும் ஆரம்பிக்கின்றன.எல்லா மனிதர்களும் தான் எந்த எண்ணத்தில் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அதனை செயல்படுத்த முடியும் என்று நம்புகின்றார்கள்.அது தனி நபர் பார்வையிலும் சமூகத்தின் பார்வையிலும் நல்லதோ கெட்டதோ எப்படி இருந்தாலும் சரி.அப்படி நிகழும் செயல்களின் வாயிலாக மனிதர்களின் உள் மனச் சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
6.உலகமே ஒரு நாடக மேடை என்று சேக்க்ஷ்பியர் சொல்லுகின்றார்.அதில் எல்லோரும் ஒவ்வொரு வேடம் பூண்டு வருகின்றோம் .அந்த வேடங்கள் சேத்தாண்டிகளாக இருக்கலாம் சேத்தாண்டிகளுக்குள் இருக்கும் மனிதர்கள் யாரென்று நமக்கு அடையாளம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவர்களது செயல்கள் நமக்கு வெளிப்படையாக அவர்களது உளக்கிடக்கையை அறிவிக்கின்றது.மற்றவர்களை மகிழ்விப்பதற்காக போடப்பட்ட இத்தைகைய வேடங்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களை மறைக்கவும் பயன்படுகின்றது.ஆகவே தனக்காகவே இல்லாத செயல்பாடுகள் என்னும் இயற்கையின் அடிப்படை விதிகளைப் புறக்கணித்து விட்டு புதிய நோக்கங்களுக்காக சேத்தாண்டிகளாக நாம் ,கண்டிப்பாக மற்றவர்களை மகிழ வைப்பதற்காக அல்ல தன்னை மற்றவர்கள் மகிழ வைக்க வேண்டும் என்று.
7.அப்படிப்பட்ட புதிய புதிய நோக்கங்களுக்காக புதிய புதிய பிறப்பெடுக்கும் சேத்தாண்டிகளை மகிழச் செய்யத்தான் முடியுமா?நாமும் தான் எப்படிப்பட்ட சேத்தாண்டி வேடம் பூண்டு திரிகின்றோம் என்று நமக்கே தெரிவதில்லை.நம்மை நாமே ஆராய்வோம் .இயல்பிலேயே இயற்கை உருவாக்கிய சேத்தாண்டிகளான நாம் அதன் உண்மையான நோக்கத்தை விடுத்து தன்னை மகிழ்விக்க மற்றவர்களைக் கோராமல்.மற்றவர்களை என்னென்னெ விதத்தில் மகிழ்விக்க முடியும் என்று சிந்தனை செய்வோம்.இயற்கையின் உண்மையான நோக்கத்தினை நிறைவு செய்வோம்.நம் மீது மட்டுமே சேறு பூசிக்கொள்வோம் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக .மற்றவர்கள் மீது சேறு பூசி அவர்களை சேத்தாண்டிகளாக பார்த்து நாம் மகிழ வேண்டாம்.இந்தப் பதிவினைப் படித்து நீங்கள் மகிழ்வுற்றால் நானும் ஒரு நல்ல சேத்தாண்டி தான்.
No comments:
Post a Comment