கவர்தலும் விலக்குதலும்
1.எல்லா நேரங்களிலும் ஒரு மனிதன் விவேகமும் அறிவும் உடையவனாக நடந்து கொள்ள முடியாது.இயற்கையோடு ஒன்றி ஒரு காரியத்தைச் செய்யாத போது அது சரியான முடிவைத் தராது .சரியான முடிவைத் தராதவைகள் எல்லாம் இயற்கையின் விதிகளை ஏதாவது ஒரு விதத்தில் புறக்கனிக்கப்பட்டவைகள் ஆகும்.மனிதன் என்பவன் தன்னைப் பிறரில் காண்பவன்.தனது எண்ணங்களைப் பிறரிடம் காண்பது என்பது தான் நிகழ்வுகள் .
2.இதை அறிந்தவர்கள் தான் இருக்கும் சூழ்நிலையில் எல்லா முடிவுகளும் தனக்கு முன்பாகப் பொதிந்து கிடக்கின்றன என்பதனை அறிவார்கள்.பொதிந்து கிடக்கும் அந்த முடிவுகளில் இருந்து தனக்கு வேண்டியதை மட்டும் அந்த சூழலில் இருந்து தன் மூலமாக வெளிப்படுத்துகின்றான்.இந்த அறிவை தான் இருக்கின்ற சூழ்நிலைகளில் இருந்து கிரகித்தும் அதனை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்கின்றான்.
3.நாம் எந்த சூழலில் இருந்தாலும் அங்கு வெற்றி, தோல்வி, பழிச்சொல், அவமானம், வெகுமானம் ,மகிழ்ச்சி ,துயரம் ,வீரம் போன்ற பல குணங்கள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் அல்லது குடி கொண்டிருக்கும். நாம் எதற்குத் தகுதியானவர்களாக அந்த சூழலில் நம்மை வெளிப்படுத்துகின்றோமோ அப்படியே அது நம்மால் கிரகிக்கப்பட்டு ஒரு நிகழ்வு நடைபெறும். நாம் தகுதியானவற்றை நாம் அடைவோம்.
4.அதேபோல் அந்த சூழ்நிலையில் உள்ள மற்றவர்களும் எதை அடையத் தகுதியாகத் தங்களது சிந்தனைகளை வைத்திருந்தனர் என்பதனை அவர்கள் அடையும் தகுதியில் இருந்தும் முடிவுகளில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.அதனால் நமக்கு முன் உள்ள எல்லா நிலைகளிலும் உள்ள முடிவுகளுக்கான அறிவைக் கிரகித்து நமக்குத் தேவையானதை மட்டும் செயலாகப் பரிணமிக்க வைக்கும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5.இதற்காக நாம் நமது கிரகிக்கும் திறமையை வளர்க்க வேண்டும் ஒரு பொருளையோ சூழ்நிலையையோ பொதுவான கண்களுக்குத் தெரியும் நிலைகளைக் காணாமல் அதனை மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வேண்டும் பார்க்க வேண்டும்.இதனை நமது ஒவ்வொரு நிலையிலும் வளர்க்க வேண்டும் பயிற்சி செய்ய வேண்டும்.அதற்குப் பல சூழ்நிலைகளுக்குள் புகுந்து பங்கெடுக்க வேண்டும் ஒவ்வொருவரும் என்னவிதமான குணங்களை அந்தச்சூழ்நிலையில் கிரகித்து எப்படி அதனை வெளியிட்டு தாங்கள் சிறப்புப் பெறுகின்றார்கள் என்பதனையும்.எப்படித் தோல்வியைத் தழுவுகின்றார்கள் என்பதனையும் கற்க வேண்டும்
6.நாம் ஏதும் தோல்விகள் அடையும் பட்சத்தில் அதனையும் அந்தச் சூழலின் பாடமாக நாம் கிரகித்து வெளிப்படுத்துகின்றோம் என்ற மனநிலையில் இருக்க வேண்டும்.நாம் இருக்கும் சூழ்நிலைகளில் ஒவ்வொருவர் அடைந்துள்ள செயல்களின் முடிவைக் கொண்டு அவர்கள் எப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தார்கள் என்பதனையும் நாம் கற்க வேண்டும்.இந்த அறிவை நாள்தோறும் மேம்படுத்த வேண்டும்.
7.கிரகித்தல் என்னும் குணத்தை எடுத்துக் கொண்டால் ஒரு சிறிய உதாரணம்.நான் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது அதில் பல தனித்திறமை பெற்றவர்கள் ஒவ்வொரு வகுப்பாகப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.இப்படி ஒரு வகுப்பு முடிந்த நிலையில் அடுத்த வகுப்பிற்கு வரும் பயிற்சியாளர் அந்த வகுப்பில் உள்ள அனைவரையும் வருகைப் பதிவேட்டை வைத்து கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைப்பார் என்று எல்லோரும் பரபரப்பாகவும் பயந்த மனநிலையிலும் இருந்தோம்.
8.நானும் எனக்கு அருகின் அமர்ந்திருந்த நண்பரும் மிகவும் பயந்து கொண்டிருந்தோம் பாடமோ நாங்கள் ஏற்கனவே படித்திருந்தாலும் பயத்தில் பாதி மறந்து விட்டிருந்தது.வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு இறுக்கமான உணர்வு மூளை முழுவதும் இதில் இருந்து எப்படித் தப்பிக்கப் போகின்றோம் என்ற உணர்வு.எப்படியாவது நமது பேரை இவர் அழைக்கக் கூடாது என்று மன வேட்கையுடன் இருவரும் இருந்தோம்.எனது நண்பரின் பெயர் ஆங்கில எழுத்தில் என் என்றும் என் பெயர் வி என்றும் வரிசையில் இருந்தது.
9.அந்தத் தருணம் வந்தது பயிற்சியாளர் வருகைப் பதிவேட்டை எடுத்து வரிசைக் கிரமாமாக ஒவ்வொரு பெயராக அழைத்து ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு எந்தப் பதிலையும் தவறு என்று நிரூபனம் செய்து கொண்டே வந்தார் .ஒவ்வொரு பெயராகப் போய்க் கொண்டிருந்தது எனது நண்பரின் பெயர் அந்தத் தாளின் கடைசியாகவும் என்னுடைய பெயர் அடுத்த தாளின் கடைசியாகவும் இருந்தது.நாங்கள் இருவரும் வியர்வையின் உச்சத்தில் இருந்த்தொம் என்ன ஆச்சரியம் அந்தப் பயிற்சியாளர் முதல் பக்கத்தில் இருந்த என் அருகில் இருந்த எனது நண்பரின் பெயரையும் அடுத்த பக்கத்தில் இருந்த என்னுடைய பெயரையும் மட்டும் ஏனோ அழைக்கவேயில்லை.எங்கள் மன அழுத்தம் பயிற்சியாளரின் கண்ணை மறைத்தது.
10.அந்தப் பயிற்சி வகுப்பில் இருந்த அனைவரும் பயத்தில் தங்களது பெயர் வாசிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் அந்தப் பயத்தையும் வேண்டுகோளையும் நானும் எனது நண்பரும் மட்டும் முழு மூச்சுடன் கிரகித்து வெளியிட்டு அதன் விளைவுகளை அடைந்த்தோம்.இது ஒரு உதாரணம் இது போல பலப் பல நிலைகளில் பலப் பல சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும் பலப் பல முடிவுகள் யார் யார் எது எதைக் கிரகித்து எது எதை வெளியிடுகின்றோம் என்பதைக் கற்றுக் கொள்வோம்.
11.நான் இப்போதெல்லாம் இப்படிப்பட்ட பயிற்சி வகுப்புகளில் என் பெயரை யாரும் அழைக்கக் கூடாது என்று நினைப்பதில்லை நமக்குத் தெரிந்ததை நம்பிக்கையுடன் தைரியமாக எழுந்து கூறுவோம் என்பதனைக் கற்று வைத்திருக்கின்றேன் அது தவறாக இருந்தாலும் கூட கேட்பவர்கள் பார்ப்பது நமது பதிலை அல்ல நமது நம்பிக்கையான மனத்தை என்று.ஆகவே கவர்தலும் விலக்குதலும் நமக்குள் தான்.இந்தப் பதிவில் விலக்குதல் ஏதும் இருக்காதென்று நினைக்கின்றேன்.
No comments:
Post a Comment