இலக்குகளை அடைய 10 வழிகள்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம். இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான். மனிதன் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் திருப்பு முனை. அதேபோல் இலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம்பெற்றுவிடும்.
அதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் உங்கள் சக்திக்குத் தகுந்ததாகவும், உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றதாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்வது சிறப்பு. இப்படி இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை சிறிது சிறிதாக அடைய முயற்சி செய்யலாம்.
இங்கே இலக்குகளை வகுத்து அவற்றை அடைவதற்காகப் பயணம் மேற்கொள்ள 10 வழிகளைக் கூறுகிறேன் நிச்சயம் உங்களுக்கு அவை வழிகாட்டும் என்ற நம்பிக்கையில்.
வழி 1: இலக்கு நிர்ணயித்தல்
உங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள். இலக்குகளை எழுதிப்பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அப்படி மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவிகிதம் பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே உங்களது இலக்குகளையும் எழுதுங்கள். அப்படி நீங்கள் நிர்ணயிக்கும் இலக்கு அளவிடக் கூடியதாகவும், அடையக் கூடியதாகவும், குறிப்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் முடியக் கூடியதாகவும் இருக்கக் கூடிய “ஸ்மார்ட்”டான இலக்காக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
வழி 2: திட்டமிடல்
திட்டமிடத் தவறுவது, தோல்விக்குத் திட்டமிடுவதற்கு ஒப்பாகும். எனவே திட்டமிடல் அவசியம். அப்படி நீங்கள் இலக்குகளை அடைய வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படியும், எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையிலும் வகுத்துக் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு திட்டங்களை அமைத்துக் கொள்வதுடன், வகுத்த திட்டத்தை, எழுதி வைத்த இலக்கை மாதம் ஒருமுறை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே இருங்கள்.
வழி 2: காரணங்களை எழுதுங்கள்
உங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதி வையுங்கள். அவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் ஆழ்ந்து, நுட்பமாக சிந்திக்கும்போது அந்த இலக்குகள் மிகுந்த முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும். இப்படி எல்லா விதத்திலும் உங்களுடைய இலக்குகளைப் பூர்த்தி செய்பவையாகக் காரணங்கள் இருந்தால் மேற்கொண்டு சிறிதும் தாமதம் இன்றி வெற்றியை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.
வழி 4: நேர்மறை எண்ணங்கள்
நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கும் பொருட்டு பல புதிய நேர்மறை வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்கி எழுதி வையுங்கள். ‘என்னால் முடியும்’ (I Can) , ‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்’ (If not me then Who?), ‘ஒரு வாரத்திற்குள் முடித்துவிடுவேன்’ போன்ற நேர்மறையான எண்ணங்களை உள்ளத்தில் உருவாக்கிக் கொண்டு தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய பல புதிய நேர்மறையான வாக்கியங்களை உங்களுக்காகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி உருவாக்கும் வாக்கியங்கள் உங்களது தன்னம்பிக்கையைத் தூண்டச் செய்யுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
வழி 5: உருவகம் செய்யுங்கள்
எப்போதும் உங்கள் மனதில் தோன்றும் இலக்குகளை உருவகம் செய்யப் பழகிக்கொள்ளுங்கள். தெளிவாகவும், எளிமையாகவும் கூறினால் கனவு காணுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள். முடிவு செய்திருந்த உங்களது இலக்கை அடையும்வரை அந்த நினைப்பு மூச்சில் நிறைந்து, உயிரில் கலந்திருக்கும் படி உருவகம் செய்து கொள்ளுங்கள்.
வழி 6: செயல்படுதல் / அமல்படுத்துதல்
இதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்த காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடனே உங்களுடைய இலக்குகளை மனதில் அசைபோடுங்கள். உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளையும், தன்னம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளையும் சத்தமாக உரக்க உச்சரித்து இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள்.
இதை மட்டும் செய்துவிட்டு முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. நாள்தோறும், ஏதேனும் ஒரு திட்டம் அல்லது நடவடிக்கையைத் தெளிவாக வகுத்துச் செயல்படுத்துங்கள். மறக்காமல் அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் செய்து முடித்தபிறகு செயலில் இறங்குங்கள். இத்தகைய இலக்கை நோக்கிய பயணத்தில் எத்தகைய சூழ்நிலை வந்தாலும், அன்றைய இலக்கை அடைவதற்கான நடவடிக்கையில் இருந்து சிறிதும் பின்வாங்காதீர்கள்.
வழி 7: எதிர்மறை எண்ணங்களை நீக்குதல்
உங்கள் உள்ளத்தில் இருந்து எதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள். மனதில் ஏதாவது ஒரு ஓரத்தில் ஒளிந்திருக்கும் அவைகள் தான் உங்கள் இலக்குகளை அடையும் நோக்கத்தைச் சீர்குலைக்கும் தடைக்கற்கள்.
நல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் எதிர்மறை சிந்தனைகளே தடைகளாக இருப்பதால் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, இலக்கை அடைவதற்குத் துணை செய்யும் நேர்மறை வாக்கியங்களை எப்போதும் மனதில் அசைபோடுங்கள்.
வழி 8: சவால்களைச் சமாளி
உங்களுடைய இலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும். அப்போது அவற்றை நீங்கள் குறித்து வையுங்கள். அவற்றை நீங்கள் சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகளை, நடவடிக்கைகளைப் பதிவு செய்யுங்கள். அப்போது நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப்படுத்துவதுடன் அவற்றைத் தகர்க்க மேற்கொண்ட முயற்சிகளையும், பெற்ற வெற்றிகளையும் குறித்து வையுங்கள். ஏனென்றால் வரிசைப்படுத்தும் போது தான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை? அவற்றை சமாளித்துப் பெற்ற வெற்றிகள் எத்தனை என்பது தெரியும். அப்படி செய்தால் தான் சவால்களைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள், கிடைத்த வெற்றிகள் என்பதையெல்லாம் உணர்ந்து அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.
வழி 9: நண்பர்களைத் தேர்வு செய்
ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்கை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம் தேவைப்படுவார்கள். நண்பர்கள் தான் இலக்கை நோக்கிச் செல்வதற்கு உறுதுணையாக இருப்பார்கள். எனவே உங்களுக்கு யார் உந்துதலாக இருக்கிறார்களோ அத்தகைய நண்பர்கள் வட்டாரத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியுமானால், இலக்குகளை அடைவதற்கு மிகச் சரியான வழிகாட்டியான அவர்களைத் தேடிச்சென்று நட்பு பாராட்டுங்கள். உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணியாக இருக்கும் உங்களின் ஆசிரியர், சகோதர சகோதரி, அண்டை வீட்டார் யாராகவும் இருக்கலாம். அவர்களை உங்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டுங்கள்.
வழி 10: பாராட்டிக் கொள்ளுங்கள்
இலக்கு நோக்கிய பயணத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சிறிய வெற்றி கிடைக்கிறதா? அதற்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். பெரிய வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில் இத்தகைய சின்னச்சின்ன வெற்றிகள் தான் உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். எனவே சிறுசிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடைய முயற்சி செய்யுங்கள். சிறிய வெற்றி கிடைத்தாலும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன் இலக்குகளை நோக்கி ஓடும் ஓட்டத்தை வேகப்படுத்தும்.
மேற்கூறிய 10 வழிகளில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் இலக்கு உங்களுக்கு அச்சத்தை, நடுக்கத்தை ஏற்படுத்தி உங்களை சோர்வடையச் செய்து மூலையில் முடங்கச் செய்துவிடக் கூடியதாக இருக்கக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். நீங்கள் வகுத்த இலக்கு உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கினால் அவற்றைச் சிறிதும் தயங்காமல் தூக்கியெறியுங்கள். அடுத்த இலக்கைத் தேர்வு செய்து பயணத்தைத் தொடருங்கள். ஏனென்றால் சாதனை உலையில் எரிபொருள்களே இலக்குகள் தான்.
No comments:
Post a Comment