வல்லவனுக்கு வல்லவன்!
அனுபவமிக்க செஸ் உலக ஜாம்பவானை நார்வே நாட்டிலிருந்து வந்த 22 வயதேயான சின்னப்பையன் வீழ்த்தியிருக்கிறான். யார் இந்த மேக்னஸ் கார்ல்ஸன்? விஸ்வநாதன் ஆனந்தை எப்படி வென்றான்?
மேக்னஸ் கார்ல்ஸனுக்கு அப்போது வயது ஐந்து. அவனுடைய அப்பா ஹென்ரிக் தன் மகனையும் இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தன் நண்பர்களின் குடும்பத்தோடு நார்வேயின் வடக்குப் பகுதியான ஜூவாசிட்டா என்கிற இடத்துக்கு சுற்றுலாவுக்குக் கிளம்பினர்.
அங்குதான் நார்வேயின் மிக உயர மலைச்சிகரமான ‘கல்தோபிக்கன்’ இருக்கிறது. அதன் உயரம் 2,469 மீட்டர். அதில் ட்ரெக்கிங் செல்வது என்று முடிவாகிறது. ஆனால் வனப்பகுதிக் காவலர்கள் ஐந்து வயது கார்ல்ஸனை மலையேற அனுமதிக்க முடியாது, ஆபத்தானது என மறுத்துவிட்டனர். அப்பாவின் நண்பர்களும் அவருடைய பையன்களும் மட்டும் மலையேறத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் கார்ல்ஸன் அடம்பிடித்தான். ‘அப்பா! நான் அந்தப் பையன்கள் முன்னால் தோற்றுப்போனவனாக நிற்க முடியாது (LOSER). நான் போயே ஆகணும்’ என்று கத்தி கூப்பாடு போடுகிறான். வனப்பகுதிக் காவலர்களுக்கே ஒருமாதிரி ஆகிவிடுகிறது.
‘வேண்டுமானால் மாற்றுவழிப்பாதை இருக்கிறது. வாகனங்கள் செல்லும் சாலை அது. அதில் ஏறினால் ஒரு ஐந்து கிலோமீட்டர் அதிகமாக நடக்க வேண்டியிருக்கும் பரவாயில்லையா?’ என்று வனப்பகுதிக் காவலர்கள் கூற... உடனே கார்ல்ஸன் கிளம்பிவிட்டான்.
அப்பாவை விட வேக வேகமாக ஓட ஆரம்பித்தான். அவனோடு சுற்றுலா வந்த அவனுடைய பக்கத்து வீட்டு நண்பர்களுக்கு முன்பே மலை உச்சியை அடைய வேண்டும் என்கிற வேகம். ஆவேசமாக நடக்க ஆரம்பிக்க... அப்பாவுக்கும் தங்கைகளுக்கும் மூச்சு வாங்குகிறது. மலை மேல் ஏற ஏற குளிர்வேறு உதறல் எடுக்கிறது. பெய்கிற பனி, எலும்புகளுக்குள் ஊடுருவி ஊசியால் குத்துவதைப்போல வலிக்கிறது. உட்கார்ந்து உட்கார்ந்துதான் மலையேற முடிகிறது.
கார்ல்ஸன் வேக வேகமாக முன்னேறுகிறான். அவனுக்கு குளிர் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுக்கு கால்கள் வலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அப்பாவையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு அவன் மட்டும் தன்னந்தனியாக மலை உச்சியை அடைகிறான். அங்கு இன்னமும் அந்தப் பையன்கள் வந்து சேர்ந்திருக்கவில்லை. அப்போதுதான் அந்த பிஞ்சு முகத்தில் புன்னகை பூக்கிறது. பின்னாலேயே பதறிப்போய் அவனுடைய தந்தையும் சகோதரிகளும் வந்து பார்க்கிறார்கள்.
உச்சியில் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘நான் ஜெயிச்சிட்டேன்... ஜெயிச்சிட்டேன்...’ என்று கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கிறான். அது அன்றைய தினம் நார்வே முழுக்க எதிரொலித்திருக்கும்! இது நடந்து 18 ஆண்டுகள் கடந்து விட்டன.
சென்னையில் பத்து சுற்றுகள் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த்தை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை இப்போது வென்று விட்டார். வெற்றி பெற்ற தினம் அப்படியே உடையைக்கூட கழற்றாமல் கோட்டு சூட்டோடு நீச்சல் குளத்தில் குதித்து துள்ளித் துள்ளி ஆட்டம்போடுகிறார், ‘நான் ஜெயிச்சுட்டேன்... நான் ஜெயிச்சுட்டேன்...’ கார்ல்ஸன்.
அதை போட்டோ எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறார் 23 வயது மேக்னஸ் கார்ல்ஸன்!
‘இறுதியாக சாம்பியனாகிவிட்டேன்... அனைவருடைய ஆதரவிற்கும் நன்றி!’ என்கிற வாசகங்களோடு.
கார்ல்ஸனிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேகம் இத்தனை ஆண்டுகளில் துளிகூட குறைந்ததில்லை. அதுதான் அவனை இத்தனை விரைவாக இவ்வளவு உயர்ந்த இடத்தை எட்ட வைத்திருக்கிறது" என்று நெகிழ்ச்சியோடு பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார், ஹென்ட்ரிக் கார்ல்ஸன். மேக்னஸ் கார்ல்ஸனின் தந்தை.
இந்தச் சின்னப்பையன் விஸ்வநாதன் ஆனந்த்தை தோற்கடிப்பான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லோருக்குமே அதிர்ச்சிதான். சிலரால் நம்பவும்கூட முடியவில்லை. ஒருமுறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை தோற்கடித்தான். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த்தால் அந்தப் பையனை ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. 1991-இல் தொடங்கி 22 ஆண்டுகளில், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஓர் ஆட்டத்தில் கூட வெற்றி பெறாதது ஆனந்த்துக்கு இதுவே முதல் முறை.
முகத்தில் இன்னமும் குழந்தைத் தன்மை ஒட்டிக்கொண்டிருக்கிற கார்ல்ஸன் 13 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். 19 வயதில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர். இதோ 22 வயதில் உலக சாம்பியன். மேக்னஸ் கார்ல்ஸனின் வெற்றி, ஹாரிபாட்டர் போன்ற ஃபேன்டஸி கதைகள்போல் வந்தும் இருக்கின்றன!
‘செஸ் விளையாட்டின் மோசார்ட் (MOZART OF CHESS)’ என்று கார்ல்ஸனை வர்ணிக்கிறார்கள். ‘நவீன கணினி யுகத்தின் வார்ப்பு’ என்கிறார்கள். ‘எந்திரம் (MACHINE)’ என்கிறார்கள்.
கார்ல்ஸனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது பதினைந்து ஆண்டுகால அர்ப்பணிப்பு.
செஸ்ஸை மட்டுமே சுவாசித்து வாழ்ந்த ஒரு நார்வே சிறுவனின் அபாரமான உழைப்பு.
மேக்னஸ் கார்ல்ஸன் பிறக்கும்போதே கையில் செஸ் கான்களை பிடித்துக் கொண்டு வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி நார்வேயில் ஹென்ரிக் கார்ல்ஸன், சிர்குன் கார்ல்ஸன் என்கிற தம்பதிக்குப் பிறந்த சாதாரணப் பையன்தான். குட்டிப்பையனாக இருக்கும்போதிருந்தே அவனுக்கு நல்ல நினைவாற்றல் இருந்தது. 10 வயதுப் பையன்கள் பண்ணுகிற புதிர்களை ஐந்து வயதிலேயே செய்து அசத்தினான்.
ஐந்து வயதாக இருக்கும்போதுதான் அவனுடைய தந்தை அவனுக்கு செஸ் ஆட்டத்தை கற்றுக்கொடுத்தார். செஸ் போர்டில் ஒவ்வொரு காய்களை தனித்தனியாக வைத்து அது எப்படி நகரும், அதற்கு என்ன சக்தி இருக்கிறது, அதை வைத்து எப்படி எல்லாம் எதிரிகளின் காய்களை வெட்டலாம் என்பதை பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். கார்ல்ஸன் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் அவனுக்கு அதில் அதிக விருப்பமில்லை. அவனுக்கு கணிதமும் புதிர்களும்தான் பிடித்திருந்தன.
சர்வதேச அளவில் புள்ளிகள் பெற்ற சுமாரான செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்ஸனின் தந்தை ஹென்ட்ரிக். ஆனாலும் தன் பையனுக்கு செஸ்ஸில் ஆர்வமில்லை என்று தெரிந்ததும் அவனை அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். ‘செஸ் ஆடு.. செஸ் ஆடு...’ என எப்போதுமே அவர் வற்புத்தியதில்லை. கார்ல்ஸனுக்கு கால்பந்தாட்டமும் பனிச்சறுக்கு விளையாட்டும்தான் பிடித்திருந்தன. அவற்றில் ஆர்வத்தோடு பங்கேற்றான்.
‘மிகவும் இளம் வயதிலேயே அவனுக்கு மிகச்சிறந்த நினைவாற்றல் வாய்த்திருந்தது. அதுதான் பிற்காலத்தில் அவனை செஸ் உலகின் சக்ரவர்த்தியாக உயர வைக்கவும் காரணமாக இருந்தது’ என்று தன்னுடைய நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார், கார்ல்ஸனின் ஆரம்பகாலப் பயிற்சியாளராக இருந்த அடெஸ்டின்.
அவன் ஐந்து வயதிலேயே உலக நாடுகளின் தலைநகரங்கள், கொடிகள் என அனைத்தையும் மனப்பாடமாகச் சொல்லும் திறனைப் பெற்றிருந்தான். நார்வேயின் 430 முனிசிபாலிட்டிகளின் பெயரையும் எப்படிப் கேட்டாலும் சரியாகச் சொல்லி பல பரிசுகளையும் வென்றுள்ளான்.
இப்படிப்பட்ட ஒரு நினைவாற்றல் பல குழந்தைகளுக்கும் இருப்பதுதான். ஆனால் அதை செஸ் மாதிரியான விளையாட்டில் மடைமாற்றி விட்டால் என்னாகும் என்பதற்கு மேக்னஸ் கார்ல்ஸன் நல்ல உதாரணம்" என்கிறார் அடெஸ்டின்.
கார்ல்ஸனுக்கு ஏழு வயதாகும்போது, திடீரென தானாகவே செஸ் விளையாட்டில் ஆர்வமாகி விளையாட ஆரம்பித்தான். டென்மார்க்கின் கிராண்ட் மாஸ்டரான பென்ட் லார்சனின், ‘பைன்ட் தி பிளான்’ என்ற செஸ் குறித்த புத்தகத்தைப் படித்த பிறகுதான் செஸ்ஸின் மீது மிகப்பெரிய ஆர்வம் பிறந்ததாக ஒரு பேட்டியில் கார்ல்ஸன் குறிப்பிடுகிறார்.
இந்த முறையும் கார்ல்ஸனின் தந்தை அவனுக்கு எந்த அழுத்ததையும் கொடுக்கவில்லை. அவனை அவன் போக்கிலேயே விட்டுப்பிடித்தார். அவனாகவே தன் சகோதரிகளோடு விளையாடினான். அவர்களை வென்றான். பின் ஆர்வத்தோடு செஸ் குறித்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினான்.
எல்லோரும் படிப்பதுபோல அவன் செஸ் புத்தகங்களைப் படிக்கவில்லை. அவன் அதில் உள்ள ஆட்டங்களையும் அதன் நுணுக்கங்களையும் தன் மனதுக்குள் விளையாடிப் பார்த்தான். தனக்குள்ளாகவே அவனுடைய ஆட்டத்திறனை வளர்த்துக்கொண்டான். அவனுடைய ஷெல்பில் இருந்த செஸ் விளையாட்டு குறித்த 500 புத்தகங்களிலும் பல ஆயிரம் பக்கங்களில் நிறைந்திருந்த லட்சக்கணக்கான ஆட்டங்களும் அவனுக்கு அத்துப்படி! அவன் செஸ் விளையாட போர்டோ, கான்களோ தேவையே இல்லை. அவன் தனக்குள்ளாகவே விளையாடுவான்" என்று தன்னுடைய மகனைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ஹென்ட்ரிக்.
1999-இல் நடைபெற்ற நார்வே செஸ் சாம்பியன்ஷிப்தான் கார்ல்ஸனின் முதல் போட்டி. அப்போது அவருக்கு வயது 8. 11 சுற்றுகளைக் கொண்ட அந்தப் போட்டியில் கார்ல்ஸன் 6.5 புள்ளிகளைப் பெற்றார். பின்னர்தான் முன்னணி செஸ் வீரராக இருந்த அடெஸ்டின் நடத்திய நார்வேயின் எலைட் ஸ்போர்ட் செஸ் கல்லூரியில் பயிற்சி பெற்றார் கார்ல்ஸன்.
ஒன்பது வயதில் நார்வேயின் 11 வயதிற்குட்பட்டோருக்கான செஸ் ஆட்டத்தை வென்றபின் தினமும் மூன்று மணிநேரம் செஸ்ஸுக்காகவே ஒதுக்க ஆரம்பித்தான் கார்ல்ஸன்.
ஒரு போர்டை எடுத்து வைத்துக் கொண்டு எதிரில் யாருமின்றி தானாகவே விளையாடுவான். ஒரு சமயம் வெள்ளை பலமானதாகவும், ஒரு சமயம் கறுப்புக்காய்கள் பலமானதாகவும் இருக்கும்படி இரண்டும் இடங்களிலும் மாறிமாறி ஆடத்தொடங்குவான்.
செஸ் குறித்த புத்தகங்களை நூலகங்களில் தேடித் தேடி வாசிப்பான். அப்பாவை நச்சரித்து புத்தகங்களை வாங்கித்தரச் சொல்லுவான்.
படித்த செஸ் ஆட்டங்களை மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டே இருப்பான். உலகின் மிக முக்கியமான அத்தனை ஆட்டங்களையும் தோற்றுப்போனவரின் இடத்தில் இருந்து, ‘ஏன் தோற்றார்... என்ன தவறு?’ என்பதை ஆராய்ந்துகொண்டே இருப்பான். அதுதான் அவனுடைய பலமானது. எதிரிகளை எப்படியெல்லாம் தவறிழைக்கச் செய்ய வைப்பது என்பதை கணக்கிடத்தொடங்கினான்.
கணினி கார்ல்ஸனின் செஸ் வாழ்க்கையில் மிகமுக்கியப் பங்காற்றியது. அவன் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான செஸ் ஆட்டங்களை கணினியில் வைத்திருந்தான். FRITZ மற்றும் RYBKA போன்ற அதிநவீன கணினி மென்பொருட்களோடு பயிற்சி செய்தான். இந்த மென்பொருட்கள் ஆனந்து, கார்போவ், காஸ்பரோவுக்கே தண்ணிகாட்டின எந்திரன்கள்! அவற்றோடு மணிக்கணக்கில் மல்லுக்கட்டுவான்.
உங்கள் வீட்டில் நிறைய செஸ் போர்டு இருக்குமா அண்ணா? என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்திருந்த கார்ல்ஸனை நம்மூர் செஸ் ஆட்டக்காரப் பையன்கள் கேட்டபோது, கார்ல்சன் சிரித்துக்கொண்டே சொன்னார்: ‘என்னுடைய செஸ்போர்டுகளும் காய்ன்களும் என் தலைக்குள் இருக்கிறது!’
2000-இல் நார்வேயின் கிராண்ட் மாஸ்டரான ரிங்டால் ஹன்சனை கார்ல்ஸனுக்கு அறிமுகப்படுத்தினார் அடெஸ்டின். ஹன்சனுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட கார்ல்ஸன் ஓர் ஆண்டிற்குள்ளேயே 1000 ரேட்டிங் புள்ளிகளுக்கு மேல் பெற்றார்.
2000 முதல் 2002 வரை ஏறத்தாழ 300 ரேட்டிங் போட்டிகளிலும், ஏராளமான பிளிட்ஸ் செஸ் போட்டிகளிலும், வேறு சில போட்டிகளிலும் பங்கேற்ற கார்ல்ஸன், 2003-இல் இண்டர்நேஷனல் மாஸ்டருக்கான 3 நார்ம்ஸ்களையும் பெற்று அதே ஆண்டில் இண்டர்நேஷனல் மாஸ்டராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அதன்பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்த கார்ல்ஸன், 2004-இல் முன்னாள் உலக சாம்பியனான அனாடோலி கார்போவை தோற்கடித்து செஸ் உலகையே அதிர்ச்சியடைய வைத்தார். அதே ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு வயது 13. இதன்மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002-ஆம் ஆண்டு 12 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் கார்ல்ஸன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றபின், தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு பேசுகிறார்கள். அப்போது கார்ல்ஸனின் பயிற்சியாளர் அக்டெஸ்டின், ‘இதோ இந்தப் பையனுக்கு இதுவரை பதிவான செஸ் உலகின் மிக முக்கியமான போட்டியின் அத்தனை காய்நகர்த்தல்களும் மிக நன்றாகத் தெரியும்’ என்று சொல்ல...
உடனே ஒரு குசும்புக்காரப் பத்திரிகையாளர் அவசரமாக தனக்கு நன்கு தெரிந்த காய்நகர்த்தல்களை எழுதி, ‘இது யார் விளையாடியது... எத்தனையாவது ஆண்டு சொல்லு பார்ப்போம் தம்பி?’ என்று கார்ல்ஸனிடம் நீட்ட... கார்ல்ஸன் தாமதிக்கவே இல்லை.
‘இது க்ராம்னிக்-எல்வ்னிக் இருவரும் ஆடியது, வியன்னாவில் 1997-ஆம் ஆண்டு நடந்த ஆட்டத்தின் கடைசிப்பகுதி. இதில் முப்பதாவது நகர்த்தலில் எல்வ்னி யானையை இப்படி நகர்த்தியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்’ என்று கடகடவென கூகுளில் சர்ச் பட்டனை அமுக்கினால் தகவல்களைக் கொட்டுமே... அப்படி பொழிய ஆரம்பித்துவிட்டான்.
அங்கிருந்த அத்தனை பத்திரிகையாளர்களும் அப்படியே ஸ்தம்பித்துப்போய் உறைந்துபோய் நின்றுவிட்டார்கள். மூக்கறுபட்ட அந்தப் பத்திரிகையாளர், ‘நீங்க சொன்னதுல ஒரு தப்பிருக்கு. அது 1997-ஆம் ஆண்டல்ல, 1996-ஆம் ஆண்டு தம்பி’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டார்!
மேக்னஸ் கார்ல்ஸனின் வெற்றி ரகசியங்களில் அவருடைய நினைவாற்றல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அவருடைய மூளையில் உலகின் மிக முக்கியமான இருபதாயிரத்திற்கும் அதிகமான காய்நகர்த்தல்கள் பதிவாகியிருக்கின்றன" என்கிறார், இங்கிலாந்து கிராண்ட் மாஸ்டரான நீஜெல் ஷார்ட்.
எட்டு வயதில் தன்னுடைய தந்தையை தோற்கடித்த பின் ஒவ்வொருவராக தோற்கடிக்க ஆரம்பித்தான். தன்னுடைய ஆட்டத்திறனை தானாகவே வளர்க்கத் தொடங்கினான். பத்து வயதில் இனி செஸ்தான் என்று அவனாக முடிவெடுத்து முழுநேர கால்பந்தாட்டம் மற்றும் பனிச் சறுக்காட்டத்தையும் கைவிட்டான். பனிச் சறுக்கு விளையாட்டில் பத்து வயதிலேயே 21 மீட்டர்கள் உயரம் பறந்து சாதனை படைத்திருந்தான் குட்டிப்பையனான மேக்னஸ் கார்ல்ஸன்.
சரமாரியாக வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த கார்ல்ஸனை அவனுடைய தந்தை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தார். கார்ல்ஸனுக்கு 16 வயதாக இருந்தபோது தன்னுடைய பள்ளிப் படிப்பைக் கைவிட்டுவிட்டு முழுநேரமும் செஸ் ஆடப்போவதாகச் சொன்னான்! அவனுடைய அப்பாவுக்கு முதலில் அதிர்ச்சிதான்! எந்தத் தகப்பன்தான் ஒப்புக்கொள்வார்.
ஆனால் ஹென்ட்ரிக் உடனே அதற்கு ஒப்புக்கொண்டார். எந்த மறுப்பையும் சொல்லவில்லை. அது கார்ல்ஸன் தன்னுடைய செஸ்ஸில் மட்டுமே கவனத்தைக் குவிக்க உதவியது. அவன் அதற்குப் பிறகு முழுநேரமும் செஸ்ஸை மட்டும் சுவாசித்து உண்டு உறங்கி செஸ்ஸோடு வாழ உதவியது (சச்சின் தெண்டுல்கர்கூட தன் 16 வயதில் படிப்பைக் கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது).
2004-இல் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமை கார்ல்ஸனின் வசமானது. 2004- உலக செஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனிடம் தோல்வி கண்ட கார்ல்ஸன், பின்னர் உலக செஸ்ஸில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.
கார்ல்ஸன் குறித்துப் பேசும்போது, ’’NETTLESOMENESS’ என்கிற சொல் செஸ் வட்டாரங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதுதான் அவருடைய வெற்றி ரகசியம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதென்ன நெட்டில் சம்நஸ்?
அமெரிக்காவின் நியூயார்க் யுனிவர்சிட்டியை சேர்ந்த கென்னத் ரீகன் என்கிற ஆராய்ச்சியாளர் செஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் யுக்திகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவர்தான் மேக்னஸ் கார்ல்ஸனின் விளையாட்டு யுக்தியை அல்லது விளையாடும் குணத்தை நெட்டில்சம்னஸ் என்கிற சொல்லால் விவரிக்கிறார்.
இன்று கணினிகளின் உதவியோடு எப்படிப்பட்ட செஸ் ஆட்டத்தையும் எளிதில் அனலைஸ் செய்து பிரித்து மேய்ந்துவிட இயலும். அப்படி ஆராயும்போது எதிரில் ஆடுபவரை தவறு செய்யத் தூண்டும் வகையில் ஆடுவது ஒரு பாணி! அது இயல்பிலேயே கார்ல்ஸனுக்கு மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவரை எதிர்த்து ஆடுபவருக்கு அழுத்தம் கொடுத்து தன்னுடைய திறமையான காய் நகர்த்தலால் தவறிழைக்க வைப்பதில் வல்லவராக இருக்கிறார். ஆனந்த் கூட தன்னுடைய ஐந்தாவது ஆட்டத்தில் செய்த மிகச்சிறிய தவறுதான் ஒட்டுமொத்தமான அவருடைய தோல்விக்கு வித்திட்டது!
கார்ல்ஸன், தான் விளையாடும்போது மூளைக்குள் காய் நகர்த்தல்ளை கன்னாபின்னாவென்று போட்டு கணக்கிடுவதில்லை என்கிறார். அது தன்னுடைய கவனத்தை சிதறடிக்கும் என்கிறார்.
என்னுடைய உள்ளுணர்வின் அடிப்படையிலேயே காய்களை நகர்த்துவேன். பார்க்கும்போதே இது நல்ல பொசிஸன், இது தவறானது என்பதை உணர்வேன்.எனக்கு எது சரியாகத் தோன்றுகிறதோ அதைச் செய்வேன். அவ்வளவுதான்" என்று இதுகுறித்துக் கேட்டபோது புன்னகையோடு கூறுகிறார் கார்ல்ஸன்!
ஆனால் இந்த உள்ளுணர்வு போர்டில் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான தவறுகளை தன்னுடைய மூளையில் பதிவு செய்துவைத்திருப்பதால் இயல்பாக உண்டாகக்கூடியது என்கிறார்கள் செஸ் வல்லுநர்கள். அதாவது ஏதாவது ஒன்றில் இடித்து தடுக்கி விழும்போது நம்முடைய உள்ளுணர்வினால் எதையாவது பிடித்து நிற்க முயல்வோமே அதுபோல... இது கடுமையான பயிற்சி மற்றும் ஆழ்ந்த தேடலினால் உருவாவது என்கிறார்கள். பயிற்சியின் போது நிறைய தவறுகளை செய்து பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்கிற முறை இது!
அதுமட்டுமல்ல, அந்தக்காலம் போல மாறி மாறி காய்களை வீழ்த்தி திடீரென எங்கிருந்தோ ஒரு ஒளி பிறந்து வெற்றி பெறுகிற ஆட்டத்தையெல்லாம் கார்ல்ஸன் மாற்றிவிட்டார். அவர் எதிரிக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்துகளை தொடர்ந்து கொடுத்து எதிரி தள்ளாட ஆரம்பிக்கும்போது வீழ்த்தி வெற்றிபெறுகிறார், அவருடைய ஆட்டம் குத்துச் சண்டையைப் போன்றதுதான்" என்கிறார் அடெஸ்டின்.
2009-இல் நடைபெற்ற நான்ஜிங் பியர்ல் ஸ்பிரிங் போட்டியின்போது 2800 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டினார். இதன்மூலம் செஸ் வரலாற்றில் 2800 ரேட்டிங் புள்ளிகளைத் தொட்ட 5-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
2010- ஜனவரியில் உலக செஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கிடம் இருந்து பறித்தார். கடந்த ஜனவரியில் 2861 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை எட்டியதன் மூலம் செஸ் வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை எட்டிய வீரர் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரரானார். இதன்மூலம் அதிக இ.எல்.ஓ. புள்ளிகளை (2851) வைத்திருந்த முன்னாள் உலக சாம்பியனான ரஷிய வீரர் கேரி காஸ்பரோவின் 13 ஆண்டுகால சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்தார் கார்ல்ஸன்.
தன்னுடைய ஃபிட்னஸ்ஸில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் தன்னுடைய உடல் மொழியில் தனித்துவம் கொண்டவராகவும் இருக்க விரும்புகிறார் கார்ல்ஸன். அது செஸ் ஆட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிற ஒன்றாக இருக்கும் என்பது அவருடைய கோட்பாடு. அதற்காக தினமும் உடற்பயிற்சிகள் மேற்கொள்வதிலும் உடலை கச்சிதமாகவும் கம்பீரமாகவும் வைத்துக்கொள்வதிலும் அதிக கவனத்தை செலுத்துகிறார்.
சென்னைக்கு போட்டிக்காக வரும்போது தன்னுடைய சமையல்காரரையும் கூடவே அழைத்து வந்தார். இந்த ஊர் உணவு, உடலை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஓர் ஏற்பாடு!
ட்விட்டர், ஃபேஸ்புக்கை தொடர்ந்து நிறையவே பயன்படுத்துகிறார் கார்ல்ஸன். தொடர்ந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்வம் காட்டுகிறார். இப்போது கால்பந்தாட்டத்திலும் கால்ஃபிலும் ஈடுபடுகிறார். இரவு கேளிக்கை விடுதிகளில் உற்சாக ஆட்டம் போடுகிறார். நிறைய சாகஸங்களில் ஆர்வமாக இருக்கிறார். தன்னுடைய புற அழகைப் பேணுவதிலும் புதுமைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார். இங்கிலாந்தின் பெண்கள் வார இதழ் ஒன்று 2013-ன் கவர்ச்சிகரமான ஆண் என இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது.
எப்போதும் அமைதியே உருவமாக, சாந்தபாந்தமாக, சிந்தித்துக் கொண்டேயிருக்கிற செஸ் வீரர்கள் போல இல்லாமல் இதுவரை செஸ் உலகம் பார்த்திராத புதுமாதிரியான வார்ப்பாக கார்ல்ஸன் இருக்கிறார். அவர் நவீன யுகத்தின் சிக்ஸ்பேக் + டச்போன் இளைஞர்களை பிரதிபலிக்கிறார். அந்தப் புதிய போக்கினை அவருடைய விளையாட்டிலும் வாழ்க்கையிலும் அதை இயல்பாகவே பார்க்க முடிகிறது.
அடுத்த இருபதாண்டுகள் நிச்சயமாக கார்ல்ஸன் ஆதிக்கம் செலுத்துவார் என்று இப்போதே ஆருடம் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
இளம் பெற்றோருக்கு என்னுடைய அறிவுரை ஒன்றே ஒன்றுதான்... உங்கள் குழந்தைகளை இதுதான் செய்ய வேண்டும் என்று எதையுமே திணிக்காதீர்கள். அவர்களை தங்களுடைய ஆர்வம் எதில் என்பதைக் கண்டறிய கொஞ்சம் காலம் கொடுங்கள். அதற்கான வாய்ப்புகளை வீட்டிலேயே உருவாக்குங்கள். அவர்களாகவே அதைக் கண்டறிந்து மேலெழும்பி வருவார்கள். அப்போது முழு மனதோடு ஊக்கப்படுத்துங்கள். உங்கள் உயிரையும் கொடுத்து அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுங்கள். அதுவே போதுமானது" என்று தன்னுடைய மகன் வெற்றிபெற்ற பின்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் கார்ல்ஸனின் அப்பா ஹென்ரிக். இதுதான் கார்ல்ஸன் மாதிரியான ஒரு சாம்பியனின் வெற்றிக்கான உண்மையான காரணமாக இருக்க முடியும். எல்லா சாம்பியன்களும் வீட்டிலிருந்துதான் உருவாகிறார்கள். அதற்கான சூழலை அமைத்துக் கொடுத்தால் இங்கேயும் கோடிக்கணக்கான சாம்பியன்களை நம்மால் உருவாக்க முடியும்.
அவன் தன்னுடைய செஸ் பயணத்தை முடித்துக் கொள்ளும்போது, நவீன செஸ் உலகத்தின் போக்கை, ஆட்டங்களின் பாணியையே புரட்டிப் போட்டிருப்பான்!" என்று புகழாரம் சூட்டுகிறார் கார்ல்ஸனின் முன்னாள் பயிற்சியாளரும் செஸ் உலகின் மிக முக்கியமான வீரருமான காரி காஸ்பரோவ். கார்ல்ஸனின் ஆட்டத்தை தொடர்ந்து பார்த்தவர்கள் யாருமே அதை கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்வார்கள்.
நவம்பர் 30-ஆம் தேதி தன்னுடைய 23-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மேக்னஸ் கார்ல்ஸன். அவருக்கு, ‘வாழ்த்துகள்!
No comments:
Post a Comment