Tuesday, December 10, 2013

சமநிலை மனம் !!! நாளை நமக்காக !!!

சமநிலை மனம் !!!  நாளை நமக்காக !!!
  
உலக அளவில் நடைபெறும் போட்டிகளைத் தொலைக் காட்சியில் பாருங்கள். அது அழகிப் போட்டியாக இருக்கட்டும்; விளையாட்டுப் போட்டிகளாக இருக்கட்டும். நம் இந்தியர்கள் வெற்றி பெறும்போது, மிகப் பெரிய அளவில் குதித்துக் கும்மாளம் போடமாட்டார்கள். சந்தோஷம் இருக்கும்; ஆனால், அது அளவாக, மிதமாக இருக்கும். அடுத்தவர்களைத் தோல்வியுறச் செய்துவிட்டோம் என்ற ஆக்ரோஷம் அதில் இருக்காது.

அதுமட்டுமா? வெற்றிப் பெருமிதத்தில் அடுத்தவர்களைப் பார்த்து ஒருபோதும் கொக்கரிக்க மாட்டார்கள். வெற்றி தோல்வி குறித்து மகிழ்ச்சியோ துயரமோ எது இருந்தாலும், உடனே அந்த உணர்வில் இருந்து வெளிவந்து, சகஜமாகப் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அதுவே, வெளிதேசத்தவர்கள் வெற்றி அடையும்போது கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் வெற்றிகளை ஆரவாரத்துடன் அவரவர்களே கொண்டாடிக் கொள்வார்கள். உணர்ச்சிவசப்பட்டுக் கூச்சலிடுவார்கள். காற்றில் குதித்துத் தங்களின் தாங்கமாட்டாத ஆனந்தத்தை வெளிப்படுத்துவார்கள். தங்கள் மனத்தைச் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை அவர்களின் செயல்பாடுகளில் அதிகம் காண இயலாது.

வெற்றியாலும் தோல்வியாலும் பாதிக்கப்படாத சமநிலை மனத்தை அடைவது, இந்தியர்களுக்கு எளிதாக இருக்கிறது. அது நம் ரத்தத்தில் இயல்பாகவே ஊறியிருக்கிறது.

இந்தியர்கள் மற்ற நாட்டினரைவிடக் கூடுதல் நிம்மதியுடன் வாழ்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு அவர்களின் இந்த மனப்போக்கு முக்கியக் காரணம். நம் கலாசாரம் இந்திய மனங்களை அப்படிப் பழக்கி வைத்திருக்கிறது. இயற்கையிலேயே இத்தகைய மனப்பக்குவம் அமைய நாம் எத்தனை பேறு செய்திருக்க வேண்டும்!

ஆனால், இன்றைய நிலை என்ன? தேர்வில் தோற்றவர்கள், காதலில் தோற்றவர்கள் எனத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை இந்தியர்களிடையேயும் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.  

முன்பெல்லாம் தேர்வில் தோற்றவர்கள், நாம் மேலும் முயற்சி செய்ய வேண்டும் என சமாதானம் அடைவார்கள். காதலில் தோற்றவர்கள் 'இது இறைவன் தீர்ப்பு’ என்று மனம் தேறிவிடுவார்கள். இத்தகைய மனப்போக்கு இப்போது மெள்ள மெள்ள மாறிவருகிறது.

மனம் சமநிலைப் பக்குவத்தை அடையும் வகையில் நம் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டியது அவசியம்.

தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்காத கல்வி என்ன கல்வி? வெற்றிக்கு வழிசொல்வது மட்டுமே கல்வியல்ல; தோல்வி வந்தால் அதை எவ்விதம் தாங்குவது எனச் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் கல்விதானே?

தன்னம்பிக்கையை வளர்க்காத அறிவு என்ன அறிவு? விவேகானந்தர் பிறந்த இந்த 150-ஆம் ஆண்டிலிருந்தேனும் விவேக சிந்தனைகளை மாணவர்களுக்கு போதிக்கலாமே? வாழ்க்கையை சமநிலை மனத்தோடு எவ்விதம் எதிர்கொள்வது என்ற பக்குவத்தை அவர்களிடம் தோற்றுவிக்கலாமே?

வெற்றியைத் தலைக்குக் கொண்டுபோகக் கூடாது என்றும், அப்படிக் கொண்டு போனால் தலைக்கனம் ஏறிவிடும் என்றும் சொல்வதுண்டு. அதுபோலவே, தோல்வியை இதயத்துக்குக் கொண்டுபோகக் கூடாது; அப்படிக் கொண்டுபோனால் மனச்சோர்வு வந்துவிடும்!

அமைதியாக மனச்சாந்தியுடன் வாழ வேண்டுமானால், வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்று கீதை சொன்னதன் உட்பொருள் இதுதான். பலன் எதுவானால் என்ன? நம் ஈடுபாட்டில் ஒரு குறைவும் இல்லாமல் செயலைச் செய்துவிட வேண்டும். பிறகு, அதற்கான பலனைத் தருவது கடவுளின் பொறுப்பு என விட்டுவிட வேண்டும். அப்படி விட்டு விட்டால், பலன் என்னவாகுமோ என்ற படபடப்பு ஏற்படாது; ரத்த அழுத்தம் எகிறாது.  

வெற்றியில் சமநிலை குன்றாமல் இருப்பதுதான் தொடர்ந்து வெற்றிபெறும் வழி. தோல்வியில் துவண்டுவிடாமல் இருந்தால், ஜெயலட்சுமி விரைவில் வீடுதேடி வந்து கதவைத் தட்டுவாள்.

''உன் நகரமான மிதிலை நெருப்புப் பற்றி எரிகிறது!'' என்று ஜனகரிடம் சொன்னார் அவரின் குரு. ''அது கிடக்கட்டும். நீங்கள் அடுத்த பாடத்தை நடத்துங்கள்!'' என்று பதற்றமே இல்லாமல் பதில் சொன்னார் ஜனகர். அவர் ராஜரிஷி அல்லவா?

வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படாத மன நிலையுடன் இருந்தார் ஸ்ரீராமபிரான். மகுடாபிஷேகம் என்று மன்னன் தசரதன் சொன்னபோதும் சரி, கானகம் போ என்று மாதா கைகேயி கட்டளையிட்டபோதும் சரி, ஓவியத்தில் தீட்டிய தாமரை மலர்போல் இருந்தது ஸ்ரீராமனின் வதனம் என்கிறார் கம்பர்.

இயற்கைத் தாமரை வாடிவிடும்; இரவில் நிலவு வந்தால் அதன் மெல்லிய இதழ்கள் மூடிவிடும். ஆனால் சித்திரத் தாமரை ஒருபோதும் வாடுவதில்லை. காலையில் வரும் கதிரவனாலோ மாலையில் வரும் சந்திரனாலோ அது மாற்றம் பெறுவதே இல்லை. சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போன்ற ஸ்ரீராமன் திருமுகத்தை சுந்தரகாண்டத்தில் சீதை நினைத்து நினைத்து உருகுகிறாள்.

உலக வரலாற்றில் எந்த வீரனும் போர்க்களத் தில் எதிரியைப் பார்த்து 'இன்று போய் நாளை வா!’ என்று சொன்னதில்லை. ஸ்ரீராமரால் அதைச் சொல்லமுடிகிறது. ராவணன் சரணடைவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறது அவரது சமநிலை மனம். தன் மனைவியைத் தூக்கிச் சென்றவனை நேருக்கு நேர் பார்க்கும்போதுகூட ஸ்ரீராமனின் மனம் சமநிலை தவறவில்லை.  

''அண்ணா! ஒருவேளை ராவணன் சரணடைந்துவிட்டால் என்ன செய்வது? விபீஷணனை மன்னனாக்குவதாக வாக்களித்திருக்கிறோமே?'' என்று கவலையுடன் கேட்கிறான் லட்சுமணன்.

''அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது அயோத்தி. அதை விபீஷணனுக்குக் கொடுத்து விட்டால் போகிறது!'' என்று சலனமில்லாமல் பதில் வருகிறது ஸ்ரீராமனிடமிருந்து! பற்றற்ற மனச் சமநிலை இருந்தாலன்றி இத்தகைய அற்புதமான பதில் சாத்தியமா?

சுந்தரகாண்டத்தில் துன்பத்தில் துவண்டவள் சீதை. துன்புறுத்தியவர்கள் அரக்கிகள். ''அந்த அரக்கிகளை அழித்துவிடவா?'' என்று உறுமுகிறான் சீதாராம பக்தனான ஆஞ்சநேயன்.  

''பாவம், அவர்களை விட்டுவிடு! உலகில் தவறு செய்யாதவர்கள் யார்?'' என்று அனுமனிடம் சாந்தமாகச் சொல்கிறாள் சீதாதேவி. என்ன ஒரு சமநிலை சீதையின் மனத்தில்? கோபத்தையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் முற்றிலுமாக வென்றுவிட்டாள் அவள். ஸ்ரீராமபிரானின் மனைவியல்லவா? உள்ளச் சமநிலை சீதையிடமும் இருப்பது இயல்புதானே?

கானகத்தில் தவம் செய்துவந்த முனிவர் ஒருவரை நாட்டுக்கு வரும்படி அழைக்கிறான் மன்னன். அவர் மறுத்துவிடுகிறார். அரச கட்டளையை மறுப்பதாவது? மன்னனின் சீற்றம் எல்லை கடக்கிறது. வாளால் அவரை வெட்ட எத்தனித்து, வாளை ஓங்குகிறான். முனிவர் கடகடவெனச் சிரிக்கிறார். துறவிக்கு வேந்தன் துரும்பல்லவா?

மன்னன் திகைக்கிறான். ''மன்னனே! நான் ஆன்ம வடிவானவன். என் உடலை வேண்டுமானால் உன் வாள் வெட்டலாமே தவிர, என் ஆன்மாவை உன்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனெனில், ஆன்மா என்றும் உள்ள நித்திய வஸ்து. அதை வெயில் சுடாது; மழை நனைக்காது; காற்று உலர்த்தாது; உன் வாள் வெட்டாது! எனவே, நீ என்னை வெட்டுவதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?'' என கம்பீரமாக முழங்குகிறார் முனிவர். இத்தகைய ஆன்ம ஞானம் படைத்த உன்னத மகான்கள் ஏராளமான பேர் வாழ்ந்த தேசம் நம் தேசம்.

''தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் கும்பிடுவாய்! அன்னை பராசக்தி அவ்வுரு ஆயினள் அவளைக் கும்பிடுவாய்!'' என்று, 'புலிக்குப் பயப்படாதே’ என பாரதி எனும் கவிச்சிங்கம் பாடியதும் இந்த மனநிலையில்தான். புலி உடலை வேண்டுமானால் தின்னலாமே தவிர, ஆன்மாவைத் தின்ன முடியாது என்பதையும், தனக்கும் புலிக்கும் உள்ளே இருப்பது ஒரே ஆன்மாதான் என்பதையும் உணர்ந்த தத்துவஞானி பாரதி.

அச்சமற்ற சமநிலை மனத்தை அடையப் பழகி விட்டால், இந்திய இளைஞர்கள் இன்னும் எத்தனையோ விஷயங்களைச் சாதிக்க இயலும். பயமோ படபடப்போ இல்லாத சமநிலையான மனம், எண்ணிப் பார்க்கவே இயலாத அபாரமான சக்தி படைத்தது.

'பதறிய காரியம் சிதறிப் போகும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. மனத்தைப் பதறாமல் வைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது வெற்றியின் வழி!  

வெற்றியைக் கண்டு வியக்காத, தோல்வியைக் கண்டு துவளாத அத்தகைய சமநிலை மனத்தை அடைவது எப்படி? பயிற்சிதான் ஒரே வழி! ஓயாத பயிற்சி மூலம் யார் வேண்டுமானாலும் அதை அடைய முடியும்.

முதலில், அத்தகைய சமநிலை மனம்தான் அடையப்பட வேண்டிய உயர்ந்த இலக்கு என்பதை மனத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்பு, தொடர்ந்து நம் மனத்தின் நுண்ணிய உணர்வுகளை நமக்கு நாமே கண்காணிக்க வேண்டும். அதில் பரபரப்போ பதற்றமோ சோர்வோ வருமானால், அதை அதட்டிச் சரிசெய்ய வேண்டும். சைக்கிளில் பாலன்ஸ் தவறி விழாமல் இருக்கப் பல காலம் பழகுகிறோம். அப்படி நன்கு பழகி, சைக்கிள் விடக் கற்றுக்கொண்டு விட்டால், பிறகு ஒருநாளும் நாம் சைக்கிளிலிருந்து பாலன்ஸ் தவறிக் கீழே விழுவதே இல்லை.  

அதுபோல, நம் மனத்தையும் சமநிலையில் இருக்குமாறு பழக்க வேண்டும். தொடர்ந்த கண்காணிப்பு நிறைந்த பயிற்சியின் மூலம் மனத்தை அப்படிப் பழக்கிவிட்டால், இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாத மனநிலையை அடைந்துவிடலாம். பிறகு, வாழ்க்கை முழுவதும் நிம்மதியும் சாந்தியும் நம்முள் குடியிருக்கும். இதை அடைவதும் பெறுவதும்தானே மனித வாழ்வின் லட்சியம்?

No comments:

Post a Comment