Wednesday, December 18, 2013

Karma - வாழ்வின் ரகசியம்:

வாழ்வின் ரகசியம்:

வாழ்வின் ரகசியம் என்ன என்று பார்ப்போம். "வாஸன" எனப்படும் (முன் ஜென்மாவில் நிறைவுறாத ஆசைகள்) சக்தி, ஆசைகள் நிறைவேற சாதகமான சூழ்நிலையை உருவக்கிக் கொண்டு, உலகின் ஓர் தகுந்த இடத்தில், உகந்த உடலுருவத்தை அமைத்துக்கொண்டு உருவாவதுதான் நம் ஜெனன ரகசியம். இப்படி உருவான உடலை, நம் அறிவீனத்தால், நிரந்தரம் எனக் கருதி அதை போஷிப்பித்து, அழகு படுத்தி ஆசாபாச பந்தத்தால் உலகில் கட்டுண்டு நம் சுயநிலை தெரியாமல் அஹம் அனும் பாவத்தை வளர்த்துக்கொண்டு ஸுக துக்கங்களினால் பீடித்து உலகில் தத்தளிக்கிறோம். இது மாயா சக்தியினால் ஆவன. இதிலிருந்து விடுபட்டு நம் சுய உருவை உணருவதுதான் நம் வாழ்க்கை லட்சியமாக அமைய வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலிருந்து எழும் பலனை நாமேதான் அனுபவிக்கவேண்டும். நல்லகாரியம் செய்தால் ஸுகமும், கெடுதல் செய்தால் கஷ்டமும் நேரும் என எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதானே? இப்படி நல்ல காரியம் செய்தாலும், கெடுதல் செய்தாலும் அதன் பலனை நாமே அனுபவிக்க வேண்டும். அதற்காக வாழ்ந்தே தீரும். வாழ்வு என்பது ஸுக துக்கங்களால் உருவாக்கப்பட்ட ஒரு நியதி. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் ஸுக துக்கங்கள் இல்லாமலிருக்க வேண்டும். அதற்குக் கர்மா பண்ணாமல் இருக்க வேண்டும். அதெப்படி முடியும்? கர்மா புரியாமல் இருக்க முடியாது. கர்மாவில் ஈடுபடுவதுதான் வாழ்க்கை. அப்படியானால் ஸுகதுக்கத்திலிருந்து விடுபட்டு நம் சுய உருவை எப்படி உணர முடியும்? இதை அறிந்துகொண்டால் வாழ்வின் ரகசியம் புரிந்துவிடும்.

நாம் இந்த உலகில் பிறந்து, பால்யம், கௌமாரம், யௌவனம், வார்தக்யம் என்ற நாலு நிலைகளை அடைந்து முடிவில் உலகிலிருந்து மறைந்துவிடுகிறோம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அனுபவத்துடன் வாழ்துவருகிறோம். இந்நிலைகளில் நாம் பலவித உடல், மனம் சம்பந்தப்பட்ட அநுபவங்களில் வாழ்துவருகிறோம். இந்த வித்தியாசமான அனுபவங்களுக்கு என்ன காரணம்? நாம் வாழும் வாழ்க்கையின் தரமேதான். நமக்கு வாழ்க்கையில் வரும் சுகதுக்கங்கள் நாம் செய்யும் காரியங்களின் தன்மையை ஒட்டியே நிகழ்கின்றன. ஆதலால் வாழ்க்கையில் நிகழும் அனுபவத்திற்கு நாமே காரணம் எனத் தெரிகிறது. அப்படியானால் நம் வாழ்க்கையை நம்மால் நியந்தரணம் பண்ண முடியுமா என வினா எழலாம். ஆம், நாமே நம் வாழ்க்கைத் தரத்திற்கு வழி வகுத்துக்கொள்கிறோம் எனச் சொன்னால் மிகையாகாது. அப்படியானால் எங்கணம் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்?

வேத சாஸ்த்திர நியதி:

வேத சாஸ்திரங்கள் ஓதும் வாழ்க்கை முறையை மிகத் தெளிவாக பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனை வ்யாஜமாகக்கொண்டு நமக்கு அருளிச் செய்திருக்கிறார்.

"கர்மண்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசனா"

இந்த ஒரு ஸ்லோகத்தால் ஒரு பெரிய ரகசியத்தைத் தந்துள்ளார். கர்மா பண்ணுவதை பட்டுமே உனது கடமையாகக்கொள். அதன் பலனைப்பற்றி சிந்தனை செய்யாதே. ஏனென்றால் கர்மாவின் தரப்படி தகுந்த பலன் தானே அமையும். கர்ம பலனில் கவனம் செலுத்தாமல் அந்தக் கர்ம பலன் என்னைச் சேர்ந்தது எனக்கொள். ஆனால் பிற்பாடு விவரித்திருப்பது ரொம்ப முக்கியம். எப்படிக் கர்மா பண்ண வேண்டும்? என்ன மனநிலை இருக்க வேண்டும்? எபபேர்ப்பட்ட கர்மா பண்ணலாம், ஏது கர்மாக்கள் பண்ணக் கூடாது என விளக்கியுள்ளார். மேற்கூறியபடி வேதம் சொல்லும் "ஸ்த்யம் வத" என்ற மந்திரம் மிக உயர்வான தத்துவத்தை போதிக்கிறது. நான் செய்கிறேன் என நினைக்காமல் கர்மாவைப் பண்ணவேண்டும். அப்படியானால் அதன் விளைவு நம்மை பாதிக்காது. "விதை விதைத்தவன் மரத்திற்கு வெள்ளம் தருவான்" என்ற பழமொழி எல்லோர்க்கும் தெரிந்ததே! நமக்கு வாழ்வளித்த பகவான் நமக்கு வேண்டியதைத் தருவான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். சுய நோக்கத்துடன் கர்மா பண்ணலாகாது. எல்லோர் நலனையும் கருதிக் கர்மா பண்ணவேண்டும். அப்பொழுது அந்தக் கர்மபலன் சுகத்தைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும் அது நம்மைச் சேராது. அதை பகவத் அர்ப்பணமாக நினைக்க வேண்டும். இப்படி சுகதுக்கங்களை ஸமபாவத்துடன் எதிர்கொண்டு காரியத்தை செய்வோமானால், நம் மனம் ஓர் நிலையில் நிற்கும். சஞ்சலமடையாது. மனம் ஒருநிலைப்பட்டால் நம் த்ருஷ்டி உள்னோக்கித் தானே செல்லும். அங்கு நமது சுய உருவம் தெரியும். பிற்பாடு நாம் தவறு செய்ய நேராது. காரணம் நாம் நம்மை அரிந்துகொண்டோமானால், நம் வாழ்வின் ரகசியம் புரிந்துகொண்டோம் எனக் கருத்து. இதைக் "கர்மயோகம்' என அழைக்கிறோம்.

கர்மயோகம்:

இந்த யோகத்தின் அடிப்படைத் தத்துவமானது: நாம் செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அதன் விளைவைப்பற்றிக் கவலை கொள்ளலாகாது. பலன் தானே வரும். இதன் பொருள் என்ன? காரியத்தில் கவனம் செல்லவில்லையானால் அந்தக் காரியம் சரிவரச் செய்ய முடியாது. பலனும் நன்றாக அமையாது. பலனைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டால் காரியம் நன்றாகத் நிகழாது, பலனும் விரோதமாக அமையும். உதாரணமாக ஒரு ரப்பர் பந்தை நேரிலுள்ள சுவரில் எறிவதாக வைத்துக்கொள்வோம். எந்தத் திசையில் எறிகிறோமோ, எந்த வேகத்தில் வீசுகிறோமோ அதே வேகத்துடன் சுவரில் பட்டு எதிர்த் திசையில் திரும்பி வரும் இல்லையா? இதுதான் கர்மபல நியதி. எறிவது நம் கையிலுள்ளது. ஆனால் அது திரும்பி வருவது நம் கையில் இல்லை. அது ஒரு இயற்கை நியதிக்குட்பட்டுத் தானாகவே நிகழும். நாம் அந்தப் பந்து எங்கு வந்து விழ வேண்டும், எத்துனை வேகத்தில் திரும்பிவர வேணடும் என முதலில் தீர்மானித்து அதற்கேர்ப்பப் பந்தை எறிவதில் கவனம் வைக்க வேண்டுமே தவிர அது எப்படித் திரும்பிவரும் என கவலை கொள்ளலாகாது. பலனில் கவனம் சென்றால் நாம் செய்யப்போகும் கிரியை சரிவர அமையாது. பந்து நம் கையில் இருக்குமட்டும் நம்மால் அதை உபயோகிக்கும் தரம்பற்றித் தீர்மானிக்கமுடியும். அது நம் கையிலிருந்து சென்றுவிட்டால் அதன் போக்கைப் பிறகு நம்மால் நிர்ணயிக்க முடியாது. ஆதலால் அதன் பலனைப் பற்றி கவலைப்படுவதில் என்ன கிடைக்கும்? இதுதான் கர்மயோகத்தின் மூல தத்துவம். கர்மம் செய்யாமல் இருக்க முடியாது. கர்மம்தான் வாழ்வின் அடிப்படைத் தத்துவம். அதை நிஷ்காம்யமாகச் செய்வோமாகில் நற்பலன் நிச்சயம்.

No comments:

Post a Comment