அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!
ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.
அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.
இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.
ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.
வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.
இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.
வைக்கோல்போராய் இருக்காதீர்கள்!
வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.
பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை.
அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.
அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே. கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை.
அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள். 'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.
கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா? இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.
Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே. ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப் பாராட்டலாம். அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.
அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும். மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும்.
அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது. உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள். அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.
எதற்கும் தயாராக இருங்கள்
'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில் நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?
இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.
எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?
தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?
எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.
எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும். அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனத்துடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.
முடியாதது முயலாதது மட்டுமே
ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.
அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.
ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.
இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.
அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை.
அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.
அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.
ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.
முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.
எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.
எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.
'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
விதியா? மதியா?
ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".
ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"
கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.
ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"
அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"
ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"
அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.
விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.
சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.
குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.
விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.
எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.
No comments:
Post a Comment